Published:Updated:

''இப்படியெல்லாம் பேசுவது தி.மு.க-வுக்குப் புதுசா என்ன?'' - கேட்கிறார் பழ.கருப்பையா

பழ.கருப்பையா
பழ.கருப்பையா

`` `குடியுரிமைச் சட்டம்’ என்ற ஒன்றை மைய அரசு கொண்டுவராமல் இருந்திருந்தால், தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கே வந்திருக்க முடியாது!'' - பழ.கருப்பையா

``தி.மு.க-வில் அறிவாளிகளுக்கு இடமில்லை'' என ஆவேசப்பட்டு கட்சியைவிட்டு வெளியேறியவர் மூத்த அரசியல் தலைவரான பழ.கருப்பையா. தற்போது மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில், சமகால தமிழக அரசியல் குறித்த கேள்விகளோடு பழ.கருப்பையாவை நேரில் சந்தித்தேன்...

''2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ம.நீ.ம கலகலத்துப் போய்விட்டதே...?''

''திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக, மாநில உரிமை, மொழியுரிமை, இந்துத்துவ எதிர்ப்புகளை வலியுறுத்துகிற ஓர் அமைப்பு இங்கே கட்டப்படவேண்டும் என்பதுதான் என் கருத்து. இன்றைய காலகட்டத்தில், கமல்ஹாசனால் அதை வலிமையான கட்டமைப்பாக செய்ய முடியாவிட்டாலும், நாளை அது காலத்தின் கட்டாயமாக இருக்கும்!

மு.க.ஸ்டாலின், டாக்டர் மகேந்திரன், பத்மபிரியா
மு.க.ஸ்டாலின், டாக்டர் மகேந்திரன், பத்மபிரியா

கடந்த 50 ஆண்டுக்கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், ஊழல் மலிந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், இவர்களுக்கு மாற்றாக ஒரு புதிய பார்வையுடைய அமைப்பாக இருந்துவருகிறது ம.நீ.ம! அது வளர்ந்திருக்கிறதா, வளரவில்லையா என்பதெல்லாம் முக்கியமில்லை! இது காலத்தின் தேவை... எனவே வளர்க்கப்பட வேண்டும்! மற்றபடி, கட்சியில் யார் வெளியே போகிறார்கள்; யார் உள்ளே வருகிறார்கள் என்பதையெல்லாம் சிந்தித்து எனக்குப் பழக்கம் இல்லை. எங்களுடன் சேர்ந்து யாரெல்லாம் முழங்குகிறார்கள் அல்லது வெளியேறிவிட்டார்கள் என்பதெல்லாம் முக்கியம் இல்லை!''

''காங்கிரஸ், பா.ஜ.க என தேசியக் கட்சிகளோடு உங்களுக்கு முரண்பாடுகள் இல்லையா?''

''இந்து என்ற மத அடையாளத்துக்குள் மக்களை ஒன்றுதிரட்டத் தடையாக இருந்துவரும் மொழி, இன உணர்வை அழித்து, 'முஸ்லிம்' என்ற மத அடையாளத்துக்கு எதிராக மக்களைத் திரட்டுவதுதான் பா.ஜ.க-வின் அரசியல் கோட்பாடு! அந்தவகையில், சம்ஸ்கிருதம், இந்தி என ஒற்றைத் தேசத்தைக் கட்டமைக்க விரும்புகிறது பா.ஜ.க. ஆனால், தென்னாட்டினரோ தமிழனாக, ஒரியனாக, கன்னடியனாக இருந்துவருகின்றனர். அதனால்தான் அவர்களால் இங்கே காலூன்ற முடியவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் கொஞ்சம் நீக்குப்போக்காக இருக்கும்.''

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

''சமூகநீதி, மொழியுரிமை, மாநில உரிமை-க்கு அடித்தளமிட்டதே திராவிடக் கட்சிகள்தானே.... ம.நீ.மய்யத்தை எப்படி இதற்கு மாற்றாக முன்னிறுத்துகிறீர்கள்?''

''திராவிடக் கட்சிகள்தான் இவற்றுக்கெல்லாம் ஆதாரம் என்று சொல்லக் கூடாது. இங்கே பல சிந்தனைகள் கலந்துகிடக்கின்றன. சமூகநீதி, நீதிக்கட்சியின் வழியாக வந்தது உண்மை. ஆனால், 'மொழி வழி தேசியம்' என்ற கருத்தாக்கத்தையே காந்திதானே கட்டமைத்தார். 1921-லேயே தமிழ்நாடு காங்கிரஸ், குஜராத் காங்கிரஸ், ஆந்திர காங்கிரஸ் எனப் பெயர் வைத்தார். ஆக, மொழி வழி தேசியம் என்ற கட்டமைப்பு அன்றைக்கு கட்டப்படாமல் இருந்திருந்தால், இந்தியா என்பது ஒரு நாடாகவே உருவாகியிருந்திருக்க முடியாது. அந்த காந்தியத்தின் பெயரில்தான் இன்றைக்கு திராவிடக் கட்சிகள், மாநில சுயாட்சியைப் பேசிவருகின்றன. ஆக, 'இனவழி தேசியம்' என்பதே காந்தி நமக்குச் சொல்லித்தந்த பாடம்தான். திராவிடனுக்கு சமயம் உண்டு என்பதையே திராவிட இயக்கங்கள் ஒப்புக்கொள்ளவில்லையே!

கடந்த 50 ஆண்டுக்கால அரசியலில், பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு ஊழல் செய்யாத தலைவர்கள் யாரேனும் உண்டா? இதைப் பற்றியெல்லாம் பேசுவதென்றால் விரிவாகப் பேச வேண்டும்... எனவே இதோடு விட்டுவிடுங்கள்!''

'' `தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவது இப்போதைக்குச் சாத்தியமில்லை’ என்று நிதியமைச்சர் சொல்லிவிட்டாரே?''

''நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள், பெட்ரோல் விலையைக் குறைப்போம் என்றார்கள்... அது சரி, இப்படியெல்லாம் பேசுவது தி.மு.க-வுக்குப் புதுசா என்ன?

அதேசமயம், ஜி.எஸ்.டி-க்கு அப்பாற்பட்டு 'செஸ்' எனும் பிற வரிகளாக மைய அரசு எடுத்துக்கொள்வதை நிதியமைச்சர் சாடியிருக்கிறார். அது நியாயமானது!''

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

''தி.மு.க-வில் அறிவாளிகளுக்கு இடம் இல்லை என முன்பு வருத்தப்பட்டிருந்தீர்களே... இப்போது 'பொருளாதார நிபுணர் குழு', 'மாநில வளர்ச்சிக்குழு' என அறிவாளிகளைp பக்கத்தில் வைத்திருக்கிறாரே முதல்வர் மு.க.ஸ்டாலின்?''

(சிரிக்கிறார்.) ''தேர்தல் அரசியலில், சாதி, மதம், பணம் என அனைத்தும் அங்கம் வகிப்பதால், நடுவாந்தர அறிவுடையவர்கள்தான் எப்போதும் நாடாள்பவர்களாக வருகிறார்கள். அதனால்தான் பின்னாலிருந்து இயக்குகிற அறிவாளிகள் - அதிகாரிகள் வர்க்கத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் உருவாக்கிவைத்தது. தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, இன்றைக்கு உருவாக்கியுள்ள பொருளாதாரக்குழு அறிஞர்களைத் தாண்டி வெளியே சிறந்த அறிஞர்கள் யாரும் இல்லை. ஆனாலும் பொருளாதார ஆலோசனைகளைவிடவும் வருவாயைப் பெருக்குவதற்கான ஆலோசனைகளைத்தான் இந்த அறிஞர்கள் சொல்ல வேண்டும். ஏனெனில், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் என்னென்ன பிரமாதமான ஆலோசனைகளை இந்த அறிஞர்கள் சொல்லப்போகிறார்கள்... அதைக் கேட்டு இவர்கள் என்னென்ன செய்துவிடப்போகிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை! எனவே, இவர்களெல்லாம் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை அறிய நானும் ஆர்வமாக இருக்கிறேன்!''

''பழ.கருப்பையா கூறிய ஆலோசனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார் என்று எடுத்துக்கொள்ளலாம்தானே?''

''அப்படியெல்லாம் இல்லை... எனக்குத் தோன்றுவதை நான் சொல்கிறேன். மற்றபடி நான் அறிஞன் என்றோ சிறந்தவன் என்றோ கருதவில்லை. என்னுடைய கருத்தைக் கேட்டு அவர் செயல்பட வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை.''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

''நீட் தேர்வு பற்றிய உங்களது கருத்து என்ன?''

''நீட் தேர்வு நியாயமற்றது. எங்கள் பிள்ளைகளின் கல்வியை மத்திய அரசு கையில் எடுத்திருக்கக் கூடாது. எங்களுடைய மருத்துவம், விவசாயத்தை மாநில அரசுகளான நாங்கள் பார்த்துக்கொள்ள மாட்டோமா?

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைமை என எல்லாவற்றிலும் ஒற்றைத்தன்மை எனும் சர்வாதிகாரத்தைக் கொண்டுவர மைய பா.ஜ.க அரசு விரும்புகிறது. எல்லையில் வாலாட்டுகிற சீனாவின் வாலை ஒட்ட நறுக்கவேண்டியதுதானே மைய அரசின் கடமை! அதைவிட்டுவிட்டு மாநில அரசுகளிடமா உங்கள் வீரத்தைக் காட்டுவது?

தமிழ்நாட்டில், நீட் தேர்வின் தாக்கங்கள் குறித்து ஆராய குழு அமைத்தார்கள். 'நீட் தேர்வால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்' என அவர்களும் அறிக்கை கொடுத்துவிட்டார்கள். எல்லோரும் அறிந்த உண்மையை, கமிஷன் போட்டு அறிய வேண்டுமா என்ன?''

