Published:Updated:

சி.பி.ஐ மாளிகையில் சிதம்பரம்! அன்று சிறப்பு விருந்தினராக... இன்று `கைதி’யாக!

ஆ.பழனியப்பன்

டெல்லியில் சி.பி.ஐ தலைமையக விருந்தினர் மாளிகைக் கட்டடத்தை 2011-ல் திறந்து வைத்தவர் ப.சிதம்பரம். அதே விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது காலத்தின் கோலம்.

Chidambaram
Chidambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று இரவு டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் மத்திய உள்துறை மற்றும் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம், சி.பி.ஐ தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அவர் தங்கவைக்கப்பட்டார்.

Chidambaram Arrest
Chidambaram Arrest

2004 முதல் 2014 வரை மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, பவர்ஃபுல் அமைச்சராக வலம்வந்தவர் ப.சிதம்பரம். மத்திய நிதியமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் என முக்கிய பதவிகளை அவர் வகித்துவந்தார்.

2008 நவம்பர் முதல் 2012 ஜூலை வரை மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் சி.பி.ஐ தலைமையகத்தில் விருந்தினர் மாளிகை கட்டடம் திறக்கப்பட்டது. 2011 ஜூன் 30-ம் தேதியன்று முக்கிய நிகழ்ச்சியாக அது நடைபெற்றது. அதில், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றார். அந்த விருந்தினர் மாளிகையைத் திறந்து வைத்தவர் ப.சிதம்பரம்.

CBI Office
CBI Office
ANI

நேற்று இரவு கைதுசெய்யப்பட்ட ப.சிதம்பரம், சி.பி.ஐ தலைமையகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில்தான் நேற்றைய இரவைக் கழித்தார். விருந்தினர் மாளிகையின் 5-வது அறையில் அவர் தங்கவைக்கப்பட்டார். பாதுகாப்பு கருதி, குற்றம்சாட்டப்பட்ட வி.ஐ.பி-க்கள் இந்த விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்படுவது வழக்கம்.

நேற்று இரவு சிதம்பரம் கைதுசெய்யப்பட்ட பிறகு, அவருக்கு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு, ஓர் அறைக்கு அழைத்துவரப்பட்ட அவர், சற்று நேரம் அங்கு இருந்தார். பிறகு, 10 மணியளவில் சி.பி.ஐ தலைமையகத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

Chidambaram
Chidambaram

சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதிலளித்ததாகவும், பல கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.