Published:Updated:

அக்னிபத்: 2.72 லட்சம் விண்ணப்பங்கள்... இளைஞர்கள் ஆர்வம் காட்டக் காரணம் தேசபக்தியா, வேலையின்மையா?!

அக்னிபத் - ராணுவ ஆள்சேர்ப்பு

அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அக்னிபத்: 2.72 லட்சம் விண்ணப்பங்கள்... இளைஞர்கள் ஆர்வம் காட்டக் காரணம் தேசபக்தியா, வேலையின்மையா?!

அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Published:Updated:
அக்னிபத் - ராணுவ ஆள்சேர்ப்பு

அக்னிபத் திட்டமும் போராட்டமும்!

கடந்த மாதம்14-ம் தேதி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளில் இளைஞர்கள் தற்காலிகமாக பணிபுரியும் அக்னிபத் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார். இந்த திட்டத்தின்படி, இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள்வரை மட்டுமே பணிபுரிய இயலும். பாதுகாப்புப்படையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றும் அக்னி வீரர்களில் தேவைக்கேற்ப 25 சதவிகிதம் பேர் மட்டும் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவிகிதம் பேரின் வாழ்க்கை என்ன ஆகும் என்ற அச்சம் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அக்னிபத்
அக்னிபத்

இந்த நிதியாண்டில் ராணுவத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி 5,25,166 கோடி ரூபாய். இதில், 1,19,696 கோடி ரூபாய் ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்துக்காகவும், 2,33,000 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவுக்காக மட்டும் செலவிடப்படுகிறது. மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த அக்னிபத் திட்டம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதிய செலவுகளைக் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். வட மாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில் பெட்டிகளுக்குத் தீ வைத்தனர். இந்த போராட்டங்கள் மூலமாக இதுவரை ரயில்வே துறைக்கு 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60 ரயில் பெட்டிகளும், 11 ரயில் இன்ஜின்கள் தீக்கிரையாகியிருப்பதாக ரயில்வே தகவல் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குவியும் விண்ணப்பங்கள்:

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் ஒரு பக்கம் நடந்துவந்தாலும், பல விமர்சனங்களைத் தாண்டி, கடந்த ஜூன் 24-ம் தேதி அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் சேர விண்ணப்பம் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 56,960 விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை 94,281 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

தற்போதைய நிலையில் 2.72 லட்சம் பேருக்கும் அதிகமானோர் அக்னிபத் திட்டத்தில் கீழ், இந்திய விமானப் படையில் சேர விண்ணப்பித்துள்ளனர். கடைசி தேதியான ஜூலை 5-ம் தேதி அன்று இன்னும் அதிகமான விண்ணப்பங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் படையைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ், ராணுவம் மற்றும் கடற்படையில் சேர (02.07.2022) முதல் விண்ணப்பிக்கலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்னிபத் தேசபக்தி கொண்ட இளைஞர்களுக்கானது!

இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வத்திடம் பேசினோம். ``தேச பாதுகாப்பு, எதிர்கால தேவை போன்ற பல விஷயங்கள் குறித்து முப்படை அதிகாரிகள் இரண்டு ஆண்டுகளாக விரிவான ஆய்வுகளைச் செய்து, சில பரிந்துரைகளை முன்வைத்தனர். அதனடிப்படையில்தான், அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. முப்படைகளின் அதிகாரிகளே இதுகுறித்து நேரடியாக விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கே தெரிந்திராத பாதுகாப்பு உத்திகள் எல்லாம் தங்களுக்குத் தெரிந்ததை போல எதிர்க்கட்சிகள் வீண் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன.

வினோஜ் பி. செல்வம்
வினோஜ் பி. செல்வம்

வேலைவாய்ப்பை பொறுத்தவரையில் மத்திய அரசுத் துறைகளில் அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனப் பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், அக்னிபத் திட்டம் முழுக்க, முழுக்க துடிப்பு மிகுந்த தேசபக்தி கொண்ட இளைஞர்களுக்கானது. 2 லட்சம் இளைஞர்களின் விண்ணப்பம் அதைத்தான் உறுதி செய்கிறது. தொடக்கத்தில் குழப்பிய எதிர்க்கட்சிகளின் பொய்யுரைகளை இளைஞர்கள் நம்பவில்லை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. அதேசமயம், தேசத்திற்காகக் களமிறங்கும் இளைஞர்களுக்கான பொருளாதார பாதுகாப்பு, காப்பீடு, எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பு போன்றவற்றுக்கான உறுதியை மத்திய அரசு வழங்குகிறது’’ என்றார்.

வேலையில்லா திண்டாட்டம் தான் காரணம்!

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பேசினோம். ``தேசத்தின் மீதுள்ள பக்தி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது வேலையில்லா திண்டாட்டம் மட்டுமே காரணம். இந்த வேலைக்குச் சேர்ந்தால் பின்னாளில் மாநில அரசில் ஏதாவது வேலை கிடைக்குமா என்ற எண்ணத்தில் விண்ணப்பித்துள்ளார்கள். நான்கு வருடங்கள் மட்டுமே வேலை என்ற எந்த ஒரு பணி பாதுகாப்பும் இல்லாத வேலைக்கு இத்தனை விண்ணப்பங்கள் வந்திருப்பதிலிருந்தே நாட்டில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம் தெளிவாகத் தெரிகிறது. 13.5 லட்சம் பேர் வேலைபார்த்து வந்த பொதுத்துறை நிறுவனங்களில் தற்போது 9.2 லட்சம் பேர் மட்டுமே வேலைபார்த்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ராணுவம் முதல் பல்வேறு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்திருக்கிறது மோடி தலைமையிலான அரசாங்கம்.

கனகராஜ்
கனகராஜ்

செலவைக் குறைக்க அக்னிபத் போன்ற திட்டங்களைக் கொண்டுவருகின்றோம் என்று சொல்கிறார்கள். ராணுவத்தைப் பொறுத்தவரை, நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், இந்த திட்டத்தில் ஒரே பகுதியிலிருந்து வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டால் அது நாட்டின் பாதுகாப்பில் தேவையில்லாத குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். ராணுவத் தளவாடங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து வருகிறார்கள். நிரந்தர பணி இல்லாத சூழலையும், பென்ஷன் இல்லாத நிலையையும்தான் இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். எல்லையில் ராணுவ வீரர்கள் என்று இவர்கள் பேசியதற்கு எந்த அர்த்தமும் கிடையாது" என்று பேசியுள்ளார்.