Published:Updated:

` பா.ஜ.க - சிவசேனா சமரசமே இறுதி வழி!’ - மகாராஷ்டிரா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்பவார்

`மகாராஷ்டிராவில் நாங்கள் எதிர்க்கட்சியாகவே இருக்க விரும்புகிறோம்' எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

சரத்பவார்
சரத்பவார் ( ANI )

மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியானது. அன்று முதல் அம்மாநிலத்தை பரபரப்பாக வைத்துள்ளன பா.ஜ.க, சிவசேனா ஆகிய கட்சிகள். கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பா.ஜ.க - சிவசேனாவுக்குள் பதவிக்கான மோதல் நீடிப்பதால், இன்னும் அங்கு அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

பா.ஜ.க - சிவசேனா கூட்டணி
பா.ஜ.க - சிவசேனா கூட்டணி

சிவசேனா எம்.எல்.ஏ-க்களை தங்கள் வசம் இழுத்துக்கொண்ட பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் சிவசேனா, மறைமுகமாக உதவும் காங்கிரஸ், தலைவர்கள் சந்திப்பு எனத் தொடர்ந்து அப்டேட்டுகளை அள்ளிவீசி வந்தனர் மகாராஷ்டிரா அரசியல் தலைவர்கள். `இதற்கு ஒரு முடிவே இல்லையா?' என பிற மாநிலத்தவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், `பா.ஜ.க-வுக்கும்- சிவசேனாவுக்கும் வேறு வழியே இல்லை' என்று கூறி மகாராஷ்டிரா அரசியல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.

இன்று காலை சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சரத்பவாரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பவார், ``என்.சி.பி- காங்கிரஸ் கூட்டணி எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் எனக் கருதியே மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, நாங்கள் எதிர்க்கட்சியாகவே இருக்க விரும்புகிறோம். சிவசேனாவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை.

பா.ஜ.க - சிவசேனா கூட்டணி
பா.ஜ.க - சிவசேனா கூட்டணி

கூட்டணி தொடர்பாக சஞ்சய் ராவத்துடன் எதுவும் பேசவில்லை. மகாராஷ்டிராவில் நடக்கும் பயிர் எரிப்பு தொடர்பாகவே நாங்கள் ஆலோசனை நடத்தினோம். மகாராஷ்டிரா அரசியலைப் பற்றிப் பேச எதுவும் இல்லை. விரைவில் அரசு அமையும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாங்களும் அதையேதான் எதிர்பார்க்கிறோம்.

`மூன்று முக்கிய சந்திப்புகள்!’ - டெல்லியில் முடிவாகும் மகாராஷ்டிரா அரசியல் இழுபறி?

கூட்டணி வைத்து ஆட்சியமைப்பதைவிட பா.ஜ.க - சிவசேனாவுக்கு வேறு வழியில்லை. இரு கட்சிகளும் கடந்த 25 வருடங்களாகக் கூட்டணியில் உள்ளனர். அவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் என எப்போது வேண்டுமானாலும் சேர்ந்துகொள்வார்கள். மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமையாமல் இருக்க வேண்டும் என்றால் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி விரைவில் நல்ல முடிவை எடுப்பதே சிறந்தது.

சரத்பவார்
சரத்பவார்
ANI

சஞ்சய் ராவத் தங்களிடம் 170 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கூட்டணியில் நிச்சயம் நாங்கள் இல்லை. அவர் எதற்காக அப்படிக் கூறினார் என்று நானே அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து சிறந்த முறையில் செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

சிவசேனாவுடன் என்.சி.பி கூட்டணி வைப்பதாக கூறப்பட்ட நிலையில் சரத்பவாரின் பேச்சு கூட்டணி இல்லை என உறுதியாகியுள்ளது. தற்போது, `பா.ஜ.க - சிவசேனா இணைவதைத் தவிர வேறு வழியில்லை' என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.