Published:Updated:

வேகமெடுக்கும் பன்னீர்... திருச்சி மாநாட்டில் சசிகலா? - எடப்பாடிக்குப் புதிய குடைச்சலா?!

ஓ.பன்னீர்செல்வம்

ஒற்றைத் தலைமை விவகாரத்துக்குப் பின்னர் மிகப்பெரிய மாநாட்டை பன்னீர் தரப்பு ஏற்பாடு செய்திருப்பதால், திருச்சி முப்பெரும் விழா முக்கிய கவனம் பெற்றிருக்கிறது.

Published:Updated:

வேகமெடுக்கும் பன்னீர்... திருச்சி மாநாட்டில் சசிகலா? - எடப்பாடிக்குப் புதிய குடைச்சலா?!

ஒற்றைத் தலைமை விவகாரத்துக்குப் பின்னர் மிகப்பெரிய மாநாட்டை பன்னீர் தரப்பு ஏற்பாடு செய்திருப்பதால், திருச்சி முப்பெரும் விழா முக்கிய கவனம் பெற்றிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம்

எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சியின் பொன்விழா என முப்பெரும் விழா மார்ச் மாதம் நடத்தப்படும் என, பிப்ரவரி 20-ம் தேதி நடந்த பன்னீர்செல்வம் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. ஈரோடு இடைத்தேர்தலில் பங்கேற்காதது, பன்னீர் அணியிலிருந்து பலபேர் எடப்பாடி அணிக்கு தாவியது உள்ளிட்ட பல காரணங்களால் முப்பெரும் விழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், சில தனிப்பட்ட காரணங்களாலும் முப்பெரும் விழா தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டது.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

இந்த நிலையில், திருச்சியில் வரும் 24-ம் தேதி முப்பெரும் விழா நடத்தப்படும் என்று பன்னீர் கடந்த வாரம் அறிவித்தார். மேலும், கட்சியிலிருந்து முன்பு நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி ஆகியோருக்கு உறுதியாக அழைப்பு விடுக்கப்படும் என அறிவித்தார். இது தொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பில், `சசிகலாவுக்கும் அழைப்பு விடுக்கப்படுமா’ என்ற கேள்விக்கு பதிலளித்த பன்னீர், முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும். அனைவரும் கலந்துகொள்வார்கள்" என்று கூறியிருந்தார்.

அதன்படி, சசிகலாவை போனில் தொடர்புகொண்டு பன்னீர் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று தகவல் வருகிறது.
அதேபோல, சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க டெல்லி தலைமையிலிருந்து சிலரை அழைக்கவிருப்பதாகவும் தகவலைக் கசிய விடுகிறார்கள் பன்னீர் தரப்பினர். இந்த நிகழ்ச்சிக்காக பன்னீர் அணியின் 80-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களும், தங்கள் சார்பாகக் குறைந்தது 250 பேரை அழைத்து வரவேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்துவருகின்றனர்.

சசிகலா, ஓ.பி.எஸ்
சசிகலா, ஓ.பி.எஸ்

வழக்குகளில் தொடர் பின்னடைவு காரணமாகச் சோர்ந்து கிடக்கும் பன்னீரின் ஆதரவாளர்களுக்கு இந்த நிகழ்ச்சி புதுத் தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதேபோல, மிகப் பிரமாண்டமான கூட்டத்தை பன்னீர் கூட்டினால், அது எடப்பாடிக்குக் குடைச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

இது தொடர்பாக பன்னீர் அணியின் தேர்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சுப்புரத்தினத்திடம் கேட்டபோது, "தி.மு.க தேர்தலில் பங்கேற்கலாமா வேண்டாமா என்று 1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில்தான் அண்ணா வாக்கெடுப்பு வைத்து முடிவுசெய்தார். திருச்சி மாநாடு திருப்புமுனை மாநாடு என்று அண்ணா பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த திருச்சியில் அ.தி.மு.க-வின் திருப்புமுனை மாநாட்டை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ஏற்பாடு செய்திருக்கிறார்.

சுப்புரத்தினம்
சுப்புரத்தினம்

தொண்டர்களின் உணர்வுக்கு எடப்பாடி தரப்பு கொஞ்சம்கூட மதிப்பளிக்கவில்லை. எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட கழகத்தின் சட்டவிதிகளைச் சுயலாபத்துக்காக மாற்றிய எடப்பாடியின் உண்மை முகம் மாநாட்டில் அம்பலப்படுத்தப்படும். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க-வை ஒன்றிணைப்பதே இந்த மாநாட்டின் குறிக்கோளாகும். அதன்படி, சசிகலா அம்மாவுக்கு முறைப்படி அழைப்பு விடப்படும். அதேபோல, பல முக்கியத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். அ.தி.மு.க-வில் புரட்சியை ஏற்படுத்தும் மாநாடாக இது அமையும். எடப்பாடியின் துரோக முகம் கிழிக்கப்படும்போது ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஸின் பின்னால் அ.தி.மு.க அணிவகுக்கும். அதற்கு இந்த மாநாடு தொடக்கப்புள்ளியாக இருக்கும்" என்றார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, "கூலிக்கு ஆளைக் கூட்டி, அவர்கள்தான் அ.தி.மு.க தொண்டர்கள் என்ற மாயையை உருவாக்க நினைக்கிறார் ஓ.பி.எஸ். அதற்காக பல கோடி ரூபாயை இறக்கி இனி ஆளைப் பிடிப்பார்கள். ஓ.பி.எஸ்-ஸுக்கு உண்மையிலேயே ஆதரவு இருந்திருந்தால், இதுவரையில் ஒரு நிர்வாகியைக்கூட அவரது பக்கம் இழுக்க முடியவில்லையே?

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

பிரியாணிக்காகக் கூடும் நபர்களையெல்லாம் தொண்டர்கள் எனக் கூறி, அ.தி.மு.க-வை அசிங்கப்படுத்துகிறார். எடப்பாடி தலைமையை நீதிமன்றம் உறுதிசெய்துவிட்டது. நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பக்கத்தில்தான் இருக்கிறார்கள். நரி இடம்போனாலென்ன வலம்போனாலென்ன என்பதுபோல, ஓ.பி.எஸ்-ஸின் நிகழ்ச்சியெல்லாம் தொண்டர்கள் மத்தியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது" என்றார்.