Published:Updated:

``விவசாயிகளின் விளைபொருள்களை எங்கள் நிறுவனம் வாங்கிக்கொள்ளும்!" - பாரிவேந்தர் எம்.பி உறுதி

``இதற்கான திட்டத்தை, எங்களது விவசாயக் கல்லூரி அறிவியல் ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து வருகிறார்கள்!” - பாரிவேந்தர் எம்.பி

 பாரிவேந்தர் எம்.பி
பாரிவேந்தர் எம்.பி ( நா.ராஜமுருகன் )

"மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்திலுள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி ஆற்றின் உபரிநீரைக் கொண்டுசெல்லும் திட்டம் குறித்து, ஜல்சக்தி துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும்" என்று கரூரில் ஐ.ஜே.கே கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி தெரிவித்தார்.

பேட்டியளிக்கும் பாரிவேந்தர் எம்.பி
பேட்டியளிக்கும் பாரிவேந்தர் எம்.பி
நா.ராஜமுருகன்

இதுசம்பந்தமாக, அவர் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனை சந்தித்து மனு அளித்தார். பிறகு, மாவட்ட ஆட்சியர் அறையைவிட்டு வெளியே வந்த பாரிவேந்தர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மத்திய அரசு ஆண்டுதோறும் அளிக்கும் 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியில், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் அரசு பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் கணினி வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் நான் அறிவித்தபடி, விவசாயிகள் பலன்பெறும் வகையில், அவர்கள் விளைவிக்கும் விளைபொருள்களை எங்களது நிறுவனம் கொள்முதல் செய்யும். அதற்கான திட்டத்தை, எங்களது விவசாய கல்லூரி அறிவியல் ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து வருகிறார்கள்.

நன்னியூர் ராஜேந்திரன் வீட்டில் பாரிவேந்தர் எம்.பி
நன்னியூர் ராஜேந்திரன் வீட்டில் பாரிவேந்தர் எம்.பி
நா.ராஜமுருகன்

விரைவில் அதற்கான திட்டத்தை முன்னெடுப்போம். அதற்கு முன்னதாக, தற்போது அதிகம் விளைவிக்கக்கூடிய விளைபொருள்களைக் குளிர்பதன கிடங்கில் பதப்படுத்தி விற்பனை செய்வதற்காக, மத்திய அரசிடம் முறையிட்டு, குளிர்பதன கிடங்குகள் அமைத்துத் தர வலியுறுத்தியுள்ளோம். மைய அரசும் இந்தத் திட்டத்தை பரிசீலிப்பதாகத் தெரிவித்து உள்ளது. மேலும், விவசாயிகள் தங்களது விளைபொருள்களை பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான ரயில் பாதைகள் அமைக்கவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இதுகுறித்து, எங்களுக்கு உரிய பதில் அளித்துள்ளார்கள். விரைவில் அந்தத் திட்டம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதேபோல, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, குளித்தலை சட்டமன்றத் தொகுதி பகுதியில் பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் அளித்த கோரிக்கைகளை இன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து விவாதித்தோம். விரைவில் மாவட்ட ஆட்சித்தலைவர், அவ்வாறு கொடுக்கப்பட்ட ஏழு கோரிக்கைகளைத் தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார்.

நன்னியூர் ராஜேந்திரன் வீட்டில் பாரிவேந்தர் எம்.பி
நன்னியூர் ராஜேந்திரன் வீட்டில் பாரிவேந்தர் எம்.பி
நா.ராஜமுருகன்

'இதில் மாவட்ட நிர்வாகம் நேரடியாகத் தீர்க்கக்கூடிய பிரச்னைகளை மாவட்ட நிர்வாகம் தீர்க்கும்' என உறுதி அளித்துள்ளார். மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று தீர்க்கப்படும் பிரச்னைகள் குறித்து, மத்திய அரசிடம் தெரிவித்து, விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகப் பாடுபடுவேன்" என்று தெரிவித்தார்.

பின்னர் பாரிவேந்தர் நன்னியூரில் நடைபெற்ற, தி.மு.க நெசவாளர் அணியின் மாநில செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் மனைவியின் படத்திறப்பு நிகழ்விலும் கலந்துகொண்டார்.