Published:Updated:

`அம்பேத்கர் கனவு; திடீர் ட்விஸ்ட்!’ - ஜே.பி.நட்டாவைச் சந்தித்த பவன் கல்யாண்

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

`அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் ஒன்றுகூடியுள்ளோம். மாயாவதி ஜி பிரதமராக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்’ - பவன் கல்யாண்

நடிகர் பவன் கல்யாண், நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மிகமோசமாகத் தோற்றிருக்கிறார். வெறும் ஆறு சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது, அவரின் ஜனசேனா கட்சி. `முதல்வராவேன்... ஆந்திரத்தை மாற்றி அமைப்பேன்’ என்றவர், சட்டமன்ற உறுப்பினர்கூட ஆக முடியாமல் போனதை அடுத்து அவருக்கு `முடிவுரை வந்துவிட்டது' என ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் விமர்சித்துவருகின்றன.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்
Twitter/@JanaSenaParty

பவனைப் பொறுத்தவரையில், ஆந்திரத்தின் பிரதான கட்சிகள் அனைத்தையும் எதிர்த்து தனி ஆளாக களம்கண்டார். தேர்தலுக்கு முன்பாக அப்போதைய சந்திரபாபு அரசைக் கடுமையாக எதிர்த்து கருத்துகள் தெரிவித்து வந்தார். அதேநேரம் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியையும் விமர்சிக்கத் தவறவில்லை. அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தி பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சியின் மூலம் பிரசாரம் நடத்திவந்தார்.

ஆனால், எதிர்கட்சிகளோ அவர் பா.ஜ.க-வுடன் சேரப்போகிறார் என்று கூறிவந்தன. குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு சந்திரபாபு நாயுடு இதைக் கூறத் தொடங்கினார். கூட்டணியில் ஆந்திர முதல்வர் வேட்பாளராக பவன் கல்யாணை முன்னிறுத்தவும் பா.ஜ.க தயாராக இருந்ததாக அப்போது பேசப்பட்டு வந்தது. இதைவைத்து பா.ஜ.க-வின் பி டீம்தான் பவன் கல்யாண் என்று வெளிப்படையாகவே விமர்சித்துவந்தார் சந்திரபாபு நாயுடு. ஆனால், யாரும் எதிர்பாராத திருப்பமாக, ஒருகட்டத்தில் அனைத்து ஆந்திர கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தார் பவன்.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

``அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் ஒன்றுகூடியுள்ளோம். மாயாவதி ஜி பிரதமராக வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் உறுதியாகச் சொல்கிறோம். எங்கள் விருப்பம் வருகின்ற நாள்களில் நிறைவேறும்'' எனக் கூட்டணி தொடர்பாக விளக்கமும் கொடுத்தார் பவன்.

அப்போது மட்டுமல்ல, பங்கேற்கும் அனைத்துக் கூட்டங்களிலும் அம்பேத்கரை முன்னிறுத்துவது, பா.ஜ.க செயல்களை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் பவன். இதை வைத்து பா.ஜ.க கூட்டணியில் அவர் இணைய மாட்டார் என்றுக் கூறப்பட்டது. இந்த நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக நேற்று பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்துள்ளார் பவன்.

டெல்லியில் உள்ள நட்டாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக நட்டாவுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் பவன். இதனால் அவர் பி.ஜே.பி கூட்டணிக்கு தயாராகிவிட்டதாக ஆந்திர ஊடகங்கள் கூறி வருகின்றன. இதற்காக சில காரணங்களையும் அடுக்குகின்றன. 2014-ல் தெலுங்கு தேசம் - பா.ஜ.க ஆட்சியமைக்க பிரசாரம் செய்தார் பவன். ஆனால், அதன்பிறகு தனித்து சட்டமன்றம், மக்களவைத் தேர்தல்களை எதிர்கொண்டார். அதில் அவருக்கு தோல்வியே ஏற்பட்டது. பவனும் தேர்தலில் தோற்றார். இதனால் தற்போது கட்சியை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். மாநிலத்தின் பிரதான இரண்டு கட்சிகளுடன் மோதல்போக்கை கடைப்பிடித்து வருவதால் அவர்களுடன் பவன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை.

`அம்பேத்கர் கனவு; திடீர் ட்விஸ்ட்!’ - ஜே.பி.நட்டாவைச் சந்தித்த பவன் கல்யாண்

தற்போதுள்ள ஆந்திராவின் அரசியல் சூழ்நிலையில் மாநிலத்தில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டியதன் அவசியம் இருக்கிறது. முன்னதாக ஆந்திர மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் பி.எல் சந்தோஷ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா ஆகியோருடன் நெருக்கம் காட்டி வந்தது ஜனசேனா. அவர்களால்தான் பா.ஜ.க தலைமை பவனை சந்திக்க விருப்பம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்தே பவன் நட்டாவை சந்தித்திருக்கிறார். இதனடிப்படையில் பார்த்தால் அவர் கூட்டணிக்காக நட்டாவை சந்தித்திருக்கலாம் என்கின்றனர்.

`ஜெகனின் நோக்கமே வேற; இவரின் செயலால் 20,000 பேர் வேலை இழந்துட்டாங்க!'- பவன் கல்யாண்

நேற்றைய ஆலோசனையில் கூட்டணி என்பதைத் தாண்டி ஒய்.எஸ்.ஆர் அரசு அறிவித்துள்ள மூன்று தலைநகர் திட்டத்துக்கு எதிராக அமராவதி விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறுகிறது. பா.ஜ.க-வும் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருவதால் இரு கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த யூகங்கள் தொடர்பாக ஜனசேனா சார்பிலும், பா.ஜ.க சார்பிலும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News Credit: IANS

அடுத்த கட்டுரைக்கு