சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில், சென்னை வானகரத்தில், 'ஹரிவராசனம்' பாடல் இயற்றப்பட்ட 100-வது ஆண்டை குறிக்கும் வகையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, ``சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பாரதம். மரத்தின் இலைகள், கிளைகளைப் போல, நம்முடைய எண்ணங்கள், செயல்பாடுகள் மற்றும் கொள்கைகள் வேறுபடலாம். ஆனால், வேற்றுமையில் ஒற்றுமை போன்று, மரத்தின் வேர் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது. அதுவே கடவுள். மேலும், நமது இந்திய அரசியலமைப்பு சட்டமானது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. ரிஷிகளாலும், முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளும், தத்துவங்களும் சனாதன தர்மத்திலிருந்து வந்தவையே. இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவதைப் போல ஆன்மிகத்திலும் வளர்வது முக்கியம். மேலும், வல்லரசு நாடக நாம் வளர்ந்துவரும் நிலையில், இங்கு தலைமைப் பதவியில் இருப்பவர்கள் ஆன்மிகத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆளுநரின் இத்தகையப் பேச்சுக்கு அரசியல் அரங்கில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ``சனாதனத்துக்கு ஆதரவாக ஆளுநர் பேசலாம்... அனால், அவர் ஆளுநர் பதவியினை ராஜினாமா செய்துவிட்டு, பேச வேண்டும். ராஜினாமா செய்துவிட்டு அவர் ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாகவும் பேசலாம், பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளராக அல்லது கொள்கைப்பரப்பு செயலாளராகக்கூட செயல்படலாம்" என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.