Election bannerElection banner
Published:Updated:

`இந்தியை வடமாநிலத்தவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!’- ரஜினிகாந்த்

Rajini
Rajini

``இந்தியைப் பொதுவான மொழியாக அறிவித்தால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இந்தியாவின் பொதுவான மொழியாக இந்தியை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Amit Shah
Amit Shah

இந்தி நாளையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

`இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாகவும் இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்'' என அமித் ஷா குறிப்பிட்டிருந்தார்.

`நாடு முழுவதற்குமான மொழி, இந்தி!' - அமித் ஷா

இவரின் கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் ஸ்டாலின், கமல்ஹாசன் உள்பட சில அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இவர்களின் வரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த்தும், `இந்தி மொழியைக் கொண்டுவரக் கூடாது' எனத் தெரிவித்துள்ளார்.

Rajini
Rajini

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், `` பேனர்கள் வைக்கக் கூடாது என முன்பிருந்தே என்னுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்தி வருகிறேன். பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீயின் வீட்டுக்கு தற்போது செல்லமுடியவில்லை.

நம் நாடு மட்டுமல்லாமல், எந்த நாடாக இருந்தாலும் அனைவருக்கும் பொதுவான மொழி இருந்தால், அதனால் நாட்டின் முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் நல்லது. துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் பொதுவாக எந்த மொழியையும் கொண்டு வரமுடியாது. குறிப்பாக, இந்தியை