Published:Updated:

``மானிய விலை உணவு வேண்டாம்!” எம்.பி-க்கள் முடிவால் அரசுக்கு ஆண்டுக்கு 17 கோடி மிச்சம்!

இந்திய நாடாளுமன்றம்
இந்திய நாடாளுமன்றம் ( AP Photo/Manish Swarup )

இனிமேல், நாடாளுமன்ற கேன்டீனை `நஷ்டமும் வேண்டாம் லாபமும் வேண்டாம்' என்ற பாணியில் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, உணவுப் பொருள் தயாரிக்க எவ்வளவு செலவாகிறதோ... அதே விலைக்கு உணவுப் பண்டங்கள் விற்கப்படும்.

இந்தியாவில் மொத்தம் 790 எம்.பி-க்கள் உள்ளனர். இதில், மக்களவையில் 543 பேரும், மாநிலங்களவையில் 245 பேரும் உள்ளனர். குடியரசுத்தலைவரால் இரு ஆங்கிலோ இந்தியன் எம்.பி- க்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு, டெல்லியில் லூட்யன்ஸ் பகுதியில் பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டும் மத்திய அரசுக்குச் சொந்தமான 1,000 பங்களாக்கள் உள்ளன.

அரசு பங்களா
அரசு பங்களா

இந்த பங்களாக்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மட்டும் கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசு ரூ.193 கோடி செலவிட்டுள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் புறநகர் வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். `எந்தெந்தப் பங்களாக்களுக்கு எவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது என்கிற விவரம் இல்லை. தேவையைப் பொறுத்து செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளது' எனவும் நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று 5 மாதங்கள் ஆகியும், 50- க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள், டெல்லியில் தாங்கள் வசித்த பங்களாவை இன்னும் காலி செய்யவில்லை. அதில், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவும் இருக்கிறார். மேகலாயா முதல்வர் கோனார்ட் சங்மாவும் இருக்கிறார். செல்வாக்கு மிகுந்த இவர்கள், தங்கள் பதவிக்காலம் முடிந்தும், பங்களாவை காலி செய்து தரவில்லை. இவர்களை மிரட்டியோ அல்லது நிர்பந்தித்தோ காலி செய்ய நினைக்கும் அதிகாரிகளுக்கு, அதைச் செயல்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

ஷாநவாஸ்  ஹூசைன்
ஷாநவாஸ் ஹூசைன்
`வெங்காய விலை உயர்வினால் ஆட்சி கவிழ்ந்த வரலாறு உண்டு!’- திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி ஷாநவாஷ் ஹூசைன், கடந்த 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோற்றார். 2019-ம் ஆண்டு தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக டெல்லியில் பந்த் மார்க் பகுதியில் உள்ள அரசு பங்களாவில்தான் இன்னும் வசிக்கிறார். அதிகாரிகள் முட்டிமோதிப் பார்த்தும் பலன் இல்லை. டெல்லியில் லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்த ராம்தாஸ் அத்வாலேவை மட்டுமே அரசு அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முடிந்தது. பதவிக்காலம் முடிந்த பிறகும் எம்.பி-க்கள் பங்களாக்களை காலிசெய்து தராததால் புதிய எம்.பி-க்களுக்கு பங்களா ஒதுக்க முடியாமல் சிரமப்படுவதாக அரசு அதிகாரிகள் புலம்புகின்றனர்

இதற்கிடையே, நாடாளுமன்ற கேன்டீனில் இனிமேல் எம்.பி -க்களுக்கு மலிவு விலை உணவு வழங்கப்படாது எனவும் சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற கேன்டீனில், ஒரு பிளேட் சாதம் ரூ7- க்கு கிடைக்கும். ஹைதராபாத் மட்டன் பிரியாணி ரூ.65-க்கு கிடைக்கும். சப்பாத்தி விலை ரூ. 2 மட்டன் சுக்கா ரூ.45. முழு தந்துரி கோழி ரூ.60. இனிமேல், மலிவு விலை சாப்பாடு கிடைக்காது. மாநிய விலை உணவை விட்டுக்கொடுக்க எம்.பி-க்கள் ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் அரிசி உணவு
நாடாளுமன்றத்தில் வழங்கப்படும் அரிசி உணவு
`சாதி மறுப்புத் திருமண உதவித் தொகை!' - சு.வெங்கடேசன் எம்.பி-யின் கேள்வியும் அமைச்சரின் பதிலும்

பிஜூ ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்.பி, பைஜயாந்த் ஜே பண்டா இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், `எம்.பி-க்கள் மக்கள் பணத்தில் மலிவு விலையில் சாப்பிடுவது தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவருகிறது. மானிய விலையை விட்டுக்கொடுத்தால்தான், மக்கள் மத்தியில் எம்.பி-க்களின் மதிப்பு உயரும். மக்களின் நம்பிக்கையைப் பெறலாம். அதற்கு ஆவன செய்யுங்கள் ' என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, எம்.பி-க்கள் மானிய விலையை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டனர். இதனால், நாட்டுக்கு ஆண்டுக்கு ரூ. 17 கோடி மிச்சம் ஆகும். இனிமேல், நாடாளுமன்ற கேன்டீனை `நஷ்டமும் வேண்டாம் லாபமும் வேண்டாம்' என்ற பாணியில் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, உணவுப் பொருள் தயாரிக்க எவ்வளவு செலவாகிறதோ... அதே விலைக்கு உணவுப் பண்டங்கள் விற்கப்படும்.

நாடாளுமன்ற கேன்டீனில், எம்.பி-க்கள் மலிவு விலையில் உணவு சாப்பிடுவது பல ஆண்டு காலமாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டுவந்தது; இப்போது, அதற்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது என்பது வரவேற்கத் தகுந்த விஷயம்தான்.

அடுத்த கட்டுரைக்கு