Published:Updated:

கொரோனா 3-ம் அலையை சமாளிக்க பெல் நிறுவன ஆக்ஸிஜன் பயன்படும் - அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள்

கே.என் நேரு
கே.என் நேரு

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்குவது குறித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அந்நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பெரும்பாலானோருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியிலுள்ள மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன. இதேபோல், தமிழகம் உட்படப் பல மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

கே.என் நேரு
கே.என் நேரு

திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம், கடந்த 1980-ம் ஆண்டு நிறுவனத்தின் சொந்தத் தேவைக்காகவும், மருத்துவமனை தேவைக்காகவும் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்காக பிளான்ட் நிறுவியது. 1999-ம் ஆண்டு வரை ஆக்ஸிஜன் தயாரித்து வழங்கப்பட்டுவந்த நிலையில், அந்த பிளான்ட் தொடர்ந்து செயல்பட இயந்திரங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்கள் கிடைக்காததால் நிறுத்தப்பட்டது.

ஆக்ஸிஜன் பிளான்ட்டில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு ஆகும் செலவைவிட வெளியில் வாங்குவது குறைவாக இருப்பதால், அந்த பிளான்ட் மூடப்பட்டது. இந்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் பிளான்ட்டை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தி.மு.க-வினர் பெல் நிறுவன அதிகாரிகளிடம் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

அதிகாரிகள் சந்திப்பு
அதிகாரிகள் சந்திப்பு

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய திருச்சி பெல் நிர்வாக இயக்குநர் முரளி, ``ஏற்கெனவே பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டுவந்தது. ஆனால் தற்போது அந்த பிளான்ட் மூலம் மீண்டும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய இயலாது. அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வேண்டுகோளின்படி புதிய பிளான்ட் அமைப்பதற்கும் 3-லிருந்து 4 மாத காலமாகும். அடுத்து வரும் கோவிட் மூன்றாவது அலை தடுக்க ஆக்ஸிஜன் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு அரசுடன் ஆலோசனை நடத்தி அதற்கான பணிகளைத் துவங்க விரைவில் முடிவு எடுக்கப்படும்" எனக் கூறினார்.

அதனைத்தொடர்ந்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், ``எவ்வளவு சீக்கிரமாக புதிய யூனிட் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியுமோ அதனைச் செயல்படுத்த முயற்சி எடுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். பராமரிப்புப் பணிகள் சரியாக மேற்கொள்ளாத காரணத்தால், கடந்த 2016-ம் ஆண்டு முதல் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கே, எட்டு மணி நேரத்தில், 1,000 கியூபிக் மீட்டர், அதாவது 150 சிலிண்டர்கள் (உருளைகள்) ஆக்ஸிஜன் ஆக்கும் திறன் இருக்கிறது.

அதிகாரிகளை சந்தித்த கே.என் நேரு
அதிகாரிகளை சந்தித்த கே.என் நேரு

நாள் ஒன்றுக்குக் குறைந்தது 400 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உருவாக்க முடியும். மத்திய அரசு உத்தரவிட்டால் பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்ஸிஜன் பிளான்ட் புதிதாகத் தொடங்கப்பட்டு, அரசுக்குத் தேவையான ஆக்ஸிஜன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஆக்ஸிஜன் பிரச்னையால் இனி ஒரு உயிர்கூட போகக்கூடாது. சீக்கிரம் செயல்படுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இந்த பிளான்ட் தொடங்கப்பட்டல் கொரோனா மூன்றாம் அலைகளைச் சமாளிக்க ஏதுவாக இருக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு