Published:Updated:

அரசியலில் விளங்காமல் போய்விட்டேன்!

 பழ.கருப்பையா, ஜெயலலிதா, கருணாநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
பழ.கருப்பையா, ஜெயலலிதா, கருணாநிதி

பழ.கருப்பையா

சட்டமன்ற உறுப்பினர் ஆனது குறித்தோ, அங்கு பேசுவது குறித்தோ எனக்கு எந்த வகை புல்லரிப்பும் எப்போதும் ஏற்பட்டதில்லை.

ஜெயலலிதா முதல்வராக சபையில் பேசும்போது ஏற்படும் இடைவெளிகளில், ஒருவகை ஓசை ஒழுங்குடன் மேசையைத் தட்டுவார்கள் உடன் உறுப்பினர்கள். நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து அருகிலிருக்கும் உறுப்பினர்கள், ‘எல்லாமே கேமராவில் பதிவாகிக்கொண்டிருக்கிறது, அம்மா அதைப் போட்டுப் பார்ப்பார்கள், நீ ஒழிந்தாய்...’ என்று அச்சுறுத்துவதுண்டு. எது எதற்குத்தான் ஒருவன் ஒழிவான் என்று கணக்கே இல்லாமல் போயிருந்தது.

 பழ.கருப்பையா
பழ.கருப்பையா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

என்னுடைய காலத்தில் கலைஞர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவருடைய சக்கர நாற்காலி வண்டி நுழைய வசதி செய்து தர ஜெயலலிதா அரசு மறுத்துவிட்டதால், அவருடைய நுட்ப திட்பமான பேச்சுகளைச் சட்டமன்றம் இழந்துவிட்டது. அவரை எதிர்கொள்ள ஜெயலலிதா அஞ்சியது அவர் அளவுக்குச் சரிதான். அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தி.மு.க இல்லை. ‘2-ஜி ஊழல் புகழ்’ தி.மு.க-வை உருத்தெரியாமல் ஆக்கியிருந்தது. ஆகவே, தே.மு.தி.க எதிர்க்கட்சியாக இருந்தது. அதன் சட்டமன்ற துணைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார். அவருடைய பேச்சு விவரமாக இருக்கும்; விளக்கமாக இருக்கும்; கனமாகவும் இருக்கும். கலைஞர் தன் மகன் போதும் என்று மகனின் பாதையிலிருந்த பல பேரை அகற்றிவிட்டதுபோல, விஜயகாந்த்தும் தன் மைத்துனன் போதும் என்று, பண்ருட்டியை உருவிவிட்டு, தன்னுடைய கட்சிக்குத் தானே முடிவுரை எழுதிக்கொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மானியக் கோரிக்கைகளில் புகழ்பெற்றது காவல்துறை கோரிக்கை. அதில் என்னைப் பேசும்படி ஜெயலலிதா சொல்லி நான் பேசினேன். அப்போது எல்லா உயரதிகாரிகளும் மாடங்களில் அமர்ந்திருப்பார்கள். முதலாம் ஆண்டு கோரிக்கையில் தி.மு.க-வினர்மீது போடப்பட்ட நில அபகரிப்பு வழக்குகளைப் பாராட்டிப் பேசினேன். ‘இந்த வழக்குகளில் தி.மு.க-வினர் தண்டிக்கப்படுவதைப் பார்த்து, இனி அரசு நிலங்கள் அரசியல்வாதிகளின் கனவிலும் தோன்றக் கூடாது. ஆனால், தி.மு.க-வினர் தாங்களாகவே அந்த நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்க முடியாது. அதிகார வர்க்கம் துணை போயிருந்தால் மட்டுமே இத்தகைய காரியங்கள் நடக்க முடியும்.

