Published:Updated:

அரசு எடுக்கும் முடிவுகளைத் தீர்மானிப்பது அரசியல்வாதிகளா அதிகாரிகளா? - ஓர் அலசல்

Parliament of India
Parliament of India ( Photo: Vikatan Archives )

பால் வாங்குவதிலிருந்து பத்தாம் வகுப்பு பாஸ் செய்வது வரை இன்றைய நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அரசே தீர்மானிக்கிறது. ஆனால், அந்த அரசின் முடிவுகளைத் தீர்மானிப்பது அரசியல்வாதிகளா, அதிகாரிகளா?

எதிர்பாராத திருப்பங்களோடு மிக இக்கட்டான சூழலில் மாட்டியிருக்கிறது உலகம். வழக்கத்துக்கு மாறாக எல்லாம் நடக்கிறது. பல தேசங்கள் பல மாதங்களாக அரசியல்வாதிகள் முடங்கியிருக்கின்றன. ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நீதிமன்ற வழக்குகள் வரை சூழலுக்குத் தகுந்தவாறு உலகம் தன்னை தகவமைத்துக்கொண்டுள்ளது. வழக்கத்தைவிட மிக அதிகமாக அரசின் இரும்புப் பிடிக்குள் சிக்கியிருக்கிறது மக்களின் வாழ்க்கை. எப்பொழுதும் ஊடகங்களில் முகம் காட்டும் அரசியல் தலைவர்கள் எல்லாம் அமைதி காக்க, எப்போதும் பின்னணியில் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் முன்னிருக்கைக்கு வந்திருக்கிறார்கள். பால் வாங்குவதிலிருந்து பத்தாம் வகுப்பு பாஸ் செய்வது வரை இன்றைய நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அரசே தீர்மானிக்கிறது. ஆனால் அந்த அரசின் முடிவுகளைத் தீர்மானிப்பது அரசியல்வாதிகளா, அதிகாரிகளா என்பதுதான் இப்ப்போதுள்ள கேள்வி.

constitution
constitution

இந்திய அரசியலமைப்பு நமது நாட்டில் ஜனநாயகத்தை வலுவாகக் கட்டமைக்கத் தேவையான அடிப்படை அமைப்பைக் கொண்டது. சட்டங்களை இயற்றுவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளையும், அந்தச் சட்டங்களை  நடைமுறைப்படுத்துவதற்குத் திறமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளையும் கொண்டது. சுதந்திர இந்தியா தன் 73 ஆண்டுக்கால வரலாற்றில், மிகவும் திறமை வாய்ந்த, கற்றறிந்த, மொழிப் புலமையும், ஆட்சித் திறமையும், ஆளுமையும் கொண்ட ஜாம்பவான்களைத் தலைவர்களாகப் பெற்றிருக்கிறது. அப்பொழுது இந்தியக் குடிமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இளைஞர்களுக்கு அன்றைய தலைவர்கள் வழிகாட்டிகளாக இருந்த கதைகள் எல்லாம் உண்டு.

இன்றைய சூழல் வேறு; பல ஆண்டுகளாக குடிமைப்பணியில் கற்றுத்தேர்ந்து, அனுபவம் கொண்ட பல ஜாம்பவான்கள் அதிகாரிகளாக இருக்கிறார்கள். அவர்களோடு மக்கள் தலைவர்கள் இணைவதும் பிரிவதுமாக இருக்கிறார்கள். தேசத்தின் நிலையை, தேவையை அரசியல்வாதிகளுக்கு  எடுத்துச் சொல்லி ஆலோசனை சொல்லும் முக்கிய பணியை அதிகாரிகள் மேற்கொள்கிறார்கள். அவர்களின் நிலை முன்னெப்போதும்விட முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்கிறது.

முன்னால் வெளியுறவுத்துறைச் செயலர் ஜெயசங்கர் இப்போது வெளியுறவுத்துறை அமைச்சர். இப்படி ஒருபக்கம் அதிகாரிகள் பணி ஓய்வுக்குப் பிறகு அரசியல் களத்துக்கும் வருகிறார்கள். தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல்  உடன்  இணைந்து இன்று சீன எல்லை பிரச்னையைக்  கையாள்வது இவரே. மறுபக்கம் நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி தொடங்கி, பிரதமர் அலுவலகம் வரை இத்தகைய அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகிறது. 2019-ம் ஆண்டு அமைக்கப்பெற்ற மோடியின் அமைச்சரவையில், பல துறைகளுக்குச் செயலர்களாக ஐ.ஏ.எஸ் அல்லாத அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆட்சியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பிடியைத்  தளர்த்தவே இந்த நடவடிக்கை என்றும் அப்போது பேசப்பட்டது.

இந்தச் சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் கூறும் விதமாகச்  சமீபத்தில் ஒரு நிகழ்வில் உரையாற்றி இருக்கிறார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன். `சென்னை ஃபிரெண்ட்ஸ் ஃபோரம்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணையவழி கலந்துரையாடலில் `உண்மையில் நாட்டை ஆள்வது அதிகாரிகளா, அரசியல்வாதிகளா’ என்ற தலைப்பில் அவர் பேசியிருக்கிறார். நேரு, லால் பகதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி போன்ற இந்தியாவின் முதல் நான்கு பிரதமர்கள் கீழ் நேரடியாகப் பணியாற்றியவர் பி.எஸ்.ராகவன். ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து அதன் மூன்று செயற்குழுக்களுக்குத் தலைமை வகுத்தவர். தற்போது எழுத்தாளர், அரசியல் பார்வையாளர். அன்றிலிருந்து இன்று வரை இந்திய ஆட்சியில் உள்ள அதிகாரிகளின் பங்கை அவர் விவரிக்கிறார்.

