Published:Updated:

``3 கிலோ நகைகள், ஸ்ரீ ரெட்டியுடன் டிக்டாக், ஹீரோ ஆசை!" -`நடமாடும் நகைக்கடை' ஹரி நாடார்

ஹரி நாடார்

பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தவர் ஹரி நாடார். பிரபல தெலுங்கு நடிகை ஶ்ரீரெட்டியுடன் இவர் தோன்றும் டிக்டாக் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. இதுகுறித்துப் பேசும்போது சிலிர்த்துப்போகிறார் ஹரி நாடார்.

``3 கிலோ நகைகள், ஸ்ரீ ரெட்டியுடன் டிக்டாக், ஹீரோ ஆசை!" -`நடமாடும் நகைக்கடை' ஹரி நாடார்

பனங்காட்டுப் படை கட்சியின் வேட்பாளராக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடம் பிடித்தவர் ஹரி நாடார். பிரபல தெலுங்கு நடிகை ஶ்ரீரெட்டியுடன் இவர் தோன்றும் டிக்டாக் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. இதுகுறித்துப் பேசும்போது சிலிர்த்துப்போகிறார் ஹரி நாடார்.

Published:Updated:
ஹரி நாடார்

தோளில் புரளும் நீண்ட தலைமுடி, கழுத்து மற்றும் கைகளில் கிலோ கணக்கில் தொங்கும் தங்க நகைகள், ஆடம்பர கார் பவனி என பந்தாவாக வலம் வருபவர் ஹரி நாடார்! நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் போட்டியிட்டு அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு அடுத்த இடம்பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

`பனங்காட்டுப் படை கட்சி'யின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாரைச் சந்தித்தோம்....

``நடமாடும் நகைக்கடை' போல், ஏன் இப்படியொரு வித்தியாசமான தோற்றம்?''

``திருநெல்வேலி மாவட்டத்தில் மேல இலந்தைக்குளம் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். `நிறைய தங்க நகைகள் அணிந்துகொள்ள வேண்டும்; நீளமாக தலைமுடி வைத்துக்கொள்ள வேண்டும்' என்பதெல்லாம் என் சின்ன வயசு ஆசைகள். ஆனால், தங்க நகைகள் அணியும் அளவுக்கு அப்போது வசதியில்லை. அதனால் தலைமுடியை மட்டும் நீளமாக வளர்த்திருந்தேன். இப்போது வசதி வாய்ப்புகள் பெருகிவிட்ட பிறகு நகைகளையும் அணிந்துகொள்கிறேன்.''

ஹரி நாடார்
ஹரி நாடார்

``நகைகள் எத்தனை கிலோ தேறும்... மொத்த மதிப்பு என்ன?''

``மொத்தம் என்னிடம் ஏழரை கிலோ நகைகள் இருக்கின்றன. உடம்பில் அணிந்திருக்கும் நகைகள் மட்டும் 3 கிலோ தேறும். இன்றைய மதிப்புக்கு இந்த நகைகளின் மொத்த மதிப்பு என்னவென்று நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்!''

``இவ்வளவு பெரிய வருமானத்துக்கு என்ன தொழில் செய்கிறீர்கள்?''

``இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இங்கே முதலீடு தேவைப்படும் தொழிலதிபர்களுக்கும் இடையே பாலமாக இருந்து பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்துவருகிறேன். இதுதவிர, அரசு அனுமதியோடு முறையான வகையில் வட்டித் தொழிலும் செய்துவருகிறேன்.''

ஹரி நாடார்
ஹரி நாடார்

``கடன் வாங்கித் தருவதாகச் சொல்லி, வெளிமாநிலத்தவரை ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தவறான தொழில்களை நீங்கள் செய்துவருவதாகச் சொல்கிறார்களே?''

``அரசியல் ரீதியாக என்னைப் பழிவாங்க இதுபோன்ற திட்டமிட்ட பொய்ச் செய்திகளை சிலர் இணையத்தில் பரப்பி வருகிறார்கள். நான் யாரையும் ஏமாற்றியிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் என் மீது புகார் கொடுத்திருக்கலாமே... நாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டதும் தெருத்தெருவாகப் பிரசாரம் சென்றதும் உலகுக்கே தெரிந்த விஷயம். என்னைப் பார்க்க முடியாது என்று சொல்பவர்கள்கூட அப்போது பார்த்திருக்கலாமே... யாரும் சந்திக்க முடியாத இடத்தில் நான் இல்லையே!

என் சமூகத்தில் உள்ள அரசியல் கட்சியினரேகூட என் வளர்ச்சியைப் பிடிக்காமல், என் பெயருக்குக் களங்கம் விளைவிக்கின்ற வகையில், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புகிறார்கள்.''

``அரசியலில், உங்கள் புகழைக் கெடுக்க நினைப்பவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்?''

``சமத்துவ மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்று நாடார் சமுதாயம் சார்ந்த கட்சிகளே நிறைய இருக்கின்றன. இந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எங்கள் சமுதாய வாக்குகளினால்தான் வெற்றி பெறுகின்றனர். ஆனால், பதவிகளுக்குச் சென்றுவிட்ட பிறகு, சமுதாய பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பதில்லை. இதையெல்லாம் நாங்கள் மக்களிடம் சுட்டிக்காட்டுகிறோம். எனவே, இந்தக் கட்சிகளைச் சேர்ந்த சிலரேகூட என்மீது அவதூறு பரப்பலாம் இல்லையா?''

ஶ்ரீரெட்டி - ஹரி நாடார்
ஶ்ரீரெட்டி - ஹரி நாடார்

``உங்கள் மீது வழக்குகள் எதுவும் இல்லை என்கிறீர்களா?''

``வழக்குகள் இருக்கின்றன. சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக நான் செயல்பட்டதாகக் கூறி ஒரு அரசியல் வழக்கு, எங்கள் கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டபோது, பஸ்ஸை எரித்ததாக ஒரு பொய் வழக்கு, ஸ்டெர்லைட் மற்றும் காவிரி போராட்ட வழக்குகள் என மொத்தம் 10 வழக்குகள் என் மீது இருக்கின்றன.''

``ரோல்ஸ்ராய் போன்ற விலையுயர்ந்த கார்களில் வந்து ஏழை மக்களிடையே வாக்கு சேகரிக்கிறீர்களே..?"

``ஃபார்ச்சுனர், ஃபியஸ்டா, இனோவா என இந்த மூன்று கார்கள் மட்டும்தான் என்னுடைய சொந்த கார்கள்! மற்றவையெல்லாம் என் நண்பர்களுடையவை. ரோல்ஸ்ராய் கார் என் இஸ்லாமிய நண்பர் ஒருவருடையது!''

ஶ்ரீரெட்டி - ஹரி நாடார்
ஶ்ரீரெட்டி - ஹரி நாடார்

``நடிகை ஶ்ரீரெட்டியுடன் டிக் டாக் வீடியோக்களில் கலக்குகிறீர்களே.... எப்படி பழக்கம்?''

``திரைப்படங்களுக்கும் நான் ஃபைனான்ஸ் செய்துவருகிறேன். அந்த வகையில்தான் ஶ்ரீரெட்டி என்னை வந்து சந்தித்தார். இதுதான் ஶ்ரீரெட்டிக்கும் எனக்குமான உறவு. ஒரு நிகழ்ச்சியின்போது ஶ்ரீரெட்டி, செல்போனில் படம் பிடித்தார். நானும்கூட செல்பிதான் எடுக்கிறார் என்று நினைத்தேன். ஆனால், அந்த டிக்டாக் வீடியோ வைரலான பிறகுதான் எனக்கே விஷயம் தெரிந்தது.''

ஹரி நாடார்
ஹரி நாடார்

``சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் ஆசை இருக்கிறதா?''

``என்னுடைய தோற்றத்தைப் பார்த்து, படத்தில் நடிக்கச் சொல்லி சிலர் என்னை அணுகினார்கள்தான். இப்போது எனக்கேற்ற கதை உருவாக்கத்தில் இயக்குநர்கள் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள். பொருத்தமான கதைகள் கிடைத்தால் ஹீரோவாக நடிப்பேன்!''