Published:Updated:

பரபரக்கும் பஞ்சாப் தேர்தல் களம்... களத்தில் முந்தி நிற்பது காங்கிரஸா... ஆம் ஆத்மியா?

ராகுல் காந்தி - சரண்ஜித் சிங் சன்னி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி - சரண்ஜித் சிங் சன்னி

கொரோனா காலத்தில் எளிய மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவி செய்த சோனு சூட், காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

பரபரக்கும் பஞ்சாப் தேர்தல் களம்... களத்தில் முந்தி நிற்பது காங்கிரஸா... ஆம் ஆத்மியா?

கொரோனா காலத்தில் எளிய மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவி செய்த சோனு சூட், காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ராகுல் காந்தி - சரண்ஜித் சிங் சன்னி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி - சரண்ஜித் சிங் சன்னி

ஐந்து மாநிலத் தேர்தல்களில், உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பது பஞ்சாப் தேர்தல் களம்தான்!

ஆளும் காங்கிரஸின் உட்கட்சிப்பூசல்கள், மத அவமதிப்புக் கொலைகள் தொடங்கி பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள், முதல்வரின் உறவினர்கள் வீட்டில் நடந்த அமலாக்கத் துறையின் சோதனைகள் என பஞ்சாப் தேர்தல் களத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. 117 தொகுதிகள்கொண்ட பஞ்சாப்பில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் பிரதானமாக மோதிக்கொள்கின்றன. பிப்ரவரி 20-ம் தேதி, அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக் கிறது. அனல்பறக்கும் பஞ்சாப் தேர்தல் களத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

பக்வந்த் மான் - அரவிந்த் கெஜ்ரிவால்
பக்வந்த் மான் - அரவிந்த் கெஜ்ரிவால்

அதிருப்தி அலையை வெல்லுமா காங்கிரஸ்?

2017 தேர்தலுக்கு முன்பு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எந்தெந்தப் பிரச்னைகளை யெல்லாம் சரிசெய்வோம் என்று பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்ததோ, அந்தப் பிரச்னைகள் எதுவுமே இப்போதும் சரி செய்யப்படாமல் இருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம், மணல் மாஃபியாக்கள், நிலத்தடி நீர் குறைந்துவருவது, தீராத கடன் சுமை என மாநிலத்தின் முக்கியப் பிரச்னை எதையுமே ஆளும் காங்கிரஸ் தீர்த்து வைக்கவில்லை. அதோடு, மின்சாரக் கட்டணக் குளறுபடிகள், தண்ணீர்ப் பிரச்னை, மின்வெட்டு எனக் கூடுதல் பிரச்னைகளும் சேர்ந்துகொண்டன. இதற் கிடையில் உட்கட்சிப்பூசல்கள் காரணமாக, பஞ்சாப் காங் கிரஸின் முக்கியத் தலைவரும், இரண்டு முறை பஞ்சாப் முதல்வராக இருந்தவருமான அமரீந்தர் சிங்கையும் இழந்தது காங்கிரஸ். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, ஆளும் காங்கிரஸ் அரசுமீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக் கின்றன.

இந்த அதிருப்தி அலையைச் சமாளிக்க, சுமார் 32 சதவிகித தலித் மக்கள் வாழும் பஞ்சாப்பில், முதன்முறையாகத் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கியது கட்சித் தலைமை. மூன்று மாதங்களுக்கு மேலாக பஞ்சாப்பின் முதல்வராகச் செயல்பட்டுவரும் சரண்ஜித் சிங் சன்னியையே எதிர்வரும் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்பது காங்கிரஸின் திட்டம். அது, அதிகார மட்டத்திலிருக்கும் ஜாட் சமூக மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருப் பதாகத் தெரிகிறது. அதிகாரபூர்வமாக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கா விட்டாலும், சரண்ஜித் சிங் சன்னியை முன்னிறுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டிருக் கிறது காங்கிரஸ் கட்சி. அந்த வீடியோவில், முதல்வர் வேட்பாளர் ரேஸில் இடம் பெற்றிருக்கும் மற்றொருவரான நவ்ஜோத் சிங் சித்துவின் புகைப்படம்கூட இடம்பெற வில்லை என்பதால், சரண்ஜித்தான் முதல்வர் வேட்பாளர் எனத் தெரிகிறது.

கொரோனா காலத்தில் எளிய மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவி செய்த சோனு சூட், காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவரின் தங்கை மாளவிகா சூட், மோகா தொகுதியில் போட்டியிடுகிறார். எளிய மக்கள் மத்தியில் சோனு சூட்டுக்கு இருக்கும் ஆதரவைச் சாதகமாக்கி, பிரசாரம் செய்துவருகிறது காங்கிரஸ்!

ராகுல் காந்தி - சரண்ஜித் சிங் சன்னி
ராகுல் காந்தி - சரண்ஜித் சிங் சன்னி

ஆட்சியைப் பிடிக்குமா ஆம் ஆத்மி?

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் கூட்டுத் தலைநகரான சண்டிகரின் உள்ளாட்சித் தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை ஓரங்கட்டி முதலிடத்தைப் பிடித்தது ஆம் ஆத்மி. அந்த உற்சாகத்தோடு பஞ்சாப் தேர்தல் களத்தில் பணியாற்றிவருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். முதல்வர் வேட்பாளருக்கான சரியான முகமில்லாமல் தவித்துக்கொண்டிருந்த ஆம் ஆத்மி, மக்கள் மூலமாகவே முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. தொலைபேசி அழைப்புகள் மூலம் வாக்குகள் சேகரித்து, ஜாட்-சீக்கியரான பக்வந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் கெஜ்ரிவால். மாநிலத்தில் தலித் மக்களுக்கு அடுத்தபடியாக அதிகம் வாழ்வது ஜாட் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு முறை எம்.பி-யான பக்வந்த் மான், புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் என்பதால் பஞ்சாப் மக்கள் மத்தியில் அவருக்கு அறிமுகம் தேவைப்படவில்லை. ஆனால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, ``ஆம் ஆத்மி, மக்களிடம் சர்வே நடத்தி முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தது, தேர்தல் விதிக்குப் புறம்பானது. மக்கள் மனதைக் குழப்பும் சதி வேலை இது’’ என்று தேர்தல் கமிஷனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

`டெல்லி மாடல்’ என்பதை முன்வைத்து, `அங்கு செய்துகொண்டிருக்கும் விஷயங்களை இங்கும் செய்வோம்’ எனப் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகிறது ஆம் ஆத்மி. மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், 24 மணி நேரமும் இலவசக் குடிநீர், 18 வயதுக்கு மேலான பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் எளிய மக்களை ஈர்த்திருக்கின்றன. ``ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், மாநில பட்ஜெட் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு பட்ஜெட் தயாரிக்கப்படும்’’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருப்பதும் மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸ் மேலிருக்கும் அதிருப்தியைச் சாதகமாக்கி, நகர்ந்து கொண்டிருக்கும் ஆம் ஆத்மிக்கு இளைஞர்கள், கட்சி சார்பற்ற வாக்காளர்கள் ஆகியோரின் வாக்குகள் கணிசமாகக் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முட்டிமோதும் அகாலி தளம்!

பஞ்சாப்பை ஐந்து முறை ஆட்சிசெய்த பிரகாஷ் சிங் பாதலின் சிரோமணி அகாலி தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியோடு இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. `வேளாண் சட்டங்களை எதிர்த்து பா.ஜ.க கூட்டணி யிலிருந்து விலகியதைத் தவிர, அகாலி தளம் கட்சி விவசாயிகளுக்காக ஒன்றும் செய்யவில்லை’ என்ற மனநிலை பஞ்சாப் விவசாயிகள் மத்தியில் இருந்துவருவது அக்கட்சிக்கு மைனஸாக அமைந்திருக்கிறது. இருந்தும், பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணி அமைத்திருப்பதால் தலித் மக்களும், தனது பாரம்பர்யமான வாக்காளர்களும் கைகொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தேர்தல் களத்தில் நிற்கிறது அகாலி தளம்.

சிந்திச் சிதறும் வாக்குகள்!

2017 சட்டமன்றத் தேர்தலில், 26 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் என்பது 5,000 வாக்குகளுக்குக் குறைவாகவும், 16 தொகுதிகளில் 3,000 வாக்குகளுக்குக் குறைவாகவும் இருந்தன. இந்த முறை பலவிதமாக வாக்குகள் சிதறுவதால், பல தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் என்பது மிக மிகக் குறைவானதாகவே இருக்கும் என்கிறார்கள் பஞ்சாப் அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

காங்கிரஸிலிருந்து விலகிய அமரீந்தர் சிங், `பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்று தனிக்கட்சி தொடங்கி, பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்திருக்கிறார். இந்தக் கூட்டணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைச் சில தொகுதிகளில் சிதறடிக்க வாய்ப்பிருக்கிறது. அமரீந்தரின் கூட்டணியில், அகாலி தளம் கட்சியிலிருந்து அதிருப்தி காரணமாக வெளியேறிய தலைவர்கள் தொடங்கிய `சிரோமணி அகாலி தளம்’ (சன்யுக்த்) கட்சியும் இடம்பெற்றிருக்கிறது. எனவே, சிரோமணி அகாலி தளத்தின் வாக்குகளை இந்தக் கூட்டணி சிதறடிக்கும் எனத் தெரிகிறது. கடந்த முறை, தலித் மக்களின் வாக்குகள் அடர்த்தியாக இருக்கும் 12 தொகுதிகளில், முக்கியக் கட்சிகளின் வாக்குவங்கிகளைப் பதம்பார்த்தது பகுஜன் சமாஜ் கட்சி. இந்த முறை அகாலி தளத்தோடு கூட்டுச் சேர்ந்திருப்பதால் காங்கிரஸ், ஆம் ஆத்மி என இரண்டு கட்சிகளுக்கும் சில தொகுதிகளில் பாதிப்பை உண்டாக்கும்.

பஞ்சாப்பிலுள்ள 32 விவசாயச் சங்கங்களில், 22 சங்கங்கள் இணைந்து தொடங்கியிருக்கும் `சம்யுக்தா சமாஜ் மோர்ச்சா’ கட்சி, 117 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. பஞ்சாப்பின் மிகப்பெரிய வேளாண் சங்கமான பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்), விவசாயிகளின் கட்சிக்கு ஆதரவும் தரவில்லை, எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. பல்பீர்சிங் தலைமையிலான இந்தக் கட்சி, பெரும் புரட்சியைச் செய்யாவிட்டாலும், முக்கியக் கட்சிகளின் வாக்குகளை நிச்சயம் சிதறடிக்கும். குறிப்பாக, விவசாயிகளின் ஆதரவைப் பெற்றுவந்த ஆம் ஆத்மியின் வாக்குகளைச் சிதறடிக்கும்.

அமரீந்தர் சிங் - மோடி
அமரீந்தர் சிங் - மோடி

களத்தில் முந்துவது யார்?

தாறுமாறாக வாக்குகள் பிரிவதால், தொங்கு சட்டமன்றம் என்ற நிலைகூட பஞ்சாப்பில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. `பாரம்பர்யமான வாக்காளர்களின் தயவால் தப்பித்துக்கொள்ளலாம்’ என்ற நம்பிக்கையில் காங்கிரஸும், `காங்கிரஸ் வேண்டாம் என நினைத்துக்கொண்டிருக்கும் மக்களின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று ஆம் ஆத்மியும் களத்தில் மோதிக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில், காங்கிரஸைவிட ஆம் ஆத்மி ஒரு படி முந்தி நிற்கிறது. கணிப்புகளில் முந்தி நிற்கும் ஆம் ஆத்மி, களத்தில் முந்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism