Published:Updated:

தி.மு.க-வுக்கு செக் வைக்கும் எடப்பாடியின் மூவ்! - பிப்ரவரியில் பிரமாண்ட அறிவிப்பா?

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

இந்தத் தேர்தல் களத்தில் கூட்டணி பலம், கட்சிகளின் பலத்தைத் தாண்டி இரண்டு கட்சிகளாலும் மக்களுக்குச் சொல்லப்படும் வாக்குறுதிகள் முக்கியப் பங்கு வகிக்கவிருக்கின்றன.

`தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்கிற உத்வேகத்தில் தீவிரமாக இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் பிரசாரத்தின் நடுவில் பல அறிவிப்புகளையும் தொடர்ந்து வெளியிடவிருக்கிறார். கடைசி நேரத்தில் எடப்பாடி அறிவிக்கப்போகும் அறிவிப்பு அ.தி.மு.க இமேஜுக்கு பெரும் பலமாக அமையப்போகிறது என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்கிற உத்வேகத்தில் தீவிரமாக இருக்கிறது. பத்து ஆண்டுகளாகப் பறிகொடுத்த ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என எதிர்க்கட்சியான தி.மு.க-வும் களம் இறங்கியுள்ளது. இரண்டு திராவிடக் கட்சிகளுமே வெறும் கட்சி பலத்தை மட்டும் இந்தத் தேர்தலில் நம்பாமல், தேர்தல் வியூக நிபுணர்களையும் களத்தில் இறக்கியுள்ளன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க-வின் தேர்தல் வியூகத்தை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான டீம் மேற்கொண்டுவருகிறது. இதுவரை `ஒன்றிணைவோம் வா’, `ஸ்டாலின் வர்றாரு... விடியல் தர போறாரு’ போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம் தேர்தல் பணிகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோல் சுனில் தலைமையில் அ.தி.மு.க-வுக்குச் செயல்படும் டீம், `வெற்றிநடை போடும் தமிழகம்’ என்கிற அடைமொழியோடு எடப்பாடியின் பிரசாரத்தை முன்னெடுத்துவருகிறது. இந்தப் பிரசார யுக்திகளைத் தாண்டி மக்களிடம் தங்கள் செல்வாக்கை நிரூபணம் செய்ய இரண்டு கட்சிகளிலும் கடும் திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன.

இந்தத் தேர்தல் களத்தில் கூட்டணி பலம், கட்சிகளின் பலத்தைத் தாண்டி இரண்டு கட்சிகளாலும் மக்களுக்குச் சொல்லப்படும் வாக்குறுதிகள் முக்கிய பங்கு வகிக்கவிருக்கின்றன. 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அறிவித்த தேர்தல் அறிக்கை இந்திய அளவில் பேசுபொருளாக மாறியது. அதன் பிறகு அதே யுக்தியை அ.தி.மு.க-வும் பின்பற்ற ஆரம்பித்தது.

வரும் தேர்தலில் இரண்டு திராவிடக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுமே பேசுபொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம் என்று ஸ்டாலின் சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குறுதிகள் தி.மு.க-வுக்கு ப்ளஸ்ஸாக மாறும் எனறு ஆளும் தரப்புக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.

இந்தநிலையில் வரும் பிப்ரவரி மாதம், முதல் வாரம் தமிழகச் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மக்களைக் கவரும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட எடப்பாடி தலைமையிலான அரசு திட்டமிட்டுவருகிறது. இதற்கான தயாரிப்புகளை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டீம் ஒன்று மேற்கொண்டுவருகிறது. இரண்டு முக்கிய வாக்குவங்கிகளைக் குறிவைத்து தனது அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்று எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார். அதன்படி மகளிர் வாக்குகளைக் குறிவைத்து அவர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. இரண்டாவதாக, கிராமப்புற வாக்குகளைக் குறிவைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றையும் எடப்பாடி வெளியிடவிருப்பதாக இப்போது தகவல் கசிந்துள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதாவது தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளிலுள்ள விவசாயக் கடன்களை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இதைக் கையில் எடுக்கவிருக்கும் எடப்பாடி. வரும் பிப்ரவரி மாதம் தமிழக கூட்டுறவு வங்கிகளில் உள்ள 20,000 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பு வெளியிடவிருக்கிறார். இந்த அறிவிப்பைத் தனது தேர்தல் வெற்றிக்கான பிரமாஸ்திரமாகப் பயன்படுத்த நினைக்கிறார் எடப்பாடி. இதைத் தவிர, தேர்தல் அறிக்கையிலும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு தி.மு.க-வை திக்குமுக்காடச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி தரப்பு திட்டத்தில் உள்ளது.

இது தி.மு.க தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள் அ.தி.மு.க தரப்பினர். `விவசாயக் கடன்களை உடனடியாக ரத்து செய்வதற்குத் தமிழகத்தின் நிதி ஆதாரம் ஒத்துழைக்குமா?’ என்கிற கேள்வி அதிகாரிகள் மத்தியில் உள்ளது. ஆனால், எந்த விலை கொடுத்தேனும் இந்த அறிவிப்பை வரும் மாதத்துக்குள் செயல்படுத்திட முடிவெடுத்திருக்கிறாராம் எடப்பாடி.

அடுத்த கட்டுரைக்கு