Published:Updated:

ஒரு காங்கிரஸ் பிரதமர்!

பி.வி.நரசிம்ம ராவ்
பிரீமியம் ஸ்டோரி
பி.வி.நரசிம்ம ராவ்

நம்பிக்கையில்லாத் தீர்மானங்களின்போது தன் அரசைக் காப்பாற்றுவதற்காக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி-க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.

ஒரு காங்கிரஸ் பிரதமர்!

நம்பிக்கையில்லாத் தீர்மானங்களின்போது தன் அரசைக் காப்பாற்றுவதற்காக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி-க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.

Published:Updated:
பி.வி.நரசிம்ம ராவ்
பிரீமியம் ஸ்டோரி
பி.வி.நரசிம்ம ராவ்

சமகாலத்தில் சரமாரியான விமர்சனங் களுக்கு ஆளான அரசியல்வாதிகள், காலப்போக்கில் மகத்தான ஆளுமைகளாகக் கொண்டாடப்படும் வரலாற்று விசித்திரத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பி.வி.நரசிம்ம ராவ் அப்படிப்பட்ட ஓர் ஆளுமை.

ஒரு காங்கிரஸ் பிரதமர்!

அவரளவுக்கு சர்ச்சைகளைச் சந்தித்த ஒரு பிரதமரை இந்தியா பார்த்ததில்லை. பங்குச்சந்தை ஊழலில் சிக்கிய பங்குத்தரகர் ஹர்ஷத் மேத்தா, ‘‘வழக்குகளிலிருந்து என்னை விடுவிப்பதற்காக பிரதமர் நரசிம்ம ராவுக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தேன்’’ என்று குற்றம் சாட்டினார். ‘ஒரு சூட்கேஸில் எப்படி ஒரு கோடி ரூபாயை அடுக்கி எடுத்துச் சென்றேன்’ எனப் பத்திரிகையாளர்கள் முன்பு செய்து காட்டினார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானங்களின்போது தன் அரசைக் காப்பாற்றுவதற்காக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி-க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. சைலேந்திர மகாதோ என்ற எம்.பி அப்ரூவராக மாறினார். ராவ் பதவியிழந்த பிறகு இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ‘குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கிறேன்’ என நரசிம்ம ராவ் முகத்தைப் பார்த்துத் தீர்ப்பு சொன்னார். மேல் முறையீட்டில் இந்த வழக்கிலிருந்து விடுதலை பெற்றார் ராவ்.

ஒரு காங்கிரஸ் பிரதமர்!

வி.பி.சிங்கின் கறைபடியாத இமேஜைக் கெடுப்பதற்காக, அவர் மகன் பெயரில் செயின்ட் கிட்ஸ் தீவு வங்கி ஒன்றில் போலி ஆவணங்களை உருவாக்கிக் கணக்கு தொடங்கினார் ராவ் என்று புகார் எழுந்தது. பிரிட்டனில் வசித்த இந்தியத் தொழிலதிபர் லக்குபாய் பதக் என்பவர், ஒரு வியாபார ஒப்பந்தம் பெற ராவுக்கு லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுப்பினார். இந்த விவகாரங்களில் கார்ப்பரேட் சாமியார் சந்திராசாமியுடன் நரசிம்ம ராவின் பெயர் சந்தி சிரித்தது.

‘ஒரு பிரதமர்மீது இப்படியெல்லாம் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா? சொல்லிவிட்டு நாட்டில் வாழ முடியுமா?’ என்று இந்தத் தலைமுறைக்கு ஆச்சர்யம் எழும். ஆனால், இவையெல்லாம்தான் வரலாறு.

நரசிம்ம ராவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அந்தப் படத்துக்கு அதிக வசனங்கள் தேவைப்படாது. அப்படி ஓர் அமைதி சொரூபம் ராவ். சமூக வலைதளங்கள் வராத காலத்தில் இருந்த அரசியல்வாதிகள் பாக்கியவான்கள். ராவ் அப்படிப்பட்ட பாக்கியவான். பேசவேண்டிய விஷயங் களுக்குக்கூட அவர் வாய் திறந்ததில்லை. தன்மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் அவர் அமைதி காத்தார். ‘ஒரு பிரச்னையில் தலையிடாமல் அமைதியாக இருந்தால், பிரச்னை செய்பவர்களே அலுத்துப்போய் விட்டு விடுவார்கள்’ என்பது ராவ் கண்டுபிடித்த தீர்வு. ‘சந்தேகம் ஏற்படும்போது எந்த முடிவும் எடுக்கக்கூடாது’ என்ற அவரது டெக்னிக், நாடு முழுக்க ஜோக்கானபோதும் அவர் கவலைப்பட்டதில்லை. இப்போது விவசாயிகள் போராட்டம் ஆறு மாதங்களைக் கடந்தும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறாரே மோடி, இந்த விஷயத்தில் அவருக்கு முன்னோடி ராவ்.

பாமுலபர்த்தி வெங்கட நரசிம்ம ராவ் இன்னும் பல விஷயங்களில் முன்னோடி. தென்னிந்தியாவிலிருந்து டெல்லி சென்று ஆட்சி புரிந்த முதல் பிரதமர் அவர்தான். இன்று ‘நேரு குடும்பத்தை விட்டால் காங்கிரஸுக்குக் கதியில்லை’ என்று அந்தக் கட்சித் தலைவர்கள் பலர் நினைக்கிறார்கள். அதைப் பொய்யாக்கிக் காட்டியவர் அவர். காங்கிரஸ் தலைவராகவும், தேசத்தின் பிரதமராகவும் ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்த நேரு குடும்பத்தைச் சாராத ஒரே தலைவர் அவர்தான்.

கிட்டத்தட்ட அரசியல் துறவறம் போகும் நேரத்தில் பிரதமர் பதவி அவரைத் தேடி வந்தது. ஒரு விபத்துபோலவே அவர் பிரதமர் ஆனார். 1991 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அப்போது அவருக்கு 70 வயது. ஆந்திராவின் முதல்வர், கிட்டத்தட்ட அரை டஜன் துறைகளில் மத்திய அமைச்சர் என எல்லாப் பதவிகளையும் பார்த்துவிட்டு, ‘போதும்’ என்ற மனநிலையில் ஆந்திராவில் தன் சொந்த ஊரான வாரங்கல் வந்து குடியேறும் மனநிலையில் இருந்தார். டெல்லியில் தன் வீட்டில் இருந்த பொருள்களையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டார். அந்த நேரத்தில்தான் ராஜீவ் படுகொலைச் செய்தி வந்தது.

அது காங்கிரஸ் தலைவர்களை ஒருபக்கம் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், ‘அடுத்து யார்’ என்ற ரேஸையும் ஆரம்பித்து வைத்தது. ‘அந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று கருத்துக்கணிப்புகள் வந்திருந்தன. எனவே, பிரதமர் பதவியைப் பிடிக்கும் சபலம் சீனியர் தலைவர்கள் பலருக்குள் எட்டிப்பார்த்தது. இந்திரா காந்தி காலத்திலும், அதன்பின் ராஜீவ் காலத்திலும் தாக்குப் பிடித்து நின்ற சீனியர்கள் முட்டி மோதினார்கள். சரத் பவார் ஒரு பக்கம் ஆதரவு திரட்டினார். ராஜீவையே எதிர்த்து அரசியல் செய்த அர்ஜுன் சிங் அந்த நாற்காலிமீது கண் வைத்தார். உத்தரப்பிரதேச முதல்வராக இருந்து கட்சிக்குள் பெரும் செல்வாக்கு செலுத்திய என்.டி.திவாரியும் ஆசைப்பட்டார்.

நரசிம்ம ராவுக்கு ஜோதிடத்தில் பெரும் நம்பிக்கை உண்டு. அவர் ஜாதகம் விநோதமானது. திடீர் வீழ்ச்சிகளும் திடீர் உயரங்களும் நிகழும் ஜாதகம் தன்னுடையது என்று அவர் நம்பினார்.

ராஜீவுக்கு அஞ்சலி செலுத்த, பல வெளிநாட்டுத் தலைவர்கள் டெல்லி வந்தார்கள். வெளியுறவு அமைச்சராக நீண்ட காலம் இருந்தவர் என்பதால், அவர்தான் எல்லோரையும் வரவேற்று வழிநடத்தினார். இதனால் அந்த நாள்களில் சோனியா குடும்பத்தினரின் பார்வையில் எப்போதும் அவர்தான் இருந்தார். ராஜீவ் மறைவுக்குப் பிறகு கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்துக்கு யார் தலைமை தாங்குவது என்று குழப்பம் எழுந்தது. சரத் பவார், அர்ஜுன் சிங், என்.டி.திவாரி மூவருமே ஒருவர் இன்னொருவரை ஏற்காமல் முரண்டுபிடித்தனர். பிரணாப் முகர்ஜி தலையிட்டு, ‘நரசிம்ம ராவ் தலைமையில் கூட்டம் நடக்கட்டும்’ என்றார். ‘ஓய்வுபெறும் மனநிலையில் உள்ள இந்த மனிதரால் ஆபத்தில்லை’ என்று மூவருமே சம்மதம் சொன்னார்கள்.

மறுநாள் மூத்த தலைவர்கள் ஒரு குழுவாகச் சென்று சோனியாவைச் சந்தித்து, கட்சிக்குத் தலைமை ஏற்கும்படி கேட்டனர். அவர் மறுத்துவிட, ராவே கட்சிக்குத் தலைமை ஏற்கும் சூழல் உருவானது. அதற்கு சோனியாவின் சம்மதமும் கிடைத்தது.

தேர்தல் முடிவுகள் வந்தன. என்.டி.திவாரி தோற்றுப்போனார். சரத் பவார் ஒரு பக்கம் பார்ட்டிகள் நடத்தி 120 எம்.பி-க்களின் ஆதரவைத் திரட்டியிருந்தார். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா எனத் தென் மாநிலங்களில் அதிக எம்.பி-க்கள் காங்கிரஸுக்குக் கிடைத்தார்கள். மூப்பனார், கே.கருணாகரன், ஜனார்த்தன ரெட்டி போன்ற தென்னிந்தியத் தலைவர்கள் ராவுக்கு ஆதரவாக நின்றார்கள். சரத் பவார் வரக்கூடாது என, பலர் அவர்களுக்கு ஒத்துழைப்பு தந்தார்கள். கடைசியில் அர்ஜுன் சிங்கும் சரத் பவாரும் இணைந்தே ராவ் பெயரைப் பிரதமர் பதவிக்கு முன்மொழியும் சூழல் உருவானது.

ராவ் பதவிக்கு வந்ததும் முதலில் இவர்களைத்தான் ஓரங்கட்டினார். அவர் பேசாமலேயே அமைதி காக்க, அவரைப் பற்றிப் பேசிப் பேசியே களைத்துப்போனார்கள் இந்த சீனியர்கள். மனதில் என்ன நினைக்கிறார் என்பதை யாருமே கண்டுபிடிக்க முடியாத முகபாவனை அவருடையது. அவர் சிரிப்பதே அபூர்வம். அவர் சிரிப்பதுபோலப் புகைப்படம் எடுத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

252 எம்.பி-க்கள் பலத்துடன் ஒரு மைனாரிட்டி அரசின் பிரதமராக இருந்துகொண்டு நரசிம்ம ராவ் செய்த பல விஷயங்கள் அசாத்தியமானவை. சோவியத் யூனியன் சிதறுண்டு, ரஷ்யா தன் வல்லரசு வலிமையை இழந்திருந்த காலம் அது. ரஷ்யாவின் பக்கம் நின்ற நாடுகள் நிராதரவாகின. இந்தியா அப்படி ஆகாமல் பார்த்துக்கொண்டது ராவின் சாமர்த்தியம். அமெரிக்கா முதல் ஜப்பான் வரை பல நாடுகளுடன் உறவு ஏற்படுத்தினார். ரூபாய் மதிப்பைக் குறைத்து, பெட்ரோலியப் பொருள்கள் விலையைத் தாறுமாறாக உயர்த்தி, ரயில்வே கட்டணத்தை அதிகமாக்கி, ஓர் அரசு எவற்றையெல்லாம் செய்யத் தயங்குமோ, அவற்றையெல்லாம் செய்தார். மன்மோகன் சிங்கை அவர் நிதியமைச்சர் ஆக்கியது, ஐ.எம்.எஃப் நிதி நிறுவனத்தின் கட்டாயத்தால்! இந்தியாவுக்கு அப்போது தேவைப்பட்ட கடனை அவர்கள்தான் கொடுத்தார்கள், அதனால் இந்திய நிதியமைச்சர் யார் என்பதையும் தீர்மானித்தார்கள். இந்தியாவின் பிரதமர் அன்று அப்படிப்பட்ட கையறு நிலையில்தான் இருந்தார். அதன்பின் லைசென்ஸ் ராஜ்ஜியத்தை ஒழித்தது, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதெல்லாம் பலரும் எதிர்த்த முடிவுகள். ஆனால், அன்று நரசிம்ம ராவ் போட்ட அடித்தளத்தில்தான் இன்று உலகப் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா எழும்பிக்கொண்டிருக்கிறது.

ஒரு காங்கிரஸ் பிரதமர்!

இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கு அவர்தான் ஒப்புதல் அளித்தார் எனப் பிற்காலத்தில் அப்துல் கலாம் சொன்னார். அது வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் சாத்தியமானது. ஐ.நா-வுக்குச் சென்ற இந்தியக் குழுவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாயைத் தலைமையேற்க வைத்ததும் ராவின் பெருந்தன்மை.

என்றாலும், அவரது ஆட்சிக்காலத்தில் அழியாக்கறையாக நிகழ்ந்த சம்பவம், பாபர் மசூதி இடிப்பு. அதற்கு ஒரு மாதம் முன்பாகவே உ.பி-யில் பா.ஜ.க ஆட்சியைக் கலைக்க மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால், ராவ் அதைச் செய்ய மறுத்தார். மசூதி இடிக்கப்படாது எனக் கடைசி நிமிடம் வரை அவர் நம்பிக்கொண்டிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாபெரும் சரிவைத் தொடங்கி வைத்தவராகவும் நரசிம்ம ராவே இருக்கிறார். 252 எம்.பி-க்கள் பலத்துடன் இருந்த கட்சி, 1996 தேர்தலில் வெறும் 140 எம்.பி-க்கள் கொண்ட கட்சியாக மாறியது. தமிழகத்தில் காங்கிரஸ் சகவாசமே வேண்டாம் என மூப்பனார் உடைத்துக்கொண்டு வந்து தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தார். ஜெயலலிதாவுடன்தான் கூட்டணி என ராவ் காட்டிய பிடிவாதமே இதற்குக் காரணம். என்.டி.திவாரி, அர்ஜுன் சிங் உள்ளிட்டவர்கள் பிரிந்துபோய் திவாரி காங்கிரஸ் என ஒரு கட்சியை ஆரம்பித்தார்கள். வாழப்பாடி ராமமூர்த்தி அங்கு போய்ச் சேர்ந்தார். இப்படியாக ராவ் அந்தக் கட்சியைக் கலகலக்க வைத்தார்.

ஆட்சியில் இருந்த காலத்தில் சோனியா குடும்பத்தின் விரோதத்தைச் சம்பாதித்ததால், பிரதமர் பதவி போனபிறகு அவரை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் தூக்கி வீசினார்கள். அதன்பின் எட்டு ஆண்டுகள் அவர், டெல்லி அக்பர் ரோட்டில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குக் கூப்பிடு தூரத்தில்தான் வசித்தார். உயிரோடு இருந்தபோது ஒருமுறைகூட கட்சி அலுவலகத்துக்குப் போனதில்லை. 2004 டிசம்பர் 23-ம் தேதி அவர் மறைந்தபோது, கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் உடல் 40 நிமிடங்கள் அங்கு வைக்கப்பட்டது.

ராவுக்கு நண்பர்கள் சொற்பம். தன் இறுதிக்காலத்தில் நரசிம்ம ராவ் மிகுந்த பணக்கஷ்டத்தில் இருந்ததாக அந்தச் சொற்ப நண்பர்கள் சொல்கிறார்கள். வழக்குச் செலவுகளுக்காக ஹைதராபாத்தில் இருந்த தன் வீட்டை விற்றிருக்கிறார் ராவ்.

ராவ் மறைந்தபிறகுகூட சோனியா குடும்பத்துக்கு அவர்மீது கோபம் குறையவில்லை. ஒரு முன்னாள் பிரதமராக அவர் உடலை டெல்லியில் எரியூட்ட ஆசைப்பட்டது ராவ் குடும்பம். சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது படேல், ‘‘ஹைதராபாத்தில் இறுதி அஞ்சலி நடத்துங்கள்’’ என்று ராவின் மகன்களிடம் சொல்லிவிட்டார். அதுதான் நடந்தது.

நரசிம்ம ராவ் நூற்றாண்டு விழாவை இந்த ஜூன் தொடங்கி ஓராண்டு கொண்டாடப் போவதாகத் தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களும் அறிவித்துள்ளன. அவருக்கு பிரமாண்ட சிலை வைத்திருக்கிறார்கள். பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்தால் நிராகரிக்கப்பட்ட ஒரு காங்கிரஸ் பிரதமர் அவர். எனவே, நரசிம்ம ராவை மோடியும் பாராட்டுகிறார். ராவுக்கு பாரத ரத்னா கிடைத்தாலும் ஆச்சர்யமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism