Published:Updated:

`கார்த்திக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்..!’ - சிறைக்குள்ளிலிருந்து செல்லில் பேசிய ப. சிதம்பரம்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதிலிருந்து, டெல்லியிலே முகாமிட்டிருந்தார் கார்த்திக் சிதம்பரம். தந்தை கைதுக்குப் பின் நேற்று, சிவகங்கைத் தொகுதிக்கு வருகைதந்தார்.

சிதம்பரத்திடமிருந்து வந்த போன் கால்
சிதம்பரத்திடமிருந்து வந்த போன் கால்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் 14 நாள்கள் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். காவல் முடிந்தவுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

இதையடுத்து, ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 3 -ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்ட ப. சிதம்பரத்தின் காவல், அக்டோபர் 17 -ம் தேதி வரை மீண்டும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டே வந்தது. சிறையில் இருக்கும் ப.சிதம்பரம், வயிற்று வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். இந்நிலையில், இன்று காலை திகார் சிறையிலிருந்து அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துடன் போனில் பேசியுள்ளார்.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதிலிருந்து, டெல்லியிலே முகாமிட்டிருந்தார் கார்த்தி சிதம்பரம். தந்தை கைதுக்குப் பின் நேற்று, சிவகங்கை தொகுதிக்கு வருகைதந்தார். தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து, தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். தொடர்ந்து, இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, டெல்லி திகார் சிறையிலிருந்து கார்த்தி சிதம்பரத்துக்கு போன் கால் ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் ப.சிதம்பரம் பேசியுள்ளார். அப்போது கார்த்திக் சிதம்பரம், `கட்சி நிர்வாகிகளுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஸ்பீக்கர் போடவா... அவர்களிடம் பேசுறீங்களா..?’ என்று கேட்டிருக்கிறார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

`சரி பேசுகிறேன் என்று ப.சிதம்பரம் கூற, ஸ்பீக்கரை ஆன் செய்துள்ளார் கார்த்தி. மறுமுனையில், ``நான் நன்றாக இருக்கிறேன். இது அரசியல் பழிவாங்கும் வழக்குதான். எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்படாதீர்கள். 15 அல்லது 16-ம் தேதி நான் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவேன். நீங்கள் அனைவரும் உற்சாகமாகப் பணியாற்றுங்கள். கார்த்தி சிதம்பரத்துக்கு தேவையான ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று பேசியிருக்கிறார். இதுகுறித்து விவரமறிந்தவர்கள் கூறுகையில், ``சிறை விதிகளின்படி, சிறையிலிருப்பவர் 5 நிமிடம் உறவினரிடம் பேசலாம். அதன் அடிப்படையில், சிறையிலிருந்தபடியே சிவகங்கை நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் பேசியிருக்கிறார்” என்றனர்.