Published:Updated:

தனி அறை; வீட்டு உணவு; படுக்கை வசதி! - அமலாக்கத்துறையின் கஸ்டடியில் ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

சி.பி.ஐ பிடியில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப.சிதம்பரம், தற்போது அமலாக்கத்துறையினரின் கஸ்டடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இதற்கிடையில் அதே ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என அமலாக்கத்துறை சில தினங்களுக்கு முன்பு டெல்லி சிறப்பு நீதிமன்றத்திடம் கேட்டிருந்தது. `அரை மணி நேரம் தருகிறேன் நீதிமன்றத்திலேயே விசாரணை நடத்திக்கொள்ளுங்கள்’ என நீதிபதி கூறினார்.

சிறையில் கடும் அவதி... முகம் வற்றி, உடல் மெலிந்து காணப்படும் ப.சிதம்பரம்!

இதற்கு மறுப்பு தெரிவித்த அமலாக்கத்துறை அதிகாரிகள், தாங்களே திகார் சிறைக்குச் சென்று விசாரணை நடத்துகிறோம் எனக் கூறினர். விசாரணைக்கு ஒப்புதல் தெரிவித்த நீதிபதி தேவைப்பட்டால் சிதம்பரத்தைக் கைது செய்யலாம் என அனுமதி வழங்கினார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

இதன்படி நேற்று முன் தினம் திகார் சிறைக்குச் சென்ற அதிகாரிகள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி, அவரை சிறையில் வைத்தே கைது செய்தனர். இதையடுத்து அவர் நேற்று அமலாக்கத்துறையினரின் கஸ்டடிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அக்டோபர் 24-ம் தேதி வரை சிதம்பரம் அமலாக்கத்துறையினரின் பிடியில் இருப்பார். முன்னதாக சிதம்பரம் திகார் சிறையில் இருக்கும்போது அவருக்குத் தனி அறை ஒதுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஆனால், தற்போது அமலாக்கத்துறையினர் கட்டுப்பாட்டில் அவருக்குத் தனி அறை, தினமும் வீட்டு உணவு, கட்டில், தலையணை, வெஸ்டர்ன் டாய்லெட், மருந்துகள், தனி பாதுகாப்பு மற்றும் தினமும் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் சந்தித்துச் செல்ல அனுமதி போன்ற வசதிகள் செய்துதரச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

74 வயதான சிதம்பரத்துக்கு வயது முதிர்வு மற்றும் உடல்நல பிரச்னைகள் இருப்பதால் இந்தச் சிறப்பு வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

``இந்த விசாரணை முற்றிலும் போலியானது. அவர்கள் பெயருக்கு மட்டுமே விசாரணை நடத்துகிறார்கள். அவர்களுக்கு என் தந்தையைச் சிறையில் அடைக்க வேண்டும் என்ற நோக்கம்தான் உள்ளது. நானும் என் தந்தையும் எம்.பி-க்கள், எங்கள் சொத்து தொடர்பான அனைத்து விஷயங்களும் பொதுத்தளத்தில் உள்ளன” என சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு