Published:Updated:

அழைத்த ஸ்டாலின்; அமெரிக்க ரிட்டர்ன்... மதுரை மத்தியை மீண்டும் கைப்பற்றிய பி.டி.ஆர்! #TNelections2021

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

திமுக-வின் தகவல் தொழில்நுட்ப அணியையும் கவனித்துவந்தது பழனிவேல் தியாகராஜன்தான். கடந்த 5 ஆண்டுகளிலும் பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடங்கி உரையாற்றும் வாய்ப்பை திமுக தலைமை இவருக்கே வழங்கியது.

நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவர் பி.டி.ராஜனின் பேரனும், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகனுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்; திமுக எம்.எல்.ஏ-க்களில் வித்தியாசமானவர். அமெரிக்காவின் ஆசியன் பசிபிக் வங்கியின் உயரதிகாரியாக மாதத்துக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்துவந்தவர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் அழைத்ததால் அரசியலுக்கு வந்தார். மதுரை மத்தியத் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு 64,662 வாக்குகளைப் பெற்ற பழனிவேல் தியாகராஜன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மா.ஜெயபாலை 5,762 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிப் பிரச்னைகளை சட்டமன்றத்தில் முன்வைத்து பலவற்றுக்குத் தீர்வுகண்டதோடு, தனது தொகுதிக்குச் செய்த பணிகளை ஆறு மாதங்களுக்கு ஒரு ரிப்போர்ட்டாக ஊடகம் மூலம் வெளியிட்டதோடு, தொகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் அதை நேரடியாகவும் வழங்கினார். இதன் மூலம் இந்திய அளவில் எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு முன்மாதிரியான எம்.எல்.ஏ-வாகச் செயல்பட்டார் என்றே சொல்ல வேண்டும். திமுக-வின் தகவல் தொழில்நுட்ப அணியையும் கவனித்துவந்தது பழனிவேல் தியாகராஜன்தான். கடந்த ஐந்து ஆண்டுகளிலும் பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடங்கி உரையாற்றும் வாய்ப்பை திமுக தலைமை இவருக்கே வழங்கியது.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

சட்டமன்ற உறுப்பினராக தனக்கு வாய்ப்பளித்த மதுரை மத்திய தொகுதி மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயல்பட்டார் என்று சொல்லத்தக்க வகையில், அவரது செயல்பாடுகள் அமைந்ததால், இந்த முறையும் கட்சித் தலைமை அவருக்கே மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது. 1957-ம் ஆண்டு முதல், ஒரு இடைத்தேர்தல் உட்பட இதுவரை 14 தேர்தல்களை இந்தத் தொகுதி சந்தித்துள்ளது. இவற்றில் காங்கிரஸ் கட்சி நான்கு முறையும், திமுக ஐந்து முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும், அதிமுக., தேமுதிக, சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறை பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து அதிமுக சார்பில் ஜோதி முத்துராமலிங்கம், அமமுக சார்பில் சிக்கந்தர் பாட்ஷா, மக்கள் நீதி மய்யம் சார்பில் வி.பி.மணி, நாம் தமிழர் கட்சி சார்பில் பாண்டியம்மாள் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

சென்ற முறை வென்று மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்த பழனிவேல் தியாகராஜன், நேற்று வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னணியில் இருந்தார். தபால் வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் இரண்டில் பதிவாகியிருந்த வாக்குகளிலும் வெற்றி பழனிவேல் தியாகராஜனின் பக்கமே இருந்தது. அனைத்துச் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டபோதும் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தார். முடிவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக-வின் ஜோதி முத்துராமலிங்கத்தைவிட 34,176 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு