பழ.நெடுமாறனின் அறிக்கை... ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பா?- என்ன சொல்கிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்?

இலங்கையில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்கும் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி பல்வேறு தமிழர் கட்சிகள் போராடிவருகின்றன.
``விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு, நலமோடு இருக்கிறார். இதை அவரின் குடும்பத்தினர் அனுமதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும்” எனக் கூறி சர்ச்சையைத் தொடக்கி வைத்திருக்கிறார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். அவரின் இந்த அறிக்கை தமிழ்நாடு அரசியலில் மட்டுமன்றி, சர்வதேச அரங்கிலும் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. அதேசமயம் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியிருக்கிறது. குறிப்பாக, வி.சி.க தலைவர் திருமாவளவன், ``இந்த அறிவிப்பில் காலப் பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை. மத்திய பா.ஜ.க அரசு ஈழத் தமிழர் பிரச்னையை, சிங்கள அரசை அச்சுறுத்தும் நோக்கோடு கையாள்கிறது. உளவுத்துறை இந்த அறிவிப்பின் பின்னணியில் இருக்கலாம்” என்று சந்தேகத்தை முன்வைத்திருக்கிறார். த.பெ.தி.க பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன், ``தமிழீழம் அமைவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் ஆதரவளிக்காது; எனவே, பா.ஜ.க-வை வைத்து தனித் தமிழீழம் அடையலாம் என பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் உள்ளிட்டோர் இது போன்று செயல்படுகின்றனர்” எனத் தெரிவித்திருக்கிறார். அதேபோல, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், இலங்கை கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் நெடுமாறனின் அறிக்கைக்கு எதிரான கருத்துகளையே பேசியிருக்கிறார்கள்.

அதேபோல, `` `பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என்று உற்சாகத்தோடு தமிழ்நாட்டுத் தமிழர்கள் செயல்படும்போது, `பயங்கரவாத அமைப்பை ஆதரித்தவர்கள்’ என்ற குற்றச்சாட்டில் ஆட்சியாளர்கள் அவர்களைச் சிறைப்படுத்தவே வாய்ப்பிருக்கிறது. மேலும், இல்லாத விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு மீண்டும் மீண்டும் பிறப்பிக்கவே நெடுமாறனின் அறிக்கை வாய்ப்பளிக்கும்” என்கிறார் தமிழீழ ஆதரவாளர் க.அருணபாரதி,
இது குறித்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சிலர், “இலங்கையில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரத்தை வழங்கும் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி பல்வேறு தமிழர் கட்சிகள் போராடிவருகின்றன. அதிபர் ரணிலும் அதற்கு உறுதியளித்திருக்கிறார். ஆனால், `13-வது சட்டப் பிரிவு வந்தால் பிரிவினைக்கு வழிவகுக்கும்’ எனக் கூறி சிங்கள பௌத்த பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில், பழ.நெடுமாறனின் அறிவிப்பு புதிய சிக்கலை ஏற்படுத்தும். மேலும் வலுவிழந்துவிட்ட ராஜபக்சே சகோதரர்கள், மீண்டும் புலி எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். ராஜபக்சேக்களின் ஆட்சி இலங்கையில் மீண்டும் ஏற்படுமானால், ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிக்கும். தமிழர் பகுதிகளில் ராணுவக் குவிப்பு உள்ளிட்ட கடுந்துயருக்கு வழிவகுக்கும். இலங்கை மட்டுமல்ல, உலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு ஈழத் தமிழர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்” என்றனர்.

மத்திய, மாநில உளவுப் பிரிவு விரைவில் பழ.நெடுமாறனின் அமைப்பினரிடம் விரைவில் விசாரணை நடத்தலாம் என்றும், அவை ஈழ ஆதரவு இயக்கங்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கவிஞர் காசி ஆனந்தன், ``பிரபாகரன் உயிருடன் இருக்கும் புகைப்படங்கள், அவரின் குடும்பத்தினர் படங்கள், பிரபாகரனின் அறிக்கைகளெல்லாம் விரைவில் வெளியாகும். 30 குழுக்களாக இயங்கும் விடுதலைப் புலிகளை ஒருங்கிணைத்து பிரமாண்டமான அரசியல் இயக்கத்தைப் பிரபாகரன் வழிநடத்தப்போகிறார்” என அடுத்த குண்டை வீசியிருக்கிறார்.
காலம்தான் இதற்குக் கச்சிதமான பதில்சொல்லும்!