Published:Updated:

`சி.வி.சண்முகம் சொல்வது எந்தளவுக்கு உண்மை!'- ஹைட்ரோ கார்பன் குறித்து மணியரசன்

கு. ராமகிருஷ்ணன்
ம.அரவிந்த்

``அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழ்நாட்டில் ஹை ட்ரோகார்பனை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் குழப்பத்திற்கு இடமில்லாமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்''

இதுதான் விவசாயிகளின் நிலை
இதுதான் விவசாயிகளின் நிலை

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தெரிவித்தார். அடுத்த சில மணிநேரத்தில் நாகப்பட்டினம், ராமநாதபுரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, மூன்றாவது சுற்று ஏலத்தில் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்ரோ கார்பன், காவிரி... திருச்சியில் தொடரும் போராட்டங்கள்!

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்க, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தமிழக அரசுக்கு சில யோசனைகளை முன் வைக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெ.மணியரசன், ‘’திறந்தவெளி உரிமம் வழங்கும் திட்டத்தின் கீழ் மூன்றாவது சுற்று ஏலத்தில் நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 459.89 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஓ.என்.ஜி.சி-க்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் இன்னொரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 1403.41 சதுர கிலோ மீட்டர் ஓ.என்.ஜி.சி-க்கு ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.

பெ.மணியரசன்
பெ.மணியரசன்
ம.அரவிந்த்

இதற்கிடையில்தான் அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பனை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. காரணம் கடந்த 2-ம் தேதி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் காத்திருப்புப் போராட்டம் நடத்திய உழவர்கள் மற்றும் உணர்வாளர்கள் 655 பேர் மேல் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஏன் இந்த முரண்பாடுகள்?

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் குழப்பத்திற்கு இடமில்லாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 2015-ம் ஆண்டு மீத்தேன் திட்டத்தை தடுக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அரசாணை பிரிவு 186 வெளியிட்டார். ரசாயனங்களை பயன்படுத்தி, நீரியல் விரிசல் முறையில் கனிமங்கள் எடுத்தால், நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் நஞ்சாக மாறும் என்கிறது அந்த அரசாணை. இந்த அரசாணையை பயன்படுத்தி, தமிழ்நாட்டில் நீரியல் விரிசல் முறையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க முடியாது என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டம்

இன்னொரு மாற்றுவழியாக, நாகலாந்து மாநில அரசு, ஹைட்ரோ கார்பனுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டதுபோல் தமிழக அரசும் அரசாணை வெளியிடலாம். தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் குறித்து ஆய்வு செய்யவோ, அதை எடுக்கவோ மத்திய அரசுக்கும் தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்க மாட்டோம்” என்று அறிவிக்க வேண்டும் என்றும், அத்துடன் ஹைட்ரோ கார்பன் வராமல் தடுக்க வாழ்வுரிமைப் போராட்டம் நடத்திய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனிநபர்கள் அனைவர் மீதும் போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்” என தெரிவித்தார்.