Published:Updated:

"பதவி வெறி, சர்வாதிகாரம்; எடப்பாடி கூடிய சீக்கிரம் அரசியல் வனவாசம் செல்வார்!" - வைத்திலிங்கம் தாக்கு

வைத்திலிங்கம்

``எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து போய் முதலமைச்சர் பதவி வாங்கி சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர்." - வைத்திலிங்கம்

"பதவி வெறி, சர்வாதிகாரம்; எடப்பாடி கூடிய சீக்கிரம் அரசியல் வனவாசம் செல்வார்!" - வைத்திலிங்கம் தாக்கு

``எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து போய் முதலமைச்சர் பதவி வாங்கி சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர்." - வைத்திலிங்கம்

Published:Updated:
வைத்திலிங்கம்

ஓ.பி.எஸ் தரப்பு ஆதரவாளரும், முன்னாள் அ.தி.மு.க அமைச்சருமான வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி விரைவில் அரசியல் வனவாசம் செல்வார் என்றும், அரசியல் அனாதையாகிவிடுவார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

சென்னையில் இன்று பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஓ.பி.எஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய வைத்திலிங்கம், ``கண்ணதாசன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை கடுமையாக விமர்சிப்பார். அப்படியிருந்தும் இக்கட்டான நேரத்தில் அவரிடம் ஆலோசனை கேட்பாராம் கருணாநிதி. ஒருமுறை, `எம்.ஜி.ஆர் கணக்கு கேட்கிறார், அவரை தி.மு.க-விலிருந்து நீக்கி விடலாம்' என்று பார்க்கிறேன் என கண்ணதாசனிடம் கருணாநிதி கேட்டிருக்கிறார். அப்போது, `கிளை கழகத்திலிருந்து கணக்கு கேட்டிருக்கிறேன், வந்தவுடன் நான் கணக்குகளை சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லுங்கள், ஆறு மாதம் ஒரு வருடம் ஆகிவிடும் பார்த்துக் கொள்ளலாம்' என்று கண்ணதாசன் சொன்னாராம்.

பண்ருட்டி ராமச்சந்திரன் - ஓ.பி.எஸ் - வைத்திலிங்கம்
பண்ருட்டி ராமச்சந்திரன் - ஓ.பி.எஸ் - வைத்திலிங்கம்

ஆனால் கலைஞர், கண்ணதாசனின் யோசனையை கேட்காமல் அவரை கட்சியிலிருந்து நீக்கினார். பத்தாண்டு காலம் அசைக்க முடியாத ஆட்சியை எம்.ஜி.ஆர் கொடுத்தார். 15 ஆண்டுக்காலம் அரசியல் வனவாசம் சென்றார் கருணாநிதி. இதை எதற்கு சொல்கிறேன் என்றால், அவசரப்பட்டு பதவி ஆசை பிடித்து யார் ஒருவர் தவறாக நடந்தார்களோ அவர்கள் அரசியல் வனவாசம் போய் விடுவார்கள். அப்படி கூடிய சீக்கிரத்தில் அரசியல் வனவாசம் போக இருக்கின்றார் எடப்பாடி பழனிசாமி. தவழ்ந்து போய் முதலமைச்சர் பதவி வாங்கி சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர் அவர். நான்காண்டுகாலம் இருக்க இவர் செய்த அட்டூழியங்களை, அவமானங்களை தாங்கிக் கொண்டு இந்த ஆட்சியையும் கட்சியையும் கட்டிக் காத்தவர் ஓ.பி.எஸ். அவரை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த துடிக்கின்ற ஒரு சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சட்டத்தை தெரிந்து தன்னுடைய அதிகாரத்தால், பண பலத்தால் எதையும் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைக்கின்ற பதவி வெறி பிடித்த ஒரு மனிதர்தான் இன்றைக்கு இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கின்றார். இன்றைக்கு அவரிடம் இருப்பவர்கள் அம்மா இல்லாத காலத்தில் எவ்வளவு தவறுகள் செய்ய முடியுமோ அவ்வளவு தவறுகள் செய்தவர்கள். நிச்சயமாக சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி தனிமரமாகி அரசியல் அனாதையாகிவிடுவார். நிச்சயமாக தர்மம் நம் பக்கம்" என்றார்.