Published:Updated:

விவாதம் `நோ', எம்.பி-க்கள் சஸ்பெண்ட்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைப் பார்த்து பயப்படுகிறதா பாஜக?

நாடாளுமன்றம்
News
நாடாளுமன்றம்

மக்களவை மாண்பைக் குலைக்கும் வகையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி 12 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். விவாதம் நடத்த மத்திய அரசு அஞ்சுவதாகவும், அதற்கு எதிர்க்கட்சிகள் மீதான பயம்தான் காரணம் என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்திருக்கின்றனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் மசோதா, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே விவாதமின்றி இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மசோதா மீது விவாதம் ஏதும் நடத்தப்படாததால், விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளில் ஈடுபட்டன. இதனால், கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரின்போது, மக்களவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி 12 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். விவாதம் நடத்த மத்திய அரசு அஞ்சுவதாகவும், அதற்கு எதிர்க்கட்சிகள் மீதான பயம்தான் காரணம் என்றும் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்துவருகின்றனர்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மூன்று வேளாண் சட்டங்கள் - தொடக்கம் முதல் ரத்து வரை முழுப் பின்னணி:

கடந்த 2020-ம் ஆண்டு, செப்டம்பர் 20-ம் தேதி பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் போராட்டத்தைக் கையிலெடுத்தனர். கொரோனா காலத்திலும் சுமார் ஓராண்டுக்காலம் விவசாயிகளின் தொடர் போராட்டம் தொடர்ந்தது. சுமார் 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தனர். உலக கவனம் பெற்ற இந்த விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசு கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துவந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த நிலையில், விவசாயிகளின் கடுமையான தொடர் போராட்டத்தை அடுத்து கடந்த 2021, நவம்பர் 19-ம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என அறிவித்தார் பிரதமர் மோடி.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்:

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. அதில், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வும், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வும் நடைபெற்றன. அதன் பின்னர் நடைபெறவிருந்த கேள்வி நேரத்துக்கு பதிலாக, விவசாய வேளாண் சட்டங்கள் ரத்து, விவசாயப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஆகியவை குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், கேள்வி நேரம் நடத்தப்படாமல் மதியம் 12 மணி வரையில் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் எம்.பி-க்கள்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் எம்.பி-க்கள்
ANI

மக்களவையில் நிறைவேற்றம்:

அதன் பின்னர், மக்களவை மீண்டும் கூடியதும், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் `மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா -2021' என்ற மசோதாவைத் தாக்கல் செய்தார். அப்போது பேசிய நரேந்திர சிங், ``அரசியல் ஆதாயத்துக்காகவே எதிர்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்தன. இந்த வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து, எங்களால் சில விவசாயிகளுக்குப் புரியவைக்க முடியவில்லை. ஆகவே, மிகுந்த வருத்தத்துடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்கிறோம்’’ எனத் திட்டவட்டமாகப் பேசினார். அதாவது, மதியம் 12:06 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட மசோதா எந்தவிதமான விவாதமும் நடத்தப்படாமல் நான்கு நிமிடங்களில் 12:10-க்கெல்லாம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ``வேளாண் மசோதா மீது விவாதம் நடப்பட வேண்டும்'’ என வலியுறுத்தினார். ஆனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த எதிர்க்கட்சி எம்.பி-க்கள், தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை  எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

மாநிலங்களவையில் நிறைவேற்றம்:

மக்களவைபோல, மாநிலங்களவையிலும், `மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா -2021' என்ற மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம், போராட்டத்தின்போது 700-க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கின்றனர். உ.பி லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயிகள்மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இவற்றைப் பற்றியும் விவாதிக்க வேண்டும்’’ என கோரிக்கைவைத்தார்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

ஆனால், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ``வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி மிகவும் பெரிய மனதுடன் அறிவிப்பு செய்திருக்கிறார். தற்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் விஷயத்தில் மத்திய அரசின் நோக்கமும், எதிர்க்கட்சிகள் கோரிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே, விவாதம் நடத்தவேண்டிய தேவையில்லை" எனத் தெரிவித்தார்.

நரேந்திர சிங் தோமர்
நரேந்திர சிங் தோமர்

அதைத் தொடர்ந்து, சரியாக, மதியம் 2:15 மணிக்குக் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு மறுப்பு தெரிவித்தார். மேலும், மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

(இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட `வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021’, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்ததும் முறைப்படி மூன்று வேளாண் சட்டங்கள் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்படும்.)

12 எம்-பி.க்கள் சஸ்பெண்ட்:

இதற்கிடையில், நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும், 12 எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய நாயுடு. இதற்குக் காரணம், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பி உச்சகட்ட அமளியில் ஈடுபட்டனர். அந்தச் சம்பவத்தின்போதே, மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய நாயுடு கண்கலங்கியபடி வேதனையாகப் பேசினார்.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்காக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வெர்மா, பியூலா தேவி நீதம், ரிபுன் போரா, ராஜாமணி படேல், சையத் நசிர் ஹுசேன், அகிலேஷ் பிரசாத் ஆகிய ஆறு எம்.பி-க்களையும், சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டோலா சென், சாந்தா ஷேத்ரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த இளமாறன் கரீம், பினோய் விஸ்வம் உள்ளிட்ட மொத்தம் 12 எம்.பி-க்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் வெங்கைய நாயுடு. இந்தச் செயலுக்கு எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளைக் கண்டு பா.ஜ.க பயப்படுகிறதா?

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்தாமல், 12 எம்.பி-க்களை சஸ்பெண்ட் செய்தது போன்ற நடவடிக்கைகளுக்கு, பா.ஜ.க-வின் எதிர்க்கட்சியினர் மீதான பயமே காரணம் என எதிர்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ``வேளாண் சட்டத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் சில மர்ம சக்திகளை வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் நாங்கள் விவாதம் நடத்தவே விரும்புகிறோம். ஆனால், இந்த விஷயத்தில் விவாதம் நடத்த மத்திய பாஜக அரசு பயப்படுகிறது. தன்னுடைய பணக்கார நண்பர்களுக்காக இந்தச் சட்டங்களை பிரதமர் மோடி மீண்டும் கொண்டு வருவார் எனச் சந்தேகிக்கிறேன்" என்றார். மேலும், ``குறைந்தபட்ச ஆதரவு விலை, லக்கிம்பூர் கலவரம், 700 விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும் நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம்" என ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்.

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ``விவாதம் ஏதுமின்றி சட்டங்களைத் திரும்பப் பெற இந்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.16 மாதங்களுக்கு முன்பு வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய ஜனநாயகமற்ற நடைமுறையைப்போலவே அவற்றைத் திரும்பப் பெறவும் முயற்சி நடக்கிறது" என முன்கூட்டியே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜியும் ``விவாதம் நடத்துவதற்கு மத்திய அரசு அஞ்சுகிறது" என குற்றம்சாட்டியிருக்கிறார். இதேபோல் பல்வேறு எதிர்க்கட்சியினர் பாஜக-வின் முதல்நாள் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

இந்த விமர்சனங்களுக்கு விளக்கமளித்துப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ``வேளாண் சட்டங்கள் குறித்த நலன்கள் தெரிந்தும், பிடிவாதமாக ஒருசில மாநிலங்களின் விவசாயிகள் இந்தச் சட்டம் எங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று கூறிப் போராடினார்கள். உடனே, எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே விவசாயிகளின் அந்தப் போராட்டத்தை திட்டமிட்டே தூண்டிவிட்டு, வேளாண் சட்டங்களை ரத்துசெய்தே ஆக வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தனர். இந்தச் சூழ்நிலையில்தான் பிரதமர் மோடி, `ஒருசில விவசாயிகளிடம் இந்தச் சட்டத்தைப் பற்றி எடுத்துக் கூற முடியவில்லை; நாம் எடுத்துச்சொல்லத் தவறிவிட்டோம்' என்பதைச் சுட்டிக்காட்டி சட்டங்களை வாபஸ் பெற்றிருக்கிறார். இதற்கிடையில், இதைப் பற்றி விவாதிக்க என்ன இருக்கிறது? வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள், சரி வேண்டாம் என்று மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்துசெய்து மசோதாவும் திரும்பப் பெறப்பட்டுவிட்டது! இனி அது குறித்து விவாதம் நடத்தச் சொல்வதில் நியாயம் இல்லை; அதற்கான தேவையும் இல்லை!" எனக் கூறினார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மேலும், ``ராகுல் காந்தி, `பாஜக எதிர்க்கட்சிகளைப் பார்த்து பயப்படுகிறது, விவாதம் நடத்தாதது குறித்துத் தனக்கு சந்தேகம் இருக்கிறது’ என்கிறார், முதலில் ராகுல் காந்திக்கு இந்தியாவின் மீதே சந்தேகம் இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டங்களின் மீதே சந்தேகம் இருக்கிறது. எனவே, எதற்கெடுத்தாலும் சந்தேகம் கிளப்பும் அரசியல் முதிர்ச்சியற்ற ராகுல் காந்தியின் பேச்சை நாங்கள் பொருட்படுத்த முடியாது." என்றும் தெரிவித்தார்.