Published:Updated:

“அ.தி.மு.க-வை நாங்க பார்த்துக்குறோம். நீங்க...?!" - வானதிக்கு மேலிடத்தின் செக்

சில அ.தி.மு.க. அமைச்சர்களின் பெயர்களைச் சொல்லி, ``பா.ஜ.க. நிர்வாகிகளை அவர்கள் மதிப்பதில்லை" என வானதி சீனிவாசன் புகார் வாசிக்க, அதற்கு அந்தத் தலைவர் அளித்த பதிலில், வானதி அதிர்ந்துவிட்டாராம்.

Vanathi Srinivasan
Vanathi Srinivasan

மாநில பா.ஜ.க. தலைவர் பதவிக்கு நாளுக்குநாள் போட்டி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழக நிர்வாகிகள் டெல்லிக்குப் படையெடுப்பதும், தங்களுக்குள்ள லாபி மூலமாக பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவை நெருக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. ஆனால், தலைவர் பொறுப்பை நிரப்ப டெல்லி மேலிடம் அவ்வளவு ஆர்வமாக இல்லை. இந்தத் தாமதமே, இதுவரை மாநில பா.ஜ.க-வில் கோலோச்சிய நிர்வாகிகளை அவமானப்படுத்தத்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Kamalalayam
Kamalalayam
சீனியர் நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையில், ‘நீங்கள் யாரும் தலைவர் பதவிக்கு லாயக்கில்லை’ என டெல்லி மேலிடம் சொல்லாமல் சொல்கிறது.

இதுகுறித்து பா.ஜ.க-வின் தேசிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “வழக்கமாக பா.ஜ.க. மாநிலத் தலைவராக நியமிக்கப்படும் ஒருவர், மூன்று வருட காலமே அப்பதவியில் இருக்க முடியும். ஆனால், தமிழிசை செளந்தரராஜனுக்கு இரண்டு முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது தெலங்கானா ஆளுநராகவும் ஆகிவிட்டார்.

இப்போதிருக்கும் சீனியர் நிர்வாகிகள் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, தங்களுடைய பிசினஸை மட்டும் வளர்த்துக் கொண்டதாக மேலிடம் கருதுகிறது. பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின்கீழ், பத்து லட்ச ரூபாய் வரையில் சிறு, குறு வியாபாரிகளுக்குக் கடன் தரப்படுகிறது. தமிழகத்தில் இதன் பயன்பாடு அதிகம். அதேபோல, மக்கள் மருந்தகம் மூலமாக 70 சதவிகித மானிய விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 170 கடைகள் செயல்படுகின்றன.

சில நாள்களுக்கு முன்னர் டெல்லியிலுள்ள முக்கியத் தலைவர் ஒருவரைச் சந்திக்கச் சென்ற வானதி சீனிவாசன், அ.தி.மு.க. அரசின்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
Narendra Modi |  Amit Shah
Narendra Modi | Amit Shah
AP

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டங்களை, மாநில நிர்வாகிகளாக இருப்பவர்கள் விளம்பரப்படுத்தவும் இல்லை; மோடி அரசுதான் இதைச் செய்தது எனப் பிரசாரம் செய்யவும் இல்லை. இந்தக் கோபம் இருப்பதால்தான், தலைவர் பதவியை இன்னும் நிரப்பாமல், சீனியர் நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையில், ‘நீங்கள் யாரும் தலைவர் பதவிக்கு லாயக்கில்லை’ என டெல்லி மேலிடம் சொல்லாமல் சொல்கிறது.

பொன்னார், சி.பி.ஆர். போல வானதி சீனிவாசனும் தலைவர் பதவியை எதிர்பார்க்கிறார். சில நாள்களுக்கு முன்னர் டெல்லியிலுள்ள முக்கியத் தலைவர் ஒருவரைச் சந்திக்கச் சென்றவர், அ.தி.மு.க அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். குறிப்பாக, ’கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டங்களை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளதாகவும், ஒருசில அமைச்சர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்களெல்லாம் பா.ஜ.க. நிர்வாகிகளின் பேச்சைக் கேட்பதில்லை’ எனவும் புகார் வாசித்துள்ளார்.

Vanathi Srinivasan
Vanathi Srinivasan

அமைதியாகக் கேட்டுக்கொண்ட அந்தத் தலைவர், ‘நிர்மலா சீதாராமன் பெயரைச் சொல்லி நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என எங்களுக்குத் தெரியும். முந்தைய தலைவர் தமிழிசை செளந்தரராஜனைச் செயல்படவிடாமல் தடுத்தது யாரென்றும் எங்களுக்குத் தெரியும். கோவையில் என்னென்ன வியாபாரங்கள் உங்கள் கணவர் பெயரில் நடக்கிறது என்பதும் தெரியும். அ.தி.மு.க-வை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்; நீங்கள் கிளம்புங்கள்’ எனக் கடுகடுத்து அனுப்பிவிட்டார். இந்தப் பதிலை வானதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. தலைவர் பதவிக்கான போட்டியில் நாளுக்குநாள் இறுக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது” என்றார்.

இச்சம்பவம் குறித்து வானதி சீனிவாசன் தரப்பில் விசாரித்தோம். “நவம்பர் மாதம் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறும் என்றுதான் வானதி கூறினாரே தவிர, எந்த இடத்திலும் அந்தப் பதவிக்கு, தாம் போட்டியிடுவதாகக் கூறவில்லை. இன்று நேற்றல்ல, கடந்த ஐந்து வருடங்களாகவே வானதியின் அரசியல் வளர்ச்சி பிடிக்காமல், அவரைக் கட்சியிலிருந்து ஓரங்கட்டும் முயற்சியைச் சிலர் செய்துவருகின்றனர். அவரும், அவர் கணவரும் சேர்ந்து மோசடி செய்துவிட்டதாகவும் சில பத்திரிகைகளில் செய்தி வரவழைத்தனர்.

Vanathi Srinivasan
Vanathi Srinivasan

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திருப்பூரில் நடைபெற்ற பி.ஜே.பி-யின் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் வானதி சீனிவாசனுக்குப் பேச பிரதமர் மோடி வாய்ப்பளித்தார். வானதி தவறு செய்திருந்தால், அந்த வாய்ப்பு ஏன் வழங்கப்படப் போகிறது? வானதியைப் பிடிக்காதவர்கள் இதுபோன்ற வடிகட்டிய பொய்களைப் பரப்புகின்றனர்” என்றனர்.

இதுகுறித்து வானதி சீனிவாசனிடம் பேசினோம். "சேலம் உருக்காலை பிரச்னை தொடர்பாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்து உரையாடினேன். மற்றபடி, அ.தி.மு.க. தொடர்பாகவோ, அமைச்சர்கள் தொடர்பாகவோ நான் விவாதிக்கவில்லை. அவர்களும் என்னை விமர்சிக்கவும் இல்லை. இது தவறான தகவல்" என விளக்கமளித்தார்.

சிலைக்கடத்தல் வழக்கு: அறநிலையத் துறை அதிகாரியின் ஜாமீன் ரத்துக்கு இடைக்காலத் தடை!

தலைவர் பதவிக்கான போட்டி நாளுக்குநாள் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பதவிக்குத் தகுதியான ஒருவர் நியமிக்கப்படும்வரை இன்னும் என்னவெல்லாம் கிளம்பப்போகிறதோ, தெரியவில்லை.