சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் எல்.வேல்முருகனுக்கும் சபாநாயகர் அப்பாவுக்கும் வாக்குவாதம் நடந்தது. கேள்வி நேரத்தில் துணைக் கேள்வி கேட்க எம்.எல்.ஏ வேல்முருகன் அனுமதி கேட்டபோது, சபாநாயகர் அப்பாவு அவருக்கு அனுமதி வழங்காமல் அமரச் சொல்லியிருக்கிறார். அப்போது வேல்முருகன் "இதெல்லாம் நியாயமா... மூன்று நாள்களாக அவையில் துணைக் கேள்விக்கு வாய்ப்புக் கேட்கிறேன், தர மறுக்கிறீர்கள்" எனச் சத்தமாகக் கேட்டார்.

"யாரைக் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என எனக்குத் தெரியும். அவையில் குரலை உயர்த்தாமல் அமருங்கள்" என்று சபாநாயகர் காட்டமாகப் பதிலளித்தார். ஆனால், வேல்முருகன் இருக்கையில் அமராமல் நின்று சத்தமாகப் பேசினார். இதனால் இவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் அப்பாவு, "கடந்த மாதம் துணைக் கேள்விகள் கேட்பதற்கு மட்டும் நான்கு முறை அனுமதி அளித்திருக்கிறேன். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களிலெல்லாம் வாய்ப்பளித்திருக்கிறேன்.
ஆனால், ஒரு கேள்விகூட கேட்காமல் அவையில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதனடிப்படையில்தான் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது. கட்சி சார்பாகவோ, வேறு எந்த நோக்கத்துடனோ பேச நேரம் கொடுக்கப்படுவதில்லை. இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவையில் குரல் உயர்த்திப் பேசக் கூடாது" என பதிலளித்தார். அதைத் தொடர்ந்து, ஒ.பன்னீர் செல்வத்துக்கு துணைக் கேள்வி கேட்க வாய்ப்பளிக்கப்பட்டது.

அப்போது ஓ.பி.எஸ்., " சபாநாயகர் மிக நேர்த்தியாக அவையைக் கையாள்கிறார். ஏற்கெனவே அவர் ஆசிரியராக இருந்தவர் என்பது தெரியும். சில நேரம் கனிவான ஆசிரியராகவும், சில நேரம் கண்டிப்பான ஆசிரியராகவும் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டோம்" எனப் புகழ்ந்து பேசினார். அதைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு, "அப்படியானால் நீங்கள் துணைக் கேள்வி கேட்கவில்லையா?" எனக் கேட்டுச் சிரித்தார்.