Published:Updated:

பி.ஜே.பி கூட்டணி முடிவைத் தன்னிச்சையாக அறிவித்தாரா ஓ.பி.எஸ்? - அ.தி.மு.க-வில் அடுத்த சர்ச்சை

இ.பி.எஸ் - அமித் ஷா - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - அமித் ஷா - ஓ.பி.எஸ்

எந்த முக்கிய முடிவானாலும், வழிகாட்டுதல் குழுவினர்தான் எடுக்கவேண்டும் என்று ஓ.பி.எஸ்., எடப்பாடி கோஷ்டியினர் முடிவு செய்திருந்த நிலையில், அந்த குழுவினரிடம் கூட பி.ஜே.பி-யுடன் கூட்டணி அறிவிப்பு பற்றி ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தவில்லை என்கிறார்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட அரசு விழாவில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பி.ஜே.பி-யுடனான கூட்டணி குறித்து ஓ.பி.எஸ் அறிவித்தார். `விழா மேடையில் கோஷ்டி பூசல் வெடித்துவிடக்கூடாது என்பதால், ஓ.பி.எஸ் அறிவித்ததை எடப்பாடி வழிமொழிய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இவருக்கு பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேர்வதில் விருப்பமில்லை. பெரும்பாலான அமைச்சர்களும் இதே மனநிலையில்தான் இருந்தனர்' என்று கொதிக்கிறார்கள் எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள். ஓ.பி.எஸ் கூட்டணி அறிவிப்பு பற்றித்தான் அ.தி.மு.க பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இ.பி.எஸ் - அமித் ஷா - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - அமித் ஷா - ஓ.பி.எஸ்

சென்னை வருகைக்கு முன் அமித் ஷா, மத்திய உளவுத்துறையின் ரிப்போர்ட்டைப் படித்துவிட்டுத்தான் விமானம் ஏறியிருக்கிறார். அ.தி.மு.க-வில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று விசாரித்தபோது, அவருக்கு வந்த ரிப்போர்ட்டில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். பெயரே இருந்தது என்கிறார்கள். அடுத்துதான், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெயர் இருந்திருக்கிறது. `ஆட்சி அதிகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதால், கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரிக்கிறார்கள். இதுவும் தற்காலிகம்தான். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால். எடப்பாடிக்கு மவுசு குறைந்துவிடும். எனவே இவரை இப்போதே தள்ளிவைக்கலாம்’ என்கிற முடிவுக்கு பி.ஜே.பி-யின் மேலிடத்தலைவர்கள் வந்ததாகச் சொல்கிறார்கள்.

அமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை... நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை!

இதற்கிடையில், `பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தால், சரிபட்டு வராது’ என்கிற ரீதியில் எடப்பாடி பலரிடமும் பேசி வந்த விஷயமும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எட்டியிருக்கிறது. ஓ.பி.எஸ் மட்டும் ஏதும் பேசவில்லை. மௌனமாக இருந்தார். இவர்தான் பி.ஜே.பி-க்கு சரிபட்டுவருவார் என்று நினைத்து ஓ.பி.எஸ்ஸைக் கையில் எடுத்ததாகச் சொல்கிறார்கள். பத்து நாள்களுக்கு முன்பு, ஓ.பி.எஸ்ஸை டெல்லி பி.ஜே.பி தலைவர்கள் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள். `பி.ஜே.பி-யுடனான கூட்டணி அறிவிப்பை விழா மேடையில் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். மற்றதை நாங்கள் பார்த்துகொள்கிறோம்' என்கிற ரீதியில் பேச, ஓ.கே. சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். கிட்டதட்ட சீட் பங்கீடு குறித்துகூட பேசிமுடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மூலம் மாநில அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகிய இருவரும் டெல்லி பி.ஜே.பி. தலைவர்களுடன் தொடர்பில் இருந்துவந்தனர். இந்த லிங்க் தற்போது கட் ஆகிவிட்டது. அண்மையில் தமிழக பொறுப்பாளராக சி.டி. ரவி-யை பி.ஜே.பி. மேலிடம் நியமித்துள்ளது. இவர், ஓ.பி.எஸ். தரப்பினருடன் மட்டமே தொடர்பில் மட்டுமே இருக்கிறார். ரவியும், பி.ஜே.பி-யின் தேசிய அமைப்புத் தலைவர் பி.எல். சந்தோஷும் எடுக்கும் அரசியல் முடிவுகள்தான் தற்போது அரங்கேறி வருகிறது. இந்த இருவரும் ஒ.பி.எஸ். தரப்பினருடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள்.

எந்த முக்கிய முடிவானாலும், வழிகாட்டுதல் குழுவினர்தான் எடுக்கவேண்டும் என்று ஓ.பி.எஸ்., எடப்பாடி கோஷ்டியினர் முடிவு செய்திருந்த நிலையில், அந்த குழுவினரிடம் கூட பி.ஜே.பி-யுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவது பற்றி ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்தவில்லை என்கிறார்கள். கட்சியின் சீனியர் அமைச்சர்களிடமும் அவர் பேசியதாகத் தெரியவில்லை. ``ரெய்டு பீதியைத் தவிர்க்க தனிச்சையாக ஓ.பி.எஸ். அறிவித்ததை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எந்தத் தாக்குதல் வந்தாலும் சந்திக்கலாம் என்கிற மூடில்தான் எடப்பாடி இருந்தார். மறைமுகமாக பி.ஜே.பி-க்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தார். தேர்தலிலும் அதை பாணியைச் செய்யக் காத்திருந்தார். அதை விரும்பாத பி.ஜே.பி, உள்ளடி வேலையைச் செய்துவிட்டது. அதற்கு ஓ.பி.எஸ். துணை போய்விட்டார். பொறுத்திருந்து பாருங்கள்’’ என்று எடப்பாடி கோஷ்டியினர் கோபத்தில் இருக்கிறார்கள். ஆனால், எடப்பாடியோ, ஓ.பி.எஸ்ஸோ பி.ஜே.பி-யை எதிர்க்கும் நிலையில் இல்லை. பூச்சாண்டி காட்டியே தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டது பி.ஜே.பி. தமிழகத்தில் பி.ஜே.பி-யின் அடுத்த அஜெண்டா தி.மு.க-வைப் பலவீனப்படுத்துவதே என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன நடக்கிறது என்பதை..!

அடுத்த கட்டுரைக்கு