பி.எஸ்.ராகவன்
பி.எஸ்.ராகவன்
www.c3sindia.org

``இந்திய அரசியல்வாதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தேர்தல் அறிக்கைகள் வழியாகப் பல வாக்குறுதிகளைக் கொடுத்து ஒரு கட்சி ஆட்சியில் அமர்கிறது. அப்படி ஒரு அரசியல்வாதி பதவியேற்ற நொடி முதல் அவருக்கும், ஒரு அதிகாரிக்குமான உறவு தொடங்குகிறது. அவர்களின் அந்த வாக்குறுதிகள் நடைமுறையில் சாத்தியமா, அதன் விளைவுகள் என்ன என ஆய்வது முதல், அதற்கேற்ப ஆலோசனை வழங்கி அதை நடைமுறைப்படுத்துவது வரை அதிகாரிகள் கையாள்கிறார்கள்" என்று பாராளுமன்ற ஜனநாயகத்தின் கட்டமைப்பை விளக்குகிறார்.

மேலும் அவர் கூறுகையில், ``ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட ஒரு துறையில் அனுபவம் இல்லாதவராகக்கூட இருக்கலாம் அல்லது அவரது ஆட்சிக் காலத்துக்கு ஏற்ப குறைந்த அனுபவத்தோடும், குறிப்பிட்ட துறை நிபுணத்துவத்தோடும் இருக்கலாம். ஆனால், ஒரு அதிகாரி, தன் ஓய்வுபெறும் காலம் வரை நிரந்தரமாக அதிகார மையத்தில், ஆட்சி சக்கரத்தில் இருப்பவர். அத்தகைய ஒரு அதிகாரிக்குத் தேர்ந்த அனுபவமும், பல ஆண்டுக்கால ஆட்சியின், முடிவுகளின் நினைவும் இருக்கும். ஆட்சி செய்வது பற்றிய தகவல் களஞ்சியமாக அவர் இருப்பார். அதேசமயம், ஒரு கொள்கை முடிவை எடுப்பதற்கான நேரடி அதிகாரம் அரசியல்வாதிகளிடம்தான் இருக்கும். இவ்வாறு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஒருவர் மீது ஒருவர் சார்புடையவர்கள். இருவராலும் தனித்தனியாக இயங்க முடியாது." என இரு அதிகார மையங்களுக்கான உறவை விளக்குகிறார்.

சீனப் பொருள்களை முற்றிலும் தவிர்க்க முடியுமா?

அதிகாரிகள் அரசியல்வாதிகளோடு கொண்டிருக்கும் உறவின் தற்போதைய நிலையையும் கடந்த கால சூழலையும் அவர் ஒப்பிட்டுப் பேசுகையில், ``அன்றை விட இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்டமைப்பு மேம்பட்டதாக இருக்கிறது. அதாவது, பாராளுமன்றத்தில் அதிகம் படித்த, இளைஞர்கள் தற்போது  உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் சராசரியாக 55 வயதைக் கடந்தவர்கள்தான் பாராளுமன்றத்தில் நிரம்பியிருப்பார்கள். ஆனால், அதிகாரிகள் அன்றைய காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட துறையில் தேர்ந்த வல்லுநர்களாக இருப்பார்கள், சட்டம், அறிவியல் போன்ற ஒரு துறையில் அவர்களுக்குத் தனித்தன்மையுள்ள இயல்பான நிபுணத்துவமிருக்கும். அன்றைய சூழலில் இளைஞர்களாக உள்ள அதிகாரிகள் சொல்லும் ஆலோசனைகளைக் கூட ஆழ்ந்து நிதானித்து பொறுமையுடன் கேட்கும் பக்குவம் அரசியல் தலைவர்களிடம் இருந்தது. கூடுதலாக, சரளமான ஆங்கிலப்  புலமையும் அன்றைய அரசியல் தலைவர்களுக்கு இருந்தது. அதிகாரிகள் தரும் ஆங்கில அறிக்கைகளை முழுவதுமாக படித்து உள்வாங்கிக்கொள்வது அவர்களுக்கு எளிதாக இருந்தது" என்கிறார்.

இறுதியாக, ``இன்றைய சூழலில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சரிசமமான பொறுப்புகளோடும் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும் ஆட்சியை நடத்துகிறார்கள். இரு தரப்பினரிடையே ஒரு இணக்கமான சூழல் நிலவுகிறது. தேசம் அதிகாரப் பகிர்வில் சரியான பாதையில் பயணிக்கிறது" என்று நம்பிக்கையோடு பேசியிருக்கிறார் பி.எஸ்.ராகவன்.

ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட அரசியல் தலைவர்களையும், அவர்களது செயல்பாடுகளையும் மட்டுமே அதிகம் கவனிக்கின்றோம் நாம். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் சில தசாப்தங்கள் அதிகார மையத்தில் அமரும்  அதிகாரிகளையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், ஆலோசனைகள், செயல்திட்டங்கள், அறிக்கைகளென  நம் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சம வல்லமை அவர்களுக்கும் உண்டு.

அடுத்த கட்டுரைக்கு