Published:Updated:

`கைதுக்குத் தடை இல்லை; தலைமை நீதிபதி முடிவெடுப்பார்!' - தொடர் சிக்கலில் ப.சிதம்பரம்

பிரேம் குமார் எஸ்.கே.

தற்போது அயோத்தி வழக்கு விசாரணை நடப்பதால் உடனடியாக விசாரிக்க முடியாது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

P Chidambaram
P Chidambaram ( File Photo )

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிதம்பரமும் இடம்பெற்றிருப்பதால், அவரும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

p.chidambaram, karthi
p.chidambaram, karthi

அதேபோல, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கையும் கருத்தில்கொண்டு, இரண்டு வழக்கிலும் தன்னைக் கைது செய்யக் கூடாது என்று டெல்லி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார் சிதம்பரம். ஒவ்வொரு முறையும் இந்த வழக்கில் கைது செய்வதற்கான தடையை நீட்டித்துக் கொண்டேவந்தார் அவர். இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் ப.சிதம்பரம். அவரது முன்ஜாமீனுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரைக் கைதுசெய்து விசாரிக்கவேண்டிய கட்டாயம் இருப்பதாக, இரு அமைப்புகளும் நீதிமன்றத்தில் முறையிட்டன.

அதைத் தொடர்ந்து, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் தாக்கல் செய்தார். முன்ஜாமீன் மனுவை நீதிபதி சுனில் கவுர் தள்ளுபடி செய்தார். வழக்கின் தீவிரத்தன்மை சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் ரத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. முன்ஜாமீன் கிடைக்காததால் சிதம்பரம் எந்தநேரமும் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் பரவியது.

P Chidambaram Delhi house
P Chidambaram Delhi house

இந்தநிலையில், சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், சிதம்பரம் ஆஜராகாததால் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருக்கும் அவரது இல்லத்துக்குச் சென்றனர், ஆனால், அவர் அங்கு இல்லாத காரணத்தால் திரும்பிவிட்டனர். அதன் பின்னர் ஈ-மெயிலிலும் சம்மன் அனுப்பினர். அதன் பின்னர் 2-வது முறையாக சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அப்போது அவர் வீட்டில் இல்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு வழங்க வந்த நோட்டீஸை அவரது வீட்டில் ஒட்டிவிட்டுச் சென்றனர்.

இன்று காலையிலும் இருமுறை அதிகாரிகள் சிதம்பரம் வீட்டுக்கு வந்தனர், ஆனால், அவர் அங்கு இல்லாத காரணத்தால் திரும்பினர். சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளனர். இந்தநிலையில், டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. சிதம்பரத்துக்காக மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ஆஜராகி வாதிட்டார்.

supreme court
supreme court

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரமணா, இந்த மேல்முறையீடு மனு தொடர்பாக தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்றும் அதுவரையிலும் சிதம்பரத்தைக் கைது செய்யத் தடை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். இதன் காரணமாக சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதில் தொடங்கிய சிக்கல் தற்போதும் தொடர்கிறது. தலைமை நீதிபதி இந்த மனுவை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும்வரை சிதம்பரத்தைக் கைது செய்யத் தடை இல்லை என்பதால் காங்கிரஸ் தரப்பினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சிதம்பரத்தின் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வழக்கறிஞர்கள் வைத்த கோரிக்கையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துவிட்டார். `தற்போது அயோத்தி வழக்கு விசாரணை நடப்பதால் உடனடியாக விசாரிக்க முடியாது' என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சிதம்பரம் நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாத காரணத்தால், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதி லுக்-அவுட் நோட்டீசும் அனுப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் விமானம் மூலம் வெளிநாடு செல்வதை தடுக்க முடியும்.

`உடனே கைதுசெய்யாதது ஏன்?' - ப.சிதம்பரம் விவகாரத்தில் கடுகடுத்த அமித் ஷா

இதற்கிடையே, முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்ற உடனேயே சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டியதுதானே.. ஏன் இந்த தாமதம் என அமித் ஷா அதிகாரிகளை கடிந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.