சென்னை: `கணவருடன் சந்தோஷமாக வாழ முடியவில்லை!’ - திருமணமான இரண்டே மாதங்களில் இளம்பெண் தற்கொலை

''தி.மு.க-வுக்கு மக்கள் விரும்பி வாக்களிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்கிறாரே?''

''அவர் சொல்வது சரியானதுதான்... மைய அரசு அமல்படுத்திய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகத்தான் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒன்று திரண்டு தி.மு.க-வுக்கு வாக்களித்தனர். 'குடியுரிமைச் சட்டம்' என்ற ஒன்றை மைய அரசு கொண்டுவராமல் இருந்திருந்தால், தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கே வந்திருக்க முடியாது!''

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

''மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் 'ஒளிப்பதிவு திருத்தச் சட்ட'த்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?''

''நாவல், கட்டுரை, கதை எனப் புத்தகங்கள் எழுதுவதற்கான அறிவுக் கதவை அடைப்பதில்லையோ... அதேபோல், கலைக் கதவையும் அடைக்கக் கூடாது. ஆனால், மத்திய அரசு எல்லா உரிமைகளையும் பறித்துக்கொள்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. அதனால்தான் கலைத்துறை வரையிலும் தன் கையை நீட்டுகிறது. எல்லாவற்றுக்கும் அஞ்சி மைய அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தால், கமல்ஹாசன் சொல்வதுபோல் 'இனி படைப்புகள் அனைத்தும் ஒரே வார்ப்பாக மட்டுமே வெளிவர முடியும்!'

உலகின் பல நாடுகளில் சென்ஸார் போர்டு என்ற அமைப்பே கிடையாது. எனவே, எல்லாச் சிந்தனைகளும் படைப்புகளாக வெளிவரட்டும். மக்கள் எவற்றை ஏற்கிறார்களோ ஏற்றுக்கொள்ளட்டும்!''

அமைச்சர் துரைமுருகன் மீது சாதிய வன்கொடுமைப் புகார்! - தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

''மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்று தி.மு.க அழைப்பது சிறுமைப்படுத்துவதாக இருக்கிறது என்கிறாரே ஓ.பி.எஸ்?''

''எஜமான விசுவாசம் இவர்களுக்கு இன்னும் போகவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், மாநிலங்கள் அனைத்தும் எல்லா உரிமைகளையும் தங்களிடமே வைத்துக்கொண்டு, எஞ்சிய அதிகாரத்தை மட்டுமே மைய அரசுக்கு அளித்தன. ஆனால், இங்கேயோ எல்லா அதிகாரத்தையும் தானே வைத்துக்கொண்டு மாநிலங்களிடமிருந்து வருகிற கொஞ்ச உரிமைகளையும் பறித்துக்கொள்ளும் நிலைதான் இருந்துவருகிறது. ஆக, இந்தக் காலகட்டத்தில் 'ஒன்றிய அரசு' என்ற சொல்லாடலை மு.க.ஸ்டாலின் பயன்படுத்திவருவதில் எந்தப் பிழையும் இல்லை! இந்தக் கருத்து நிலைபெறுவதென்பது காலத்தின் தேவை! ஆனால், மம்தா பானர்ஜியைப்போல மைய அரசுக்கு எதிராக ஸ்டாலின் எந்த அளவுக்கு ஊக்கமாகப் போராடுவார் என்று எனக்குத் தெரியவில்லை!''

அன்புமணி
அன்புமணி

''ஒன்றிய அரசு என அழைப்பதால் எந்தப் பயனும் இல்லை என்கிறாரே பா.ம.க. அன்புமணி ராமதாஸ்?''

''நாடுகளின் மீது கட்டப்பட்ட நாடுதான் இந்தியா! எப்படி 'இந்து மதம்' என்ற ஒரு மதம் ஏற்கெனவே கிடையாதோ... அதுபோல், இந்தியா என்றொரு நாடும் ஏற்கெனவே கிடையாது! 'ஒன்றிய அரசு' எனப்படும் மைய அரசுக்கு என்று தனிக் குடிமகனோ, ஓர் அங்குல அளவிலான நிலமோ இன்றைக்கும் கிடையாது. ஆக, ஒரியா, வங்கம், கன்னடம், தமிழ் எனப் பல்வேறு மொழிவழி தேசிய இனங்களைக் கொண்ட மாநிலங்களின் மீதாகக் கட்டப்பட்டிருக்கின்ற நாடாகத்தான் இந்தியா இருந்துவருகிறது! இதை வலியுறுத்தும் விதமாகத்தான் 'ஒன்றிய அரசு' என்று தொடர்ச்சியாகச் சொல்லிவருகிறார் மு.க.ஸ்டாலின். இதில் என்ன தவறு இருக்கிறது?''

அடுத்த கட்டுரைக்கு