நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வேட்பாளர்கள் நம் வீதிகளை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டனர். கழகங்கள் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கி கவனம் ஈர்த்துள்ளன. வழக்கம்போல இந்தத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சிக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 74-வது வார்டில் பெயின்ட் அடிக்கும் கூலித் தொழிலாளி சரவணகுரு என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து சரவணகுரு கூறுகையில், ``பி.என்.புதூர், வேளாண் பல்கலைக்கழகம், பூசாரிபாளையம் பகுதிகள் இந்த வார்டில் வரும். பெயின்டராக பணியாற்றிவருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினேன். வார்டு செயலாளராக நியமித்தனர். கட்சி சார்ந்த நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றுவருகிறேன்.

சட்டசபைத் தேர்தலில் களத்தில் இறங்கி வேலை செய்தேன். அதனால், எங்கள் வார்டில் எனக்கே வாய்ப்பு கொடுத்துள்ளனர். ஆண்ட கட்சிகளில் பணம் இருந்தால்தான் சீட் என்று மல்லுக்கட்டிக்கொண்டிருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இங்கு பணத்தைவிட செயல்பாடுதான் முக்கியம். ஆனால் என்னிடம் இப்போது கட்டுத் தொகைக்குக்கூட (வேட்புமனுத் தாக்கல்) பணம் இல்லை. எங்களிடமிருக்கும் சிறு ஆபரணங்களை அடமானம் வைத்துத்தான் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறேன். இந்தப் பகுதியில் இருந்த மண்ணின் மைந்தர்கள், மாநகரைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சொல்ல முடியாத வலியுடன் அவர்கள் வாழ்ந்துவருகின்றனர். இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிக்கொண்டிருக்கின்றனர். எனக்கு வாய்ப்பு கொடுத்தால், இது போன்ற முக்கியப் பிரச்னைகளுக்கு கவனம் கொடுத்து, தீர்வுகாண முயல்வேன்” என்றார்.