Published:Updated:

2019: வாசகர் மெகா தேர்தல் போட்டி முடிவுகள்!

Narendra Modi, T. T. V. Dhinakaran, Kamal Haasan
பிரீமியம் ஸ்டோரி
News
Narendra Modi, T. T. V. Dhinakaran, Kamal Haasan

‘மீண்டும் மோடியா... ராகுல் காந்தியா?’ என்கிற கேள்வியோடு வாக்காளர்களை எதிர்கொண்டது 17-வது நாடாளுமன்றத் தேர்தல்.

ண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி விவசாயிகள் தற்கொலைகள் வரையில் பிரசாரத்தில் பேசு பொருள் ஆகின. புல்வாமா, பாலகோட் விவகாரங்கள் தேர்தல் நேரத் திருப்பங்கள். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவில்லை. மூன்றாவது அணி என ஒன்று வெளிப்படையாக உருவாகவில்லை. ஆனால், சில மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் பலம் மிகுந்தாக இருந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
Edappadi K. Palaniswami, Stalin, Rahul Gandhi
Edappadi K. Palaniswami, Stalin, Rahul Gandhi

இப்படியான சிக்கல்களை எல்லாம் மீறி, தேர்தல் முடிவுகளைத் துல்லியமாகக் கணித்தனர் விகடனின் கணிப்புக் கில்லாடி வாசகர்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்று லட்சம் ரூபாய் தேர்தல் பரிசுப் போட்டியை அறிவித்திருந்தோம். தேர்தல் நெருக்கத்தில் பணப் பட்டுவாடா புகாரில், வேலூர்த் தொகுதியின் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதனால், போட்டி முடிவுகளை அப்போதே அறிவிக்க முடியவில்லை. ‘தமிழகம் - புதுவையில் 40 தொகுதிகளில் யாருக்கு எத்தனை இடம் கிடைக்கும்?’ என்கிற கேள்வியும் போட்டியில் கேட்கப்பட்டிருந்தது. அதனால், வேலூர்த் தொகுதித் தேர்தல் முடிவுகள் வரும் வரையில் காத்திருந்தோம்.

 முதல் பரிசு வென்ற எம்.கே.பாலசங்கர்
முதல் பரிசு வென்ற எம்.கே.பாலசங்கர்

வாசகர்களிடமிருந்து வந்த மொத்தக் கூப்பன்கள் 30,604. ‘மத்தியில் எந்தக் கூட்டணிக்காவது பெரும்பான்மை கிடைக்குமா?’ என்கிற கேள்விக்கு ‘கிடைக்கும்’ எனப் பெரும்பாலானோர் சொல்லியிருந்தார்கள். ‘பா.ஜ.க கூட்டணிதான் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும்’ என அதிகமான வாசகர்கள் கணித்திருந்தார்கள். ‘அடுத்த பிரதமர் யார்?’ என்கிற கேள்விக்கும் நரேந்திர மோடிக்குத்தான் பெரும்பாலானோர் ‘டிக்’ அடித்திருந்தார்கள். ‘தமிழகத்தில் போட்டியிட்ட பிரபலங்களில் யார் யார் வாகை சூடுவார்கள்?’ என்கிற கேள்விக்கு, திருமாவளவன், அன்புமணி ஆகியோரின் வெற்றி தோல்விகளையும் வாக்கு வித்தியாசத்தையும் கணிப்பது மட்டுமே பெரும் சவால்.

இத்தனை சவால்களையும் மீறிக் கணித்த வாசகர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 15 பேர். இதில் முதல் பரிசான 1,50,000 ரூபாயை இரண்டு பேரும், இரண்டாம் பரிசான 1,00,000 ரூபாயை ஐந்து பேரும், மூன்றாம் பரிசான 50,000 ரூபாயை எட்டுப் பேரும் பகிர்ந்துகொள்கிறார்கள். தேர்தல் முடிவுகளைக் கிட்டத்தட்ட சரியாகக் கணித்த வாசகர்களுக்கு விகடனின் வாழ்த்துகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் பரிசு பெறும் வாசகர் எம்.கே.பாலசங்கர், விகடன் நடத்தும் தேர்தல் கணிப்புப் போட்டிகளில் ஏழாவது முறையாகப் பரிசு பெறுகிறார். கன்னியாகுமரி கல்லுக்கட்டியைச் சேர்ந்த பாலசங்கரிடம் தகவலைச் சொன்னதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘`1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்தே தேர்தல் முடிவுகளைச் சேகரித்து வைத்துள்ளேன். 1952-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தல் தொடங்கி, கடந்த தேர்தல் வரை உள்ள முடிவுகளின் புள்ளிவிவரங்களைத் தொகுத்து வைத்திருக்கிறேன். அந்த விவரங்களை அடிப்படையாக வைத்துதான் முடிவைக் கணித்தேன். முந்தைய தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்குகள், வேட்பாளர்களின் பலம், பலவீனம் போன்றவற்றை அலசி ஆராய்ந்து, முடிவெடுப்பேன். இந்தமுறை வி.ஐ.பி தொகுதிகளைக் கணிப்பதில்தான் கடும் சிரமம் இருந்தது. 1991 முதல் விகடன் தேர்தல் போட்டிகளில் பங்கெடுத்துப் பரிசுபெற்று வருகிறேன். முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை தலா இரண்டு முறை வென்றுள்ளேன். ஜூனியர் விகடனின் இடைத் தேர்தல் கருத்துக் கணிப்பில் மூன்றாம் பரிசு சமீபத்தில் கிடைத்திருந்த நிலையில், ஆனந்த விகடன் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி’’ என்றார்.

முதல் பரிசு வென்ற பாலசுப்ரமணியம்
முதல் பரிசு வென்ற பாலசுப்ரமணியம்

முதல் பரிசு பெற்ற இன்னொரு வாசகரான பாலசுப்ரமணியம் ஈரோடு, கலிங்கியத்தைச் சேர்ந்தவர். 2014 நாடாளுமன்றத் தேர்தல் போட்டியில் முதல் பரிசைப் பெற்றிருக்கிறார். ‘`இரண்டாவது முறையாக முதல் பரிசை வென்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஜெயலலிதா இல்லாததால் அ.தி.மு.க-வுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும். ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையை மக்கள் விரும்பவில்லை. இது அ.தி.மு.க -வுக்குப் பெரும் தோல்வியைத் தரும் எனக் கருதினேன். அதேபோல, மோடி ஆட்சிக்கு எதிராகத் தமிழக மக்களிடையே எதிர்ப்பலைகள் ஏற்பட்டிருந்தது. அதனால் அவர்களுடனான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனக் கணித்தேன். தேனித் தொகுதி மட்டுமே அ.தி.மு.க வெல்லும் என நான் கணித்ததுதான் நடந்திருக்கிறது’’ என்றார்.

இரண்டாம் பரிசான 1,00,000 ரூபாயை ஐந்து வாசகர்கள், தலா 20,000 ரூபாய் எனப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களிடம் பேசினோம்.

நகுல் (கரூர், உப்பிடமங்கலம்):

“எங்கள் தாத்தா விகடன் வாசகர். அதனால், எங்க அப்பாவும் அம்மாவும் விகடன் வாசகர்களாக மாறினார்கள். அவர்களைப் பார்த்து, நானும் சிறுவயதிலிருந்து விகடனைப் படிக்க ஆரம்பித்தேன். இதனால், இயல்பாகவே அரசியலைப் பற்றித் தெரிந்துகொண்டேன். மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு என்று தமிழக மக்கள், அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருந்ததாலும், 2004 தேர்தலில் அமைத்த அதே கூட்டணியை தி.மு.க அமைத்த தாலும், இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 39 இடங்களையும், அ.தி.மு.க கூட்டணி ஒரு இடத்தையும் கைப்பற்றும் எனக் கணித்திருந்தேன். என் கணிப்பு சரியாக அமைந்தது.’’

2019: வாசகர் மெகா தேர்தல் போட்டி முடிவுகள்!

ஏ.முஹம்மது ஹுமாயூன் (நாகர்கோவில்):

‘`ஆனந்த விகடனில், எழுத்தாளர் சுஜாதா ‘பிரிவோம் சந்திப்போம்’ என ஒரு கதை எழுதினார். அதைப் படித்தபோதுதான் எனக்கு வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. விகடன் பொன்விழாவில் போட்டோவுக்கு கமென்ட் சொல்லும் போட்டியில் ஒரு கிராம் தங்கம் பரிசு பெற்றிருக்கிறேன். டைம் பாஸ் இதழில் என் மகன் முகமது ரிஸ்வான் பெயரில் சிரிப்புக் கட்டுரை எழுதியதற்காக என்னையும், என் மகன் முகமது ரிஸ்வானையும் 2014-ம் ஆண்டு தாய்லாந்து அழைத்துச் சென்றார்கள். பல போட்டிகளில் பங்கேற்று நகையும், மாருதி காரும் பரிசாக வாங்கி யிருந்தாலும் தேர்தல் கணிப்பில் எனக்குக் கிடைத்த பரிசு என்பதால் நோபல் பரிசு கிடைத்தது மாதிரி மகிழ்ச்சியாக இருக்கிறது.’’

டி.பெருமாள் (சென்னை, திருவொற்றியூர்):

‘` ஜார்கண்ட், ராஞ்சியில் பணிபுரிந்துவருவதால் தமிழகத்தின் அரசியல் நிலவரங்களைச் செய்திகளில் படித்துத் தெரிந்து கொண்டேன். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றில் மற்ற மாநில மக்களும் பாதிக்கப்பட்டி ருந்தார்கள். ஆனாலும், வலுவான எதிர்ப்பு இல்லாதது, மோடிக்குச் சாதகமாக அமைந்தது. அதைவைத்தே மோடிதான் வெற்றிபெறுவார் எனக் கணித்தேன்.’’

2019: வாசகர் மெகா தேர்தல் போட்டி முடிவுகள்!

எஸ்.ராஜேந்திரன் (தஞ்சாவூர், கபிஸ்தலம்):

‘`மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகத் தமிழக மக்கள் இருந்தனர். மோடி மீதோ, பா.ஜ.க மீதோ தமிழக மக்களிடம் பெரிய பற்று இல்லை. ஆனால், வட இந்தியாவில் பா.ஜ.க-வுக்கு இருந்த ஆதரவு இம்மியளவும் குறையவில்லை.

இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோருக்கு மக்களிடத்தில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. இதனால் வாக்கு வங்கியுள்ள பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து பலமான கூட்டணியை அமைத்தபோதும் அது மக்களிடத்தில் எடுபடாது எனக் கணித்தேன். அதுதான் நடந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2016 சட்டசபைத் தேர்தலிலும் நான் பரிசு பெற்றிருக்கிறேன். முதல் பரிசைப் பெற வேண்டும் என்பதே என் லட்சியம்.’’

கே.ரவீந்திரன் (ஈரோடு,சாஸ்திரி நகர்):

``ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எஞ்சிய பதவிக்காலத்தை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென, எடப்பாடி ஆட்சி மத்திய பா.ஜ.க அரசுடன் கைகோத்துச் செயல்பட்டது மக்களிடம் ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால், விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தி.மு.க மற்றும் அதன் கூட்டணியினர் தீவிர களப்பணியாற்றியது வெற்றிக்கான வெளிச்சத்தைக் காட்டியது. இதையெல்லாம் கணக்கிட்டு மத்திய, மாநில அரசின் மீதான எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்துவார்கள் எனக் கணித்தேன்.’’

மூன்றாம் பரிசான 50,000 ரூபாயை எட்டுப் பேர் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

எஸ்.காளீஸ்வரன் (சென்னை, நுங்கம்பாக்கம்):

‘`ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க-வில் நிகழ்ந்த உட்கட்சிப் பூசல்கள், அந்தத் தலைவர்களின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையின்மை எல்லாம் சேர்ந்துதான் என் கணிப்பை வலுப்பெற வைத்தது.’’

மனோகரன் (புதுக்கோட்டை):

‘`1996 விகடன் தேர்தல் போட்டியில், என் அண்ணன் பிரபாகரன் முதல் பரிசு வாங்கினார். அதனால்தான் போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைத்துப் போட்டி களிலும் கணிக்க ஆரம்பித்தேன். இந்த முறை பரிசு கிடைத்துவிட்டது.’’

அஜித் (சென்னை, மாடம்பாக்கம்):

‘`போட்டியில் பங்கேற்ற முதல் முறையே வெற்றிபெற்றிருப்பது மகிழ்ச்சி. ராகுல் காந்தியைத் தென்னிந்தியா ஏற்றுக்கொள்ளும். வட இந்தியா ஏற்றுக்கொள்ளாது என நினைத்தேன். அதுவே நடந்திருக்கிறது.’’

2019: வாசகர் மெகா தேர்தல் போட்டி முடிவுகள்!

கே. பூமிபாலன் (கோவை):

‘`18 தொகுதிகள் இடைத்தேர்தல் தொடர்பாக ஜூனியர் விகடன் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தலைச் சந்திப்பதாலும், பெரிய அளவுக்குப் பிரபலமான தலைவர்கள் இல்லாததும் அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவாக இருக்கும் என்று நினைத்தேன். அது அப்படியே நடந்துவிட்டது.’’

எம்.தங்கவேல் (கோவை):

‘`அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை, கட்சிக்குள் பூசல், பா.ஜ.க-வுடனான கூட்டணி போன்றவை அ.தி.மு.க-வுக்குத் தோல்வியைக் கொடுக்கும். ஸ்டாலின் வளர்ந்துவரும் தலைவர், மக்களிடமும் தி.மு.க மீதான செல்வாக்கு இருப்பதால், தி.மு.க அதிக இடங்களைப் பிடிக்கும் என நினைத்தேன்.’’

அன்புச்செல்வி (சென்னை, அடையாறு):

‘`மோடியின் திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்குப் பார்வை கொண்டவை என்பதை இந்திய அளவில் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் மோடியால் வெற்றிபெற முடிந்தது.’’

ஆர்.கிருஷ்ணமூர்த்தி (சென்னை, ஆவடி):

‘`பத்திரிகைகளைத் தொடர்ச்சியாக வாசிப்பதால், எந்த நீரோட்டத்தில் மக்களின் மனநிலை செல்கிறது, எந்தக் கட்சி வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்பது புரியும். அரசியல் ஆர்வம்தான் போட்டியில் பங்கேற்கத் தூண்டியது.”

ஆர்.சுந்தரமூர்த்தி (சென்னை, ஆவடி):

‘`1991 முதல் விகடன் தேர்தல் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். இம்முறை ஜெயித்துவிட்டேன். ஒருமுறை நான் அனுப்பிய கூப்பனுக்குப் பரிசு கிடைக்கவில்லை என்றதும், அதுபற்றி விகடனுக்குக் கடிதம் அனுப்பினேன். போட்டியில் பங்கேற்ற 47,000 கூப்பனில், என் கூப்பனைத் தேடி எடுத்து, நான் அனுப்பியிருந்த முடிவையும், எதனால் பரிசு கிடைக்காமல் போனது என்கிற விவரத்தையும் கடிதமாக அனுப்பியிருந்தனர். இதுபோன்ற செயல்கள்தான் விகடன் மீதான நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது.”

வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!