Published:Updated:

`அமைச்சர் ஏ.வ.வேலு தனது தண்டராம்பட்டு ஊரை தூக்கிக்கொடுப்பாரா?' - சென்னையில் பரபரத்த பரந்தூர் மக்கள்

பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

பூவுலகின் நண்பர்கள் சார்பாக `பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? வீழ்ச்சியா?' எனும் தலைப்பில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் ஓர் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

`அமைச்சர் ஏ.வ.வேலு தனது தண்டராம்பட்டு ஊரை தூக்கிக்கொடுப்பாரா?' - சென்னையில் பரபரத்த பரந்தூர் மக்கள்

பூவுலகின் நண்பர்கள் சார்பாக `பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? வீழ்ச்சியா?' எனும் தலைப்பில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் ஓர் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

Published:Updated:
பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? வீழ்ச்சியா?

பரந்தூரில் புதிய விமானநிலையம் அமைப்பதற்கு எதிராக, ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்திலுள்ள 13 கிராம மக்களும் 75 நாட்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தக் கிராம மக்களை சந்திக்கச்செல்லும் அரசியல் தலைவர்களும் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று பூவுலகின் நண்பர்கள் சார்பாக `பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியா? வீழ்ச்சியா?' எனும் தலைப்பில் சென்னை நிருபர்கள் சங்கத்தில் ஓர் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன், பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தர்ராஜன், வெற்றிச்செல்வன் மற்றும் பாதிக்கப்படவுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன்
ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன்
Jerome K

வளர்ச்சி எனும் பெயரில்...

கருத்தரங்கில் கலந்துகொண்டுப் பேசிய ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன், ``வளர்ச்சி என்ற பெயரில் இங்கு இயற்கை வளங்களும் மக்களும் சுரண்டப்படுகின்றனர். இந்தியாவில் அணைகள் கட்டும்போது நூற்றுக்கணக்கான கிராமங்கள் காணாமல் போனது. அதற்காக அணைகள் வேண்டாம் என்றோ,வளர்ச்சி திட்டங்கள் வேண்டாமென்றோ சொல்லவில்லை. பெரிய அளவிலான திட்டங்கள் மூலம் இயற்கை வளங்களும் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது. பிரமாண்டமான அணைகளுக்கு பதிலாக சிறுசிறு அணைகளாக கட்டினால் 100 கிராமத்தின் நிலப்பரப்புக்கு பதிலாக ஒரு கிராமத்தின் நிலப்பரப்பு மட்டுமே தேவைப்பட்டிருக்கும். எத்தனையோ கிராமங்கள் காப்பாற்றபட்டு இருக்கலாம். அதே போல் தான் பரந்தூர் விமான நிலையம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்துவதால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். அதுவே சிறுசிறு விமான நிலையங்களாக ஆங்காங்கே கட்டி எழுப்பினால் பெரிதளவில் இயற்கை சுரண்டலும் மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் இருக்கும். ஆனால் அரசு இந்த யோசனையை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை!" என குற்றம்சாட்டினார்.

மேலும், ``அரசாங்க உத்தரவு, நீதிமன்றம், சட்டம் எல்லாம் இரண்டாவதுதான். மக்கள் சொல்வதுதான் இங்கு சட்டம்! நம்மைக் காப்பாற்ற எந்த ஹரியும் அவதாரம் எடுத்து வரமாட்டார்கள். நாம்தான் நம்மையும் நம் நிலத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு போராட்டம் ஒன்றுதான் வழி. மோடியை தோற்கடித்த ஒரே போராட்டம் விவசாயிகள் போராட்டம்! மேற்குவங்கம் நந்திகிராமில் டாடா தொழிற்சாலை அமையவிருப்பதை தோற்கடித்தது விவசாயிகள் போராட்டம்! டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்துநிறுத்தி, காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது கதிராமங்கலம், நெடுவாசல் மக்களின் போராட்டம். ஸ்டெர்லைட் ஆலையை மூடச்செய்தது, 15 உயிர்களைப் பறிகொடுத்து நடத்திய தூத்துக்குடி மக்களின் போராட்டம். ஜல்லிக்கட்டு தடையை உடைத்தது ஒட்டுமொத்த தமிழக மக்களின்போராட்டம். ஆகவே, பரந்தூர், ஏகனாபுரம் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தவேண்டும்.

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள்
Jerome K

நிலத்துக்கு மாறாக, வேலைகொடுக்கிறோம், நஷ்டஈடு கொடுக்கிறோம் என ஆசைகாட்டுவார்கள். அதை ஏற்காதீர்கள். நெய்வேலியில் என்ன செய்தார்கள் என்பது நமக்குத் தெரியும். இது அரசின் திட்டமல்ல. இதன்பின்னால் கார்ப்பரேட் இருக்கிறது. ஏர்ப்போர்ட்டுக்கான நிலத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி, அதை டெல்லி அரசிடம் கொடுக்கும். டெல்லி அரசு அதானி அம்பானிபோன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடம் கொடுக்கும். அரசின் ஏர்-இந்தியா விமான நிறுவனத்தை தனியார் டாடாவிடம் மோடிகொடுத்ததைப்போல, அதானிகளின் கைகளுக்குச்செல்லும். உண்மையில், இங்கு மோடியோ ஸ்டாலினோ ஆட்சி செய்யவில்லை. அதானி அம்பானிகள்தான் ஆள்கிறார்கள். மோடியின் பின்னால் அவர்களே நிற்கிறார்கள். எனவே, திட்டத்தை திரும்பப்பெறும் வரை மக்கள் நீங்கள் உறுதியாகப் போராடவேண்டும்" என நீதியரசர் அரிபரந்தாமன் கேட்டுக்கொண்டார்.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்
Jerome K

`அமைச்சர் ஏ.வ.வேலு அவர் ஊரை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொள்வாரா?'

அதைத்தொடர்ந்து பேசிய பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், ``சென்னையைச் சேராத, பிறமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் 70-80% சென்னை விமானநிலையத்தைப் பயன்படுத்துகிறார்கள். முறையாக, கோவை, திருச்சி, மதுரை போன்ற விமானநிலையங்களை விரிவாக்கம் செய்து அல்லது `code sharing agreement'-க்குள் கொண்டுவந்து இயக்கினால் எல்லோரும் சென்னைக்கு வரவேண்டியத் தேவையே இருக்காது. முதலில், அரசின் `சென்னையை மட்டுமே மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி' என்பது சரியான நிலைப்பாடல்ல. இருப்பினும், எதிர்காலத்தில் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படும் எனச்சொல்வீர்களேயானால், அதையே விரிவாக்கம் செய்யுங்களேன். அருகில்தான் ஒன்றிய அரசின் OTA-க்கு (Officers Training Academy) சொந்தமான 260 ஏக்கர் நிலம் இருக்கிறது, அதை எடுக்கவேண்டியதுதானே. ஏன், விவசாயம், நீர்நிலைகள், குடியிருப்புகள் என நிறைந்திருக்கும் கிராமங்களை அழிக்கவேண்டும் அமைச்சர் ஏ.வ.வேலுவின் சொந்த ஊரான தண்டராம்பட்டு ஊரை ழுமையாக எடுத்துக்கொள்ள அவர் ஒப்புக்கொள்வாரா?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், ``பரந்தூர் விமான நிலையம் அமைப்பதால் அங்குள்ள நன்செய் நிலங்கள் புன்செய் நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் நீர்நிலைகள் எல்லாம் பாழாகிவிடும். பரந்தூருக்கு அருகில் உள்ள ஏகனாபுரம், மங்கலம், மகாதேவி போன்ற 13 கிராமங்களை இந்த திட்டத்திலிருந்து காப்பாற்றுவதன் மூலம் தமிழகத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய உதவும். சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழைநீர் சென்னையை நோக்கி வரும்போது அதனை தேக்கி வைக்க இருந்த ஏரி, குளங்களை ஆக்கிரமித்ததன் விளைவே 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ளம்.

சென்னையில் உள்ள நீர்நிலைகளை பராமரிக்க தவறிய நாம் தற்போது சென்னையை சுற்றிய இருக்கக்கூடிய 4 கிராமங்களில் உள்ள ஏரி குளங்களையும் ஓடைகளையும் பாதுகாத்தால்தான் சென்னையை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற முடியும். ஆனால் பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் ஏரி குளங்கள் சூறையாடப்படும். பரந்தூரில் முக்கியமான கால்வாய், கம்பன் கால்வாய். சென்னை மக்களுக்கு தண்ணீர் அளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கம்பன் கால்வாயிலிருந்து தண்ணீர் செல்கிறது. இந்த திட்டத்தால் கம்பன் கால்வாயும் சூறையாடப்படும்.

பரந்தூர், ஏகனாபுரம் கிராம மக்கள்
பரந்தூர், ஏகனாபுரம் கிராம மக்கள்
Jerome K

13 கிராம மக்களின் நிலத்திற்கு தகுந்த நஷ்டயீட்டை அரசு தருவதாக கூறினாலும் அது மக்களுக்கு போதுமானதாக இருக்காது. ஏனென்றால் அன்று 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் இன்று 10 கோடி மதிப்பு இருக்கிறது. அரசு கொடுக்கும் பணத்தை வைத்து மக்கள் புதிதாக நிலம் வாங்கி வேறு இடத்தில் குடியேறி வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. நிலத்திற்கும் வீட்டிற்கும் விலை கொடுக்கும் அரசு மக்களின் பூர்வீகத்துக்கு (Nativity) என்ன விலை கொடுக்கப் போகிறது? சொந்தமாக விவசாயம் செய்து தற்சார்பு வாழ்வியலை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் விமான நிலையங்களில் கூலித்தொழிலாளிகளாக்க இந்தத் திட்டத்தின் மூலம் ஊக்குவிக்கிறது. ஆகவே, சென்னை வறட்சியிலிருந்தும் வெள்ளப்பெருக்கிலிருந்தும் காப்பாற்றுவதற்கும், தமிழகத்தின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

`போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை!'

ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாய நல கூட்டமைப்பைச் சேர்ந்த ஜி. சுப்ரமணி, ``இந்தியாவில் மதுப்பொருட்களுக்கு இருக்கும் பாதுகாப்பு, விவசாயப் பொருட்களுக்கு இல்லை. மதுபாட்டில்கள் பாதுகாப்பாக விநியோகம் செய்யப்படுகிறது. அதேசமயம், வேளாண் பொருட்கள் திறந்தவெளிக் கிடங்குகளில் பராமரிப்பில்லாமல் அழுகிக்கிடக்கிறது. கல்வி, போக்குவரத்து, வேளாண்மை போன்றவற்றில் வளர்ச்சியைக் கொண்டுவராத அரசு பரந்தூர் விமான நிலையத்தின் மூலமாகத்தான் வளர்ச்சியை கொண்டு வருவதாக பெருமைப்பட்டுக் கொள்கிறது.

ஜி. சுப்ரமணி
ஜி. சுப்ரமணி
Jerome K

பரந்தூர் விமான நிலையம் கொண்டு வந்தால் 13-க்கும் மேற்பட்ட ஏரிகள், 35 ஓடைகள், 15 குளங்கள் உள்பட மூவாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நன்செய், புன்செய் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும். எங்கள் நிலத்திற்கு மூன்று மடங்கு பணம் தருவதாக அரசு கூறி இருந்தாலும், அந்தப் பணத்தைக் கொண்டு பக்கத்து கிராமத்தில்கூட நிலம் வாங்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை அரசு பரந்தூர் விமானநிலைய திட்டத்தை அரசு கைவிடும்வரை, நாங்களும் போராடத்தை கைவிடப்போவதில்லை" எனத் தெரிவித்தார்.