Published:Updated:

``இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை ஏன் வேண்டும்?''- பழ.நெடுமாறன் தரும் விளக்கம்!

பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

உலகின் எந்த நாட்டிலிருந்து யூதர்கள் வந்தாலும் இஸ்ரேலில் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். வராவிட்டாலும் வேறு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இஸ்ரேல் குடியுரிமை கொடுப்பது அவர்களின் சட்டம். அதை அப்படியே பி.ஜே.பி அரசு காப்பியடித்து இந்துக்களுக்கு மட்டும் இங்கே உரிமை என சொல்கிறார்கள்.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று சென்னையில் தமிழக எதிர்க்கட்சிகளின் சார்பில் மிகப்பெரும் பேரணி நடத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அவரை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

``மத்திய அரசு  நிறைவேற்றியுள்ள குடியுரிமைச் சட்ட திருத்தத்தைப் பற்றி?"

``இந்திய அரசு நிறைவேற்றியிருக்கக் கூடிய தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கே எதிரானது. இந்திய குடிமக்களை அரசியல் அமைப்புச் சட்டம் மத ரீதியாகப் பிரித்துப் பார்க்கவே இல்லை. ஆனால், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவா அமைப்புகளின் நோக்கம் என்பது இந்தியாவை இந்துக்களின் நாடாக அறிவித்து இந்தியாவின் பெயரை இந்துஸ்தான் என மாற்ற வேண்டும் என்பதுதான். அதை நோக்கி படிப்படியாக அவர்கள் நகர்கிறார்கள்.

முதல்படி, காஷ்மீர் முஸ்லிம்கள் நிறைந்த மாநிலம் என்பதற்காக அதற்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமைகளை ரத்து செய்தனர். காஷ்மீர் மாநிலமே இல்லாதபடி செய்து அதை இந்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட இரு பகுதிகளாக மாற்றிவிட்டனர். இதனால் மாநில அந்தஸ்தை காஷ்மீர் முஸ்லிம்கள் இழந்துவிட்டனர். அடுத்ததாக முத்தலாக் தடைச்சட்டம் கொண்டுவந்து அதையும் நிறைவேற்றி விட்டனர். மூன்றாவதாக தேசிய குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமணர்கள், பெளத்தர்கள் மட்டும் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்படும் என்றிருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாகலாந்து, அருணாசலப் பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்களில் மொழியளவிலான சிறுபான்மையினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையான மொழிகள் அழிந்துவிட்டன. மிச்சம் இருக்கும் மொழிகளையும் இந்தச் சட்டம் அழித்துவிடும்.

அமித் ஷா
அமித் ஷா

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இந்த நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கின்றனர். இதை எதிர்த்து நாடு முழுவதும் கிளர்ச்சிகள் மூண்டுவிட்டன. வெளிநாட்டிலிருந்து முஸ்லிம்கள் வந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனச் சொல்கிற சட்டம் நாளைக்கு இந்தியாவைத் தாயகமாக ஏற்றுக்கொண்டு காலம் காலமாக வாழ்ந்து வருகிற 15 கோடி முஸ்லிம் பெருமக்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாக உள்ளது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதில்லை. இஸ்ரேலில் மட்டும் இது போன்ற சட்டம் இருக்கிறது.

உலகத்தின் எந்த நாட்டிலிருந்து யூதர்கள் வந்தாலும் இஸ்ரேலில் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளபடுவார்கள். வராவிட்டாலும் வேறு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் இஸ்ரேல் குடியுரிமை கொடுப்பது அவர்களின் சட்டம். அதை அப்படியே பி.ஜே.பி அரசு காப்பியடித்து இந்துக்களுக்கு மட்டும் இங்கே உரிமை எனச் சொல்கிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாகலாந்து, அருணாசல பிரதேசம், மிசோரம் போன்ற மாநிலங்களில் மொழியளவிலான சிறுபான்மையினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையான மொழிகள் அழிந்துவிட்டன. மிச்சம் இருக்கும் மொழிகளையும் இந்தச் சட்டம் அழித்து விடும்.
பழ.நெடுமாறன்

``ஈழத்தமிழ் அகதிகள் இலங்கைக்குச் செல்லக்கூடிய சூழல் இருக்கிறதா?"

``நிச்சயமாக இல்லை. இங்க இருக்கிறபோதே ஐ.நா அகதிகள் ஆணைய பொறுப்பில் அவர்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் இந்திய குடியுரிமையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் இந்திய குடிமக்களுக்கு என்னென்ன சலுகைகள் இருக்கிறதோ அவை அனைத்தும் கிடைக்கும். அதை இந்த அரசு செய்ய வேண்டும்."

ஈழத்தமிழர்கள்
ஈழத்தமிழர்கள்

``இந்தியக் குடியுரிமை கொடுத்தால் மீண்டும் இலங்கை செல்ல முடியுமா?"

அதற்குத்தான் இரட்டைக் குடியுரிமையை இந்தியா கொடுக்க வேண்டும் என்கிறோம். வெளிநாடுகளில் வாழ்கிற இந்தியர்களுக்கு அவர்கள் அந்த நாடுகள் குடியுரிமை வழங்கினாலும் என்.ஆர்.ஐ என்கிற அடிப்படையில் விசா இல்லாமலேயே அவர்கள் எப்போதும் வேண்டுமானாலும் வந்து செல்கின்றனர். ஆனால், அவர்கள் இங்கு தேர்தலில் மட்டும் போட்டியிட முடியாது. பதவிகளில் வகிக்க முடியாது. வெளிநாட்டு குடியுரிமை வேண்டாம் என்று இங்கேயே வந்துவிட்டால் இங்கே குடியுரிமையைக் கொடுத்து விடுவார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுத்துவிட்டால் வாழ்கைக்குத் தேவையான அனைத்து சலுகைகளும், உரிமைகளும் அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், இப்போது அகதிகள் வெளியே செல்ல முடிவதில்லை, தொழில் செய்ய முடியவில்லை. சிறைக் கைதிகளைப்போல் இருக்கிறார்கள். அரசு கொடுக்கும் உதவியும் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை."

வறட்சி, வெள்ளம், புயல்... பருவநிலை மாற்றம் மட்டும்தானா விவசாய வீழ்ச்சிக்குக் காரணம்?  ஓர் அலசல்!

``தமிழகத்தில் இதற்கான போராட்டங்கள் குறித்து?"

``பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மாணவர்களும் போராடி வருகின்றனர். இதை ஒடுக்க வேண்டும் என என் மீது உட்பட பலர் மீது வழக்கு பதிந்து வருகின்றனர். போராட்டம் இன்னும் பெரிய அளவில் பரவ வேண்டும். அதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இல்லையென்றால் காஷ்மீர் மக்களுக்கு இருந்த சிறப்புரிமையை பறித்து அந்த மாநிலமே இல்லாமல் செய்ததுபோல் நாளைக்கு தமிழ்நாட்டையும் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரித்து புதுச்சேரி மாதிரி ஒரு யூனியன் அந்தஸ்து உள்ள ஒரு பகுதியாக மாற்ற மாட்டார்கள் என என்ன உறுதி இருக்கிறது. அரசியல் சட்டத்தில் இதற்கு அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி இருக்கிறது, அதனால் பி.ஜே.பி அரசு இதைச் செய்யலாம். அதனால் இந்தப் பிரச்னை யாருக்கோ வந்தது எனக் கருதாமல் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்காவிட்டால் கடைசியில் எல்லோருக்கும் இந்த நிலைமை வரும். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மக்களுக்கு வந்திருப்பது நாளைக்கு தமிழர்களுக்கும் வரலாம் என்றார்."

போராட்டம்
போராட்டம்

``அ.தி.மு.க அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையே?"

``நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் அ.தி.மு.க-வினர் இதை ஆதரித்து வாக்களித்துள்ளனர் என்பது பெரும் கொடுமை."

இதே போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு பழ.நெடுமாறன் அளித்துள்ள பதில்கள் நாளை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் விரிவாக...

அடுத்த கட்டுரைக்கு