Published:Updated:

`ஒரே நாளில் நடந்த 6 அதிர்ச்சி சம்பவங்கள்!’ -செய்தியாளர் சந்திப்பில் கண்கலங்கிய ப.சிதம்பரம்

ஜாமீனில் வெளியில் வந்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பிற பிரச்னைகளைப் பற்றிப் பேசியுள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 106 நாள்களுக்குப் பிறகு நேற்று ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். வெளியில் வந்த மறுநாளே (இன்று) நாடாளுமன்ற வாயிலில் காங்கிரஸ் நடத்திய வெங்காய விலை உயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இதன்பிறகு, செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவரித்தார். ``நான் அமைச்சராக இருந்தபோது எனது பதிவுகளும் மனசாட்சியும் முற்றிலும் தெளிவாக இருந்தது. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், வணிக நபர்கள், என்னுடன் பழகிய அதிகாரிகள் மற்றும் என்னைக் கவனித்த பத்திரிகையாளர்கள் அனைவரும் இதை நன்கு அறிந்திருப்பார்கள்.

நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான சூழலில் உள்ளது. பொருளாதாரத்தால் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை இன்னும் பா.ஜ.க அரசால் யூகிக்கக்கூட முடியவில்லை. ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, வரி போன்ற மோசமான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரம் தொடர்பாகத் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். அந்தப் பிரச்னையை அவர் தன் அமைச்சர்களிடம் விட்டுவிட்டார். அரசு பொருளாதார பிரச்னைகளில் ஒன்றன்பின் ஒன்றாகத் தவறு செய்து வருகிறது. நல்லவேளையாக தற்போது நடக்கும் பொருளாதார மந்த நிலையை `காலநிலை மாற்றம்’ என அரசு அழைக்கவில்லை. மக்களையும் நாட்டையும் கடவுள்தான் காக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சியைக் காட்டும் அனைத்துப் புள்ளிவிவரங்களும் வீழ்ந்துள்ளன. தவறான பொருளாதார நடவடிக்கைகளை மூடி மறைக்கவே மத்திய அரசு முயற்சி செய்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு எங்களிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. ஆனால், அவர்கள் அதைக் கேட்கமாட்டார்கள். தற்போது மக்கள் அனுபவித்து வரும் துயரம், அரசு செய்த தவறு. அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

காஷ்மீர்
காஷ்மீர்

நேற்று இரவு 8 மணிக்கு நான் சிறையிலிருந்து வெளியில் வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசித்தேன். அப்போது என் மனம் முதன்முதலாகக் காஷ்மீரில் இருக்கும் 75 லட்சம் மக்களுக்காகத்தான் பிரார்த்தனை செய்தது. குறிப்பாக, எந்தக் காரணமும் இல்லாமல் சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் அரசியல் தலைவர்களை நினைத்து மிகவும் கவலையடைந்தேன்.

வெளிநாடு செல்ல செக்; பேட்டி, அறிக்கைக்கு நோ! - 106 நாள்களுக்குப் பிறகு ஜாமீனில் வருகிறார், ப.சி

சுதந்திரம் என்பது நம்மிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்று. நமது சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்காகப் போராட வேண்டும். சிறையிலிருந்த 106 நாள்களில் நான் இன்னும் அதிக பலமாகிவிட்டேன். இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் அரசு மீது அதிக அச்சம் கொண்டுள்ளன. ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் ஜம்மு - காஷ்மீர் செல்ல விரும்புகிறேன். அதற்கு அரசு என்னை அனுமதிக்க வேண்டும்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

வெங்காயத்தின் விலை அதிகரித்திருக்கும் வேளையில் அதைப் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது அரசின் மனநிலையையே காட்டுகிறது. அவர் வெங்காயம் சாப்பிடமாட்டார் என்றால் வேறு என்ன சாப்பிடுவார். அவகோடா பழம் சாப்பிடுவாரா?" எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகப் பேசினார். அப்போது பாலியல் வன்கொடுமை தொடர்பாகக் கேள்வி கேட்டவுடனேயே மௌனம் காத்துக் கண் கலங்கினார்.

பின்னர் பேசத் தொடங்கிய அவர், “ நேற்று நான் வெளியில் வந்த பிறகு செய்தித்தாள் படித்தேன். அதில் ஆறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இடம் பெற்றிருந்தன. ஒருநாளில் ஒரே செய்தித்தாளில் ஆறு சம்பவங்கள் இடம் பெற்றிருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

இதை நினைக்கும்போது மிகவும் அவமானமாகவும் வெட்கக்கேடாகவும் உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. காவல்துறையினர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சட்டத்தின் மீதான பயம் எங்கே போனது. இது மிக மோசமான விஷயம்” எனக் கூறினார்.

`31-ம் தேதிக்குள் தூக்கில் போடுங்கள்!' - ஹைதராபாத் குற்றவாளிகளுக்கு எதிராகச் சீறிய பெண் எம்.பி-க்கள்