ஜெயலலிதா, கருணாநிதி, பழனிசாமி
ஜெயலலிதா, கருணாநிதி, பழனிசாமி

நாம் ஆட்சி நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுத்தோம். அதற்குத் துணையாக இருந்த அதிகாரவர்க்கத்தை, அதிகாரிகளை நடவடிக்கைக்கு உட்படுத்தவில்லையே... கண்காணிக்க வேண்டியவர்கள் களவுக்குத் துணை போனார்கள் என்றால், அவர்களைக் குற்ற வளையத்துக்குள் ஏன் கொண்டு வரவில்லை?’

இப்படி நான் பேசிக்கொண்டிருந்தபோது ஜெயலலிதா எழுந்துவிட்டார். நான் 20 மணித் துளிகள் பேசிய பேச்சுக்கு, அவர் 30 மணித்துளிகள் விடையளித்தார். ‘பழ.கருப்பையாவுக்கு ஆட்சி அனுபவம் இல்லை. ஆகவே அதிகாரவர்க்கத்தை அவர் புரிந்துகொள்ள முடியாது’ என்பதுபோல் நீண்டது அவரது பேச்சு. இறுதியாக, ‘இப்போது பழ.கருப்பையா சமாதானமடைந்திருப்பார் என நினைக்கிறேன்’ என்றார். ‘சரி அம்மா’ என்று நான் அமர்ந்துவிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது கொடிகட்டிப் பறக்கிற அமைச்சர் வேலுமணி அன்று என் பக்கத்தில் அமர்ந்திருந்தார். அவர் என்னிடம், ‘என்னய்யா இப்படிப் பேசிட்டே... விளங்கித்தான் பேசுனியா? எதிர்க்கட்சி தலைவருக்குத்தான் முதலமைச்சர் பதிலளிப்பாங்க. நீ 20 நிமிஷம் பேசுன பேச்சுக்கு அம்மா 30 நிமிஷம் பதிலளிக்கவெச்சிட்டியே... நீயெல்லாம் விளங்கப் போறதில்லை’ என்றார். வேலுமணி அக்கறையுடன் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. நான் அரசியலில் விளங்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

வேலுமணி
வேலுமணி

அது ஒருபுறமிருக்கட்டும். அதிகார வர்க்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? தி.மு.க ஆட்சியில் மட்டுமில்லை. அ.தி.மு.க ஆட்சியிலும் அதிகாரவர்க்கத்தை உட்கையாக வைத்துக்கொண்டுதான் எல்லா அசிங்கங்களையும் செய்வார்கள். ஆகவே, தி.மு.க-வுக்கு துணைபோன அதிகாரிகளை ஒதுக்குவார்களே தவிர, அவர்களை நடவடிக்கைக்கு உட்படுத்தி, மொத்த அதிகார வர்க்கத்தையும் பயமுறுத்திவிடமாட்டார்கள்.

சாத்தான்குளத்தில் இதுதான் நடந்தது. தந்தை, மகன் கொலை செய்யப்பட்டதில் முதலமைச்சர் பழனிசாமி முதலில் ஏனோதானோ என்று கருத்து தெரிவித்தார். பிரச்னை சூடு பிடித்தவுடன் தேவையில்லாத வம்பு ஏன் என்று சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்துவிட்டார். தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ காவல்துறை மற்றும் ஆட்சித்துறை செய்யும் தவறுகளுக்கு உடன்படக் காரணம், இவர்களுடைய ‘அமுக்கமான காரியங்களை’ அவர்களைக்கொண்டு தானே நிறைவேற்றிக் கொண்டாக வேண்டும். அசிங்கம் பிடித்த அரசியல்!

சாத்தான்குள விவகாரத்தில் நீதி வேண்டும். அமைப்பைத் திருத்தி, சட்டத்தை இறுக்கி, ஒழுங்குபடுத்த வேண்டும். அதை நோக்கிச் செலுத்த வேண்டிய சிந்தனையை விட்டுவிட்டு, ஆளாளுக்கு பணம் கொடுப்பதற்குத்தானே அலைகிறார்கள். இருவருக்கும் அரசியலே கொடுக்கல் வாங்கல்தான்!