Published:Updated:

அமித் ஷா கறார்; அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க?! - 3 மணி நேரப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

அமித் ஷா, எடப்பாடி, ஓ.பி.எஸ்

நேற்றிரவு அ.தி.மு.க-பா.ஜ.க தொகுதி பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தார் அமித் ஷா. அங்கே ஏற்கெனவே அ.தி.மு.க சார்பில் வந்திருந்த முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் அவரை வரவேற்றனர்.

அமித் ஷா கறார்; அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க?! - 3 மணி நேரப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

நேற்றிரவு அ.தி.மு.க-பா.ஜ.க தொகுதி பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தார் அமித் ஷா. அங்கே ஏற்கெனவே அ.தி.மு.க சார்பில் வந்திருந்த முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் அவரை வரவேற்றனர்.

Published:Updated:
அமித் ஷா, எடப்பாடி, ஓ.பி.எஸ்
``திரும்பவும் உங்க கவர்மென்ட் வரணும்னு நினைக்கிறீங்களா இல்லை கௌரவம்தான் முக்கியம்னு நினைக்கிறீங்களா... தி.மு.க ஆட்சிக்கு வந்தா என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்... சொல்றதைக் கேளுங்க. நீங்க நேரடியா அ.ம.மு.க-வோட சேர வேண்டாம். அவங்க எங்ககூட சேர்ந்த மாதிரி இருக்கட்டும். தமிழ்நாட்டுக்கு இது புதுசா என்ன?''

நேற்று சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரிடமும் இப்படிக் கறாராகக் கடுகடுத்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான அடுத்தநாள் காலை, தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உட்பட பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரையும் தனித்தனியே சந்தித்துப் பேசினர். அப்போது, தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுகையில் 15 தொகுதிகள் வரை தருவதாக அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பா.ஜ.க தரப்பில் அதற்கு ஒப்புக்கொள்ளப்படவில்லை. தொடர்ந்து பா.ஜ.க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

அதைத் தொடர்ந்துதான், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை அமித் ஷா தலைமையில் நடத்திக்கொள்ளலாம் என ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் பங்கேற்றார். தொடர்ந்து நேற்றிரவு தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்னையிலுள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தார். அங்கே ஏற்கெனவே வந்து காத்திருந்த, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் அவரை வரவேற்றனர். தொடர்ந்து தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கியது.

இரவு சுமார் 10 மணியளவில் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தையை விரைவில் முடித்துவிட்டு அமித் ஷா தனி விமானத்தில் டெல்லி செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களில், அ.தி.மு.க தரப்பில் 15 தொகுதிவரை பா.ஜ.கவுக்கு கொடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். `எந்தெந்தத் தொகுதிகள் என்பதை உங்க கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்கிறோம்’ எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், ஏற்கெனவே எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்தும் பா.ஜ.க - அ.தி.மு.க தலைவர்கள் இடையே மாறுபட்ட கருத்தே இருந்துவந்திருக்கிறது. அந்தத் தகவலும் அமித் ஷா காதுக்கு ஏற்கெனவே பா.ஜ.க தலைவர்களின் மூலம் போயிருக்கிறது. அதனால் உடனடியாகப் பேசி முடிக்க முடியாது என முடிவெடுத்த அமித் ஷா, உடனடியாக தனது உதவியாளரை அழைத்து, ``பேச்சுவார்த்தை முடிவதற்கு தாமதம் ஆகலாம். அதனால் இன்று டெல்லி திரும்பும் பயணத்திட்டத்தை நாளைக்கு மாற்றி அமையுங்கள்” எனக் கூறியிருக்கிறார்.

அமித் ஷா
அமித் ஷா

அதன் பிறகு மிகவும் நிதானமாகப் பேசத் தொடங்கிய அமித் ஷா ``தென் மாவட்டங்களில் சசிகலாவின் தயவு நமக்குத் தேவை. அ.ம.மு.க-வை நம்மோட இணைத்துக்கொண்டால் நமக்குத்தான் நல்லது. நான் டேட்டாவோடுதான் வந்திருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 22 தொகுதி இடைத் தேர்தல்களில் இருவரும் இணைந்து நின்றிருந்தால் இன்னும் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கலாம். இந்த நேரத்தில் அவர்களைச் சேர்க்காமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஆனால், உங்கள் தனிப்பட்ட கௌரவத்துக்காக தி.மு.க-வை அரியணையில் அமர்த்தி விடாதீர்கள். ஒவ்வொருவர் மேலுள்ள புகார்களைவைத்து தனித்தனியாக வழக்கு போட்டு, அலைக்கழித்து கட்சியையே காணாமல் ஆக்கிவிடுவார்கள். நான் ஒன்றும் கட்சியை இணைக்கச் சொல்லவில்லை. கூட்டணியில், அதுவும் எங்களுடன்தான் அவர்கள் சேரப்போகிறார்கள். அவர்களிடம் நான் பேசிவிட்டேன்.

எங்களுக்கு ஐம்பது தொகுதிகள் ஒதுக்கிவிடுங்கள். நாங்கள் அவர்களுக்கு இருபது தொகுதிகள் ஒதுக்கிடுவிடுகிறோம்'' என்று சொல்ல, சில நேரம் அமைதி காத்த எடப்பாடி பழனிசாமி ``இல்லை.... அவர்களைக் கூட்டணியில் இணைத்தால் சரியாக வராது. நீங்கள் சொல்வது ஒரு வருடத்துக்கு முன்பாக உள்ள நிலவரம். ஆனால், இப்போது நிலைமையே மாறிவிட்டது. நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள், கடன் தள்ளுபடி அறிவிப்புகளால் மக்கள் எங்கள் மீது நல்ல அபிப்ராயத்தில் இருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையிலும் பெண்களைக் கவரும் வகையில் பல திட்டங்களைக் கொண்டு வரவிருக்கிறோம்'' எனச் சொல்ல பதிலேதும் சொல்லாமல் கிளம்பிச் சென்றிருக்கிறார் அமித் ஷா. ஆனால், பா.ஜ.க-வின் கோரிக்கையை முற்றிலுமாக புறம்தள்ள முடியாது என்று யோசித்த முதல்வர், அ.தி.மு.க தலைவர்களை அழைத்து இன்று தலைமைக் கழகத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

இந்தநிலையில், அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம்:

``அமித் ஷா சொல்வதும் ஓரளவுக்குச் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் கேட்கும் ஐம்பது தொகுதிகளுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. வேண்டுமானால், 35 தொகுதிகள் ஒதுக்கப்படலாம். அதில் அவர்களுக்கு 20 போக, 15 தொகுதியை அ.ம.மு.க-வுக்கு ஒதுக்கிக்கொள்ளட்டும். ஆனால், அ.ம.மு.க வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் நிற்கக் கூடாது. இரட்டை இலை அல்லது தாமரையில்தான் நிற்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் விதிப்போம். அ.ம.மு.க எங்கள் கூட்டணிக்கு வந்தால் நிச்சயமாக தென் மாவட்ட முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் எங்களுக்குக் கிடைக்கும். தேவையில்லாமல், பிரிந்து நின்று தி.மு.க ஏன் ஜெயிக்கவேண்டும்?'' என்பதே அ.தி.மு.க வட்டாரத்தின் எண்ண ஓட்டமாக இருக்கிறது.

நடக்கிற விஷயங்களை கவனித்தால், அ.தி.மு.க அணிக்குள் அ.ம.மு.க வருவதற்கு விரைவில் அ.தி.மு.க தலைமை பச்சைக்கொடி காட்டலாம் என்றே தெரிகிறது.