Published:Updated:

`உங்களுக்கு அந்த 5 சதவிகிதம் பற்றித் தெரியாதா?’-சிபிஐ காவல் குறித்த கேள்வியும் சிதம்பரத்தின் பதிலும்

கலிலுல்லா.ச

`15 நாள் சி.பி.ஐ காவலில் இருந்துள்ளீர்கள். அது குறித்து எதுவும் சொல்லவிரும்புகிறீர்களா?’ என்று கேட்டதற்கு, ப.சிதம்பரம் 5 என்று கூறி கடந்து சென்றார்.

P Chidambaram
P Chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டபோது, `இது 10 ஆண்டுகால பகை’, அமித்ஷா தனக்கு நேர்ந்ததை, `ப.சிதம்பரத்துக்கு திருப்பி கொடுத்திருக்கிறார்’ என்று ஒருதரப்பினர் பேச ஆரம்பித்தனர்.

P Chidambaram
P Chidambaram
`தயவுசெய்து திகாருக்கு அனுப்பிவிடாதீர்கள்’ - உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு வாதம்

மற்றொரு தரப்பினரோ, `பா.ஜ.க-வின் பொருளாதாரத்தின் மோசமான நிலையை அம்பலபடுத்தக்கூடியவர் ப.சிதம்பரம். அதனால்தான் அவரை மத்திய அரசு கைது செய்து முடக்கப்பார்க்கிறது’ என்றும் கூறியினர். `ப.சிதம்பரத்தை சிறையில் வைத்து சிபிஐ கேட்கும் முதல் கேள்வி, `பொருளாதாரத்தை சரிசெய்வது எப்படி’ என்ற மீம்ஸ்களெல்லாம் சமூகவலைதளங்களில் வைரலாகின.

தற்போது. செப்டம்பர் 5-ம் தேதிவரை ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்துக்கு வெளியே வந்த ப.சிதம்பரத்திடம் `15 நாள் சி.பி.ஐ காவலில் இருந்துள்ளீர்கள். அது குறித்து எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கேட்டதற்கு, `5 சதவிகிதம்’ என்று ப.சிதம்பரம் தன்னுடைய 5 விரல்களைக் காட்டி பதிலளித்தார்.

P Chidambaram in cbi custody
P Chidambaram in cbi custody

அப்போது, செய்தியாளர் ஒருவர், `5 சதவிகிதம் என்றால்’ எனக் கேட்க, `உங்களுக்கு அந்த 5 சதவிகிதம் தெரியாதா?’ என்று கேட்க `ஜிடிபி-ஐ சொல்கிறீர்களா?’ என்றதும் சிரித்தபடியே கடந்துசென்றார். பொருளாதார வளர்ச்சி என்பது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. `மத்திய அரசை போகிற போக்கில் விமர்சித்துவிட்டுச் சென்றுள்ளார் ப.சிதம்பரம்’ என்று காங்கிரஸ் கட்சியினர் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். மேலும், காங்கிரஸின் அதிகாரபூர்வ பக்கத்திலும் அந்த வீடியோ பதிவுசெய்யபட்டுள்ளது!