Election bannerElection banner
Published:Updated:

ஆக்ஸிஜன் அரசியல்... என்னதான் நடக்கிறது?

ஆக்ஸிஜன் உற்பத்தித் தொழிற்சாலை
ஆக்ஸிஜன் உற்பத்தித் தொழிற்சாலை ( Twitter )

கொரோனா பரவலைவிட ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் தற்போது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதைப் போக்க மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?

``கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டை நிச்சயமாக அரசு பூர்த்திசெய்யும்” என்று நாட்டு மக்களுக்கான தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடியே நாடு முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் 22 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இவர்களில் பலருக்கும் கொரோனா தொற்றின் தீவிரத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். இதனால் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில், ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது, தொழிற்சாலை தேவைக்கு ஆக்ஸிஜன் விற்பனையைத் தடை செய்வது எனப் பல்வேறு நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. மகாராஷ்டிராவிலுள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு மையத்தில் ஒரு நாளைக்கு 150 - 200 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 500 - 600-ஆக உயர்த்தவும் அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு ஆக்ஸிஜனின் தேவை நாடு முழுவதும் அதிகரித்துக் காணப்படுகிறது.

மோடி
மோடி

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை தமிழக அரசைக் கேட்காமலேயே தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ``ஆக்ஸிஜனைப் பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்தது தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை” எனத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

Live Updates: ``லாக்டெளன் என்பது மாநிலங்களின் கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும்!” - பிரதமர் மோடி

ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசு தவறுகிறதா, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமாரிடம் பேசினோம்.

``கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் வந்துவிட்டது. அதைக் கருத்தில்கொண்டு முதல் அலை வந்தபோது எடுத்த மருத்துவரீதியிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தமுறை நாம் முன்பே எடுத்திருக்க வேண்டும். இல்லையெனில், மகாராஷ்டிராவில் வந்தபோதாவது நாம் விழித்துக்கொண்டிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்குவதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. முதல் அலைக்கும், இரண்டாவது அலைக்கும் நமக்கு கிட்டத்தட்ட ஆறு மாத காலம் இடைவெளி இருந்தது. அதைப் பயன்படுத்தியாவது நமக்குத் தேவையான மருத்துவ வசதிகளை மேம்படுத்தியிருக்கலாம். ஆனால் மத்திய அரசு, தேர்தல், பிற கட்சியினரை விலைக்கு வாங்குவதை முதன்மையாக எடுத்துக்கொண்டு கொரோனா பரவலைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

செந்தில்குமார்
செந்தில்குமார்

தற்போது அதற்கான விளைவுகளை மக்கள் அனுபவித்துவருகிறார்கள். சொந்தமாகவும் எந்த முடிவையும் எடுப்பதில்லை. பிரச்னைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கும் மெத்தனமாக பதிலளிக்கும் மனநிலையில்தான் மத்திய அரசு இருக்கிறது. அதுமட்டுமல்ல, செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி பேசியதில்கூட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஒரு வார்த்தைகூட இல்லை. இப்படி நிர்வாகத்தை முறையாகச் செயல்படுத்தாததில் மத்திய அரசு அடைந்த தோல்விதான் தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பிரச்னையாக வெடித்துள்ளது.

முதல் அலையில் மாஸ்க், பிபிடி கிட் ஆகியவைதான் தேவையாக இருந்தன. அதைச் சரிசெய்ததுபோல இப்போது ஆக்ஸிஜன் தேவையையும் சரிசெய்திருக்க வேண்டும். தமிழகத்தில் கிட்டத்தட்ட 70,000-க்கும் மேல் பாதிக்கப்பட்டோர் இருக்கும்போது 30,000 பேர் பாதிக்கப்பட்ட தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு இங்கிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரை அனுப்பிவைத்திருப்பதெல்லாம் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் வெளிநாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்திருக்கலாம். அதற்கு பிரதமர் நிவாரண நிதியைப் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது பிரதமர் நிவாரண நிதிக்காக நாடாளுமன்றத் தொகுதிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கிய தொகையையாவது அந்தந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கொடுத்திருக்கலாம். ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கோடி ரூபாய் என்றால் நிச்சயம் அந்த நாடாளுமன்ற உறுப்பினரால் அங்கிருக்கும் மருத்துவமனைகளின் தேவைகளை முறையாக தீர்த்துவைத்திருக்க முடியும். எல்லாவற்றிலும் சர்வாதிகாரப் போக்கு, எல்லாவற்றிலும் ஆதாயம் பார்க்கும் மத்திய அரசு மக்களின் உயிர் சார்ந்த பிரச்னையிலும் அப்படியே நடந்துகொள்கிறது.

 ஆக்ஸிஜன் பாதிப்பு
ஆக்ஸிஜன் பாதிப்பு

மாநில உரிமைக்கு உட்பட்ட சுகாதாரத்துறையை மத்திய அரசு கையில் எடுத்துக்கொண்டதால், கொரோனா காலகட்டத்தில் மாநில அரசுகளால் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருக்கிற மாநிலங்களிலாவது முடிவுகளை அந்தந்த மாநிலங்களே எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தாலாவது இவ்வளவு பெரிய இழப்புகளை மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு மத்திய அரசின் மெத்தனப் போக்கைத் தவிர வேறு எதையும் காரணமாகச் சொல்ல முடியாது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இனியாவது மத்திய அரசு செயல்பட வேண்டும்” என்றார்.

ஆந்திரா, தெலங்கானாவுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன்! - தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்வதென்ன?

இது குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``ஆக்ஸிஜன் பற்றாக்குறை பிரச்னை மாநில அரசுகளின் விவகாரம். ஒரு மாநிலத்தின் தேவை, அந்தந்த மாநிலங்களில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து பூர்த்தி செய்துகொள்ளப்படும். தற்போது ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு தலையிட்டு ஏற்றுமதிக்குத் தடைவிதித்துள்ளது. மேலும், மத்திய அரசு மாநிலங்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதையும் உறுதி செய்யத் தொடங்கியுள்ளது. மருத்துவ உபகரணங்களின் தேவையில் பற்றாக்குறை ஏற்படும்போது அதற்கு மத்திய அரசைக் குறை கூறுவதோ, பொறுப்பாக்குவதோ மிகவும் தரம் தாழ்ந்த அரசியல். மத்திய அரசு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களைத் தொடர்புகொண்டு எங்கெல்லாம் தேவை அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் ஆக்சிஜன் கிடைப்பதற்கு வழிவகை செய்துகொண்டிருக்கிறது. ‘இனி ஒரு நோயாளிகூட ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்தார் என்ற செய்தி வரக் கூடாது’ என்ற நிலையை உருவாக்குவோம் எனப் பிரதமர் மோடி நேற்றைய உரையின்போது உறுதி அளித்திருக்கிறார். அதைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

ஆக்ஸிஜன் மட்டுமல்ல, தடுப்பூசித் தட்டுப்பாடுகள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும். தேவையற்ற வதந்திகள் மூலம் மக்களை அச்சமூட்டும் செயலை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். இப்படியான சிக்கல்கள் வரும்போது மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படும்” என விளக்கம் அளித்தார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் சூழலில், ஆக்சிஜன் பற்றாக்குறை பல மாநிலங்களில் கொரோனா பரவலைவிட மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதனால், கொரோனா பரவலைத் தடுப்பதா, ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தீர்ப்பதா என மத்திய, மாநில அரசுகள் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கின்றன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் பிரச்னைக்குச் சரியான தீர்வுகாண வேண்டும் என்பதுதான் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு