Published:Updated:

``ஆட்சியில் நடப்பவற்றை கண்காணிக்க, அண்ணாமலை தனி நெட்வொர்க்கே வைத்திருக்கிறார்" - பளிச் பாரிவேந்தர்

ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர்

பிரதமர் மோடியை காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசி ஜெர்க் கொடுத்திருக்கும் ஐ.ஜே.கே கட்சித் தலைவரும், எஸ்.ஆர்.எம் பல்கலையின் வேந்தருமான பரிவேந்தரை, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சந்தித்து... சில கேள்விகளை முன்வைத்தோம்.

``ஆட்சியில் நடப்பவற்றை கண்காணிக்க, அண்ணாமலை தனி நெட்வொர்க்கே வைத்திருக்கிறார்" - பளிச் பாரிவேந்தர்

பிரதமர் மோடியை காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசி ஜெர்க் கொடுத்திருக்கும் ஐ.ஜே.கே கட்சித் தலைவரும், எஸ்.ஆர்.எம் பல்கலையின் வேந்தருமான பரிவேந்தரை, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சந்தித்து... சில கேள்விகளை முன்வைத்தோம்.

Published:Updated:
ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர்

"தி.மு.க கூட்டணியில் நீடிக்கிறீர்களா இல்லையா?"

"2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து, பல்வேறு இடங்களில் மாநாடு நடத்தி மோடியைப் பேசவைத்திருக்கிறேன். அப்போது பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு 2,40,000 வாக்குகள் பெற்றேன். 2019 எம்.பி தேர்தலிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு முயன்றோம், கைகூடவில்லை. அதனால், தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்குமாறு கட்சியினர் வற்புறுத்தியதால் இணைந்தோம். அந்தத் தேர்தலில் அதே பெரம்பலூரில் போட்டியிட்டு 6,80,000 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றேன். வாக்கு வித்தியாசம் மட்டுமே 4,05,000. தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டோம் என்றாலும், தி.மு.க சின்னத்தில் எம்.பி-யாகியிருப்பதால் அன்-அஃபிஷியலாக இன்னும் இரண்டாண்டுகள் நீடித்துதான் ஆகவேண்டும்."

எஸ்.ஆர்.எம் பல்கலை வேந்தர்
எஸ்.ஆர்.எம் பல்கலை வேந்தர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"காந்தியுடன் மோடியை ஒப்பிட என்ன காரணம்?"

"இளையராஜா அம்பேத்கருடன் ஒப்பிட்டதால் எனது பேச்சும் கவனம் பெற்றுவிட்டது. எனக்கும் மோடிக்குமான நெருக்கம் இன்று நேற்றல்ல, 2014-ல் இருந்தே தொடர்கிறது. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு மோடியை அழைத்து கவுரப்படுத்தியிருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் பிரதமரைச் சந்திக்கும் நபர்களில் நானும் ஒருவன். காந்தி போலவே தேசபக்தராக மோடி இருப்பதால்தான் அப்படிச் சொன்னேன்."

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

"தி.மு.க அரசின் செயல்பாடுகள் எப்படி?"

"திராவிடக் கட்சிகள் முதலில் தேர்தல் செலவுகளைக் குறைத்திட வேண்டும். மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் இங்குதான் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகத்தின் தாக்கம் தற்போது ஆந்திராவிலும் தென்படத்தொடங்கிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் ஒரு குடும்பத்துக்கு 40,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. பணம் இருந்தால்தான் பதவி என்ற அருவருக்கத்தக்க நிலை உருவாகிவிட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். நலத்திடங்கள் என்ற பெயரில் இலவசங்கள் கொடுக்கப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் தாங்களாகவே வாழக்கற்றுக்கொடுக்க வேண்டும். சிறப்பான முதல்வராக செயல்பட ஸ்டாலின் முயல்கிறார்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"இப்போதும் மக்கள் சம்பாதித்துதானே வாழ்கிறார்கள்?"

"சம்பாதிக்கிறார்கள் என்றாலும், பெரும்பகுதி இலவசமாகவே கிடைக்கிறது. அரசுப்பள்ளி இலவசம், அரசு மருத்துவமனை இலவசம், மாதந்தோறும் ரேஷன் குறைந்த விலை, பெண்களுக்கு இலவசப் பேருந்து என மக்களைச் சோம்பேரிகளாக்கிவிட்டனர். மக்கள் தொகை பெருகுவதும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்சமயம் 8 கோடி மக்கள் தொகை உள்ளது. இதனால், பலருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதுவே 5 கோடி மக்கள் மட்டுமே இருந்தால், வாய்ப்புகள் விரிவாகக் கிடைக்கும். அரசு ஒரு முன்னெடுப்பை எடுத்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்."

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

"வன்னியர் இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி உங்கள் கருத்து?"

"எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடந்திருக்கிறது. அவர்களுக்கும் இரண்டு கைகள் இரண்டு கால்கள்தான் இருக்கின்றன. அவர்களாகவே தங்களை வாழ்க்கையில் உயர்த்திக்கொள்ள முயல வேண்டும். இப்படி ஒரு சமூகத்துக்கு மட்டும் கொடுப்பதால், மற்ற சமூகங்களுக்குள் போட்டி ஏற்படுகிறது. இடஒதுக்கீட்டினால் சாதிகள் வலுப்பெறுமே தவிர, ஒழியாது."

"நீட் தேர்வை ஏற்கிறீர்களா?"

"கண்டிப்பாக. நீட் வந்தபிறகு எல்லாம் வெளிப்படையாகிவிட்டது. கறுப்புப் பணம் விளையாடுவது குறைந்துவிட்டது. இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனர். 2020-21 கல்வியாண்டில் எங்களது கல்லூரியில் 103 தமிழக மாணவர்களும், 47 வடமாநில மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். அவர்களில் தமிழக மாணவர்களின் அதிகபட்ச நீட் மதிப்பெண் 720-க்கு 505. அதுவே, வடமாநில மாணவர்களின் மதிப்பெண் 720-க்கு 439 மட்டுமே. அதுவே, அதற்கு முந்தைய 2019-20 கல்வியாண்டில் தமிழகத்தைச் சேர்ந்த 104 மாணவர்களும், வடமாநிலங்களைச் சேர்ந்த 46 மாணவர்களும் படிப்பில் சேர்ந்தனர். தமிழக மாணவர்களின் நீட் மதிப்பெண் என்பது அதிகபட்சமாக 400-ம், வடமாநில மாணவர்களின் மதிப்பெண் என்பது 372-ஆக இருந்தது. கிராமம், நகரம் கலந்து தமிழக மாணவர்கள்தான் அதிகளவில் மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழக அரசியல்வாதிகள் நீட் என்ற இலியூஷனைக் காட்டி மாணவர்களை ஏமாற்றி வருகிறார்கள். அரசு இதில் என்ன செய்ய வேண்டுமோ அதை விடுத்து, மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்குகிறது. நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை ஆளுநர் ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பினாலும் அவராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இது. நீட்டை வைத்து இரண்டுத் தேர்தலையே சந்தித்துவிட்டார்கள். மக்களை தவறானப் பாதையில் வழிநடத்திச் செல்கிறார்கள்."

நீட் தேர்வு
நீட் தேர்வு

"தமிழக அரசு செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை சொல்கிறாரே?"

"அண்ணாமலை தனி நெட்வர்க்கே வைத்திருக்கிறார். அதைவைத்து ஆட்சியில் நடப்பவற்றைக் கண்டுபிடித்து வெளியிடுகிறார். மற்றத் துறைகளை விட மின்சாரத்துறையில் அதிகமாக சம்பாதிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். இது அமைச்சரைப் பொறுத்துதான் சொல்லப்படுவதாக நான் நினைக்கிறேன். செந்தில் பாலாஜி மீது கடந்த ஆட்சியிலேயே புகார்கள் கூறப்பட்டதால், அவரைக் கொண்டுதான் துறையையும் மதிப்பிடுகிறார்கள்."

"கொடநாடு வழக்கு குறித்து உங்கள் பார்வை?"

"பெரியளவில் அதுகுறித்து எனக்கு ஏதும் தெரியாது. விசாரணை அதிகாரிகள்தான் தெளிவுபடுத்த வேண்டும். சட்டம் ஆராயட்டும், நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்."

“இந்தி குறித்த சர்ச்சை மீண்டும் கிளம்புகிறதே?”

``படிக்க வேண்டிய வயதிலேயே எல்லாவற்றையும் படித்தால்தான் உண்டு. எம்.பி-யாக இருப்பதால் டெல்லியில் சகஜமாக உரையாட இந்தி மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறேன், முடியவில்லை. கண்டிப்பாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி படிப்பதால் தமிழ் அழிந்துவிடப்போவதில்லை. முதலில் தாய்மொழி, அடுத்து இணைப்பு மொழியாக ஆங்கிலம். மூன்றாவதாக கூடுதலாக இந்தியோ இன்ன பிற மொழியோ கற்றுக்கொள்வது சிறந்தது."

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை
விகடன்

``புதிய கல்விக்கொள்கையை ஆதரிக்கிறீர்களா?”

"முழுமையாக ஏற்கிறேன். நான் சொல்வதைப்போல் ஏதாவதொரு மொழியை கூடுதலாகப் படிக்கச் சொல்கிறது புதிய கல்விக்கொள்கை. வாழ்க்கையே போட்டிதான். போட்டிக்குத் தயாராவதற்குத் தரமான கல்வி அவசியம். அதனைக் கொடுக்கிறது இந்தக் கொள்கை. விளையாட்டுத்துறையில் சாதிப்பவர்கள் சிறுவயதிலிருந்தே அதற்கான முயற்சியில் இறங்குவதுபோல, அடிப்படையிலிருந்தே தரமானக் கல்வியைக் கொடுக்கிறது புதிய கல்விக்கொள்கை. 3, 5, 8 வகுப்புகளிலும் பொதுத்தேர்வு எழுதுவதில் என்ன சிரமம் வந்துவிடப்போகிறது? வினாத்தாள் வெளியிலிருந்து வரும் என்றாலும், படிக்கும் பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக்கு ஒருபோதும் அஞ்சக்கூடாது".

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism