பாகிஸ்தானில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக, நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், இம்ரான் கான் அரசு கவிழ்ந்து, அவர் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது, ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறித்துச் சில தகவல்களைச் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், ``இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தனது பானி காலா இல்லத்திலிருந்து பிரதமர் அலுவலகத்துக்குச் செல்ல ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியிருக்கிறார். அப்போது அதற்கான எரிபொருள் செலவுக்காக அரசுப் பணம் செலவிடப்பட்டது. கடந்த 44 மாதங்களில் ரூ.55 கோடி (பாகிஸ்தான் மதிப்பில்) செலவிடப்பட்டிருக்கிறது" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஆனால், இந்தக் குற்றசாட்டை மறுக்கும் அந்த நாட்டின் முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பவாத் சௌத்ரி, ``இம்ரான் கான் பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே ஹெலிகாப்டரைப் பயன்படுத்தினார். இந்தப் பயணத்துக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.55 மட்டுமே செலவாகும்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.