Published:Updated:

‘நிதி மேலாண்மைப் புலிகள்; ஊழியர்கள் ஊதியத்தில் கைவைப்பது ஏன்!’ - முதல்வரை சாடும் ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

அ.தி.மு.க அரசு, தன்னுடைய ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தின் மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021 ஜூலை மாதம் வரை அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு நிறுத்து வைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதேபோல், அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து, அதற்கு ஊதியத்தைப் பெறுவார்கள். ஈட்டிய விடுமுறைக்கு சம்பளத்தை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க அரசு, தன்னுடைய ஊழியர்கள் பெறும் மாதச் சம்பளத்தின்மீது தாக்குதல் தொடுத்து, ஆணை வெளியிட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.

`ஒன் மேன் ஷோவாக இபிஎஸ்; கொதித்த ஓபிஎஸ்!'  - ஸ்டாலினுக்கு எதிராக அறிக்கை வெளிவந்த பின்னணி

தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றுக்காகத் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் வழங்கினார்கள். கொரோனா தடுப்புப் பணிகளையும், முழு ஈடுபாட்டுடன் ஆற்றிவருகிறார்கள். குறிப்பாக, காவல்துறையினர், மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சித் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் எனப் பெரும்பாலான முக்கிய அரசுத் துறைகளின் லட்சக்கணக்கான ஊழியர்கள் அனைவரும், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் பணியாற்றி, கொரோனா நோய்த் தடுப்பிலும் சிகிச்சையிலும் முக்கியப் பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா
கொரோனா

இந்த நேரத்தில் அ.தி.மு.க அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை அரசு ஊழியர்களின் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெருமளவில் இழக்கவைத்து, மனதளவில் சோர்வடையச் செய்யும் என்ற அடிப்படை உண்மையைக்கூட அரசு ஏனோ உணரவில்லை. மத்திய பா.ஜ.க அரசு முடிவு எடுத்தவுடன் உடனே அதைப் பின்பற்றி, அ.தி.மு.க அரசும் இதுபோன்று அரசு ஊழியர்களின் வாழ்வாதார உரிமைகளை மனம் போன போக்கில் ரத்துசெய்துள்ளது. 'நிதி மேலாண்மையில் நாங்கள் புலிகள்' என விளம்பரம் செய்யும் அ.தி.மு.க அரசு, ஊழியர்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்திருப்பது அ.தி.மு.க ஆட்சியின் நிதி மேலாண்மை படுகுழியில் தள்ளப்பட்டுவிட்டது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

அரசு ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, இப்படி உதாசீனப்படுத்துவது ஏற்புடையதாகாது. அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பிற்குப் பதில் ஊதியம் பெறும் உரிமை ரத்து” போன்றவை, அரசு ஊழியர்களின் பொருளாதார நிலைமையைப் பாதிக்கும். ஊழியர்களுக்கு எதிரான அரசாணையை முதல்வர் திரும்பப் பெற வேண்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்குச் சேரவேண்டிய ஜிஎஸ்டி பங்கு, நிதிக் கமிஷன் பகிர்வு போன்ற பல்வேறு நிதிகளையும், கொரோனா பேரிடர் நிவாரணத்திற்கான நிதியையும், தேவையான அரசியல் அழுத்தம் கொடுத்து, உரிமையுடன் தட்டிக்கேட்டு, உடனடியாகப் பெற வேண்டும். அதை விடுத்து, தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக்கொள்வதைப் போல, அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு