Published:Updated:

வாரம் ரூ.1,500 பணம், சிறையில் முதல் பிறந்த நாள்..!- சிதம்பரம் திகார் அப்டேட்

இதற்கு முன்பு தனது பிறந்தநாளை மனைவி, மகன் என குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடி வந்த சிதம்பரம் இந்த முறை திகார் சிறையில் கழிக்க உள்ளது அவரது குடும்பத்தினர் மத்தியில் மனவருத்தத்தை உண்டாக்கியுள்ளது.

P Chidambaram
P Chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் தன் தந்தை ப.சிதம்பரத்தின் உதவியுடன் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.305 கோடி முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐயும் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணைக்கு நடுவில் இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்தது சி.பி.ஐ. அதன்படி 14 நாள்கள் சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்ட சிதம்பரம், பிறகு நீதிமன்ற காவலுக்கு மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியானது. `சிதம்பரத்திடமிருந்து எந்த உண்மையையும் எங்களால் பெற முடியவில்லை. போதிய ஒத்துழைப்பு எங்களுக்குத் தரவில்லை' எனக் கூறி சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் காவலை நீட்டிப்பு செய்து வந்தனர்.

P Chidambaram
P Chidambaram

6வது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் கடந்த 5-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், செப்டம்பர் 19-ம் தேதி வரை திகார் சிறையில் தனி அறையில் சிதம்பரத்தை அடைக்க உத்தரவிட்டனர். அதன்படி திகாரில் 7-ம் எண் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். 19-ம் தேதி வரை திகார் சிறையில் இருக்கவுள்ள சிதம்பரத்துக்கு நாளை 74 வது பிறந்தநாள் ஆகும். இதற்கு முன்பு தனது பிறந்தநாளை மனைவி, மகன் என குடும்பத்தினருடன் உற்சாகமாகக் கொண்டாடி வந்த சிதம்பரம் இந்த முறை திகார் சிறையில் கழிக்க உள்ளது அவரது குடும்பத்தினர் மத்தியில் மனவருத்தத்தை உண்டாக்கியுள்ளது.

சிலந்தி வலையில் சிதம்பரம்!

இதற்கிடையே, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 74 வயதை அடையவுள்ள சிதம்பரத்துக்கு இருக்கும் உடல் உபாதைகளைக் குறிப்பிட்டு சில சலுகைகளைக் கேட்டனர் அவரது தரப்பினர். அதாவது.. வீட்டு உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட சலுகைகள் கேட்கப்பட்டன. ஆனால் அதனைக் கொடுக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் தனது அடிப்படைத் தேவைகளுக்காக 1,500 ரூபாயை வாரம் ஒருமுறை தனது குடும்பத்தினரிடம் சிதம்பரம் பெற்றுவருவதாக ஐஏஎன்எஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நீதிமன்றம் கோரிக்கைக்குச் செவிசாய்க்க மறுத்ததால், தற்போது சிறையில் கொடுக்கும் உணவுகளையே சாப்பிட்டுவரும் அவர், வாரம்தோறும் 1,500 ரூபாயைத் தனது குடும்பத்தினரிடம் இருந்து பெற்று அதைக்கொண்டு டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்கிறார் என அந்த செய்தி தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.

P Chidambaram
P Chidambaram
‘சுவாமி’ போட்ட முடிச்சு! - சிக்கலில் சிதம்பரம்

இதுதொடர்பாக ஐஏஎன்எஸ் தளத்துக்குப் பேசியுள்ள திகார் சிறைக் காவலர்கள், ``நீதிமன்ற காவல் மற்றும் தண்டனை கைதிகள் தங்களின் தேவைகளுக்காக வாரம் ஒருமுறை ரூ.1,500 ஐ அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து பெறலாம். சிறைக் கைதிகள் நல நிதியில் சேர்க்கப்பட்டு அதை வங்கி போல் டெபாசிட் செய்துகொள்ள முடியும். இதற்காகத் தனி கார்டு கொடுக்கப்படும். இதனைப் பயன்படுத்தி சிறையில் உள்ள கேண்டீனில் கைதிகள் தங்களுக்குத் தேவையானதை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அதனைப் பணமாக வைத்துக்கொள்ள முடியாது. இந்த விதிமுறைகளின்படியே சிதம்பரத்துக்கும் அவரது குடும்பத்தினர் 1,500 ரூபாய் கொடுக்கிறார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் தனது அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களை வாங்கிக்கொள்கிறார்" எனத் தெரிவித்துள்ளனர்.