Published:Updated:

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்: தாக்கலாகிறது வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா! -எதிர்க்கட்களின் திட்டம் என்ன?

நாடாளுமன்றம்
News
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அனலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் கூட்டங்கள் நடைபெறும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றிக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு வருடமாக டெல்லியை முற்றுகையிட்டுப் போராடிய விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக, அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். வரவிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி, ஏற்கெனவே நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்திருக்கிறார். அதன்படி இன்று மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும். இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களில் புயலைக் கிளப்பத் திட்டமிட்டிருக்கிறார்கள். வேளாண் சட்டங்கள் ரத்து என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வேண்டும் என்ற விவசாயிகளின் வேறு சில கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

இது தவிர கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு விசாரணைக்குழுவை அமைத்திருக்கிறது. இந்த விவகாரத்தையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கொண்டு வருவார்கள் எனக் கூறப்படுகிறது. இது தவிர நாடு முழுவதும் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு விலை, அருணாச்சலபிரதேசம் அருகே சீன ராணுவம் புதிய கிராமங்களை உருவாக்கிவருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது தென் ஆப்பிரிக்காவில் உருவாகியிருப்பதாகக் கூறப்படும் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸை இந்தியாவில் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய விவாதங்கள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை தவிர்த்து வேறு 25 மசோதாக்களை இந்தக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, போதை மருந்து தடுப்பு மசோதா, சி.பி.ஐ அமலாக்கப் பிரிவு இயக்குநர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய திருத்த மசோதா, டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபன திருத்த மசோதா, தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

பல்வேறு விவகாரங்களில் இன்று தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அனல் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. மத்திய அரசு சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி, வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் கலந்துகொண்டனர். மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, ஆனந்த் சர்மா ஆகியோர் காங்கிரஸ் சார்பாகவும், சுதீப் பந்தோபாத்யாயா, டெரிக் ஓ பிரையன் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாகவும், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் திமுக சார்பாகவும் கலந்துகொண்டனர்.