Published:Updated:

`எம்.பியைக் காணல; வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்தார்!’ - போலீஸில் மனு கொடுத்த திருச்சி மக்கள்

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

"கடைசியா அவரைப் பார்த்தபோது, வெள்ளை நிற வேட்டி சட்டை அணிந்திருந்த திருச்சி எம்.பி திருநாவுக்கரசரைக் காணவில்லை" என பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால் திருச்சியில் பரபரப்பு.

Thirunavukkarasar
Thirunavukkarasar

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் இருக்கும் 29-வது வார்டு அண்ணாநகர் பகுதியில் சாலை வசதிகள் சரிவர இல்லை என்றும், அங்கிருந்து தஞ்சாவூர்-திருச்சி பிரதான சாலைக்குச் செல்லக்கூடிய சாலைச் சரியில்லாததால், பொதுமக்கள் சிரமப்படுவதாகவும், அதனால் அப்பகுதியில் முறையான சாலை வசதிகள் அமைக்கக்கோரியும் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுகுறித்து தேர்தல் நேரத்திலும் முறையிட்டனர்.

Thirunavukkarasar
Thirunavukkarasar

இந்த விவகாரம் குறித்து திருச்சி எம்பியான திருநாவுக்கரசரிடம் மனு கொடுத்து, தங்கள் பகுதிகளுக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம் என்றால் அவரைப் பார்க்கவே முடியவில்லை என்று புகார் கூறுகிறார்கள்.

இதனால் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சம்சுதீன் தலைமையில், அக்கட்சியின் வார்டு தலைவர் குல்முகமது, தே.மு.தி.க வார்டு தலைவர் சலாவுதீன், நாம் தமிழர் கட்சியின் வார்டு செயலாளர் சல்மான், சமூக ஆர்வலரான முகமது யாகூப், முத்துக்கிருஷ்ணன், சாகுல் ஹமீது ஆகியோர், அரியமங்கலம் காவல்நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் முத்தரசுவிடம், திருச்சி எம்பியை சந்திக்கச் சென்றால் அவரை காணவில்லை என்று மனு அளித்தனர்.

அந்த மனுவில், ``திருச்சி அரியமங்கலம் கோட்டம் 29வது வார்டில் இருக்கும் அண்ணாநகர் பகுதிக்கு சாலை வசதி என்பது கிடையாது. இதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலைக்காக போராடி வருகிறோம். தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மூலமாகவும், இந்த சாலை அமையும் என்கிற நம்பிக்கை பொய்த்துப்போனது. அவரைப் பார்க்கலாம் என்றால் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தொகுதியை விட்டு காணாமல் போய்விட்டார்.

மனுக்கொடுத்தவர்கள்
மனுக்கொடுத்தவர்கள்

இந்த மனுவை விசாரித்து காணாமல்போன எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரைக் கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். அவரைக் கடைசியாக நாங்கள் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில்தான் பார்த்தோம். அப்போது வெள்ளை நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்து இருந்தார்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஆனால், மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்த காவல் ஆய்வாளர், இதுகுறித்து உடனடியாக திருச்சி எம்.பி திருநாவுக்கரசரின் உதவியாளரிடம் தொலைபேசியில் பேசியதுடன், எம்.பி திருச்சிக்கு வரும்போது இந்த விவகாரம் தொடர்பாக புகார் கொடுக்க வந்தவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததாகக் கூறியதால், புகார் கொடுக்கச் சென்றவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

அவரைக் கடைசியாக நாங்கள் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில்தான் பார்த்தோம் . அப்போது வெள்ளை நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்து இருந்தார்
புகார் மனு

தங்கள் பகுதிக்கு சாலை வசதி இல்லை என்பதற்காக மனு கொடுப்பதற்காக, எம்பியை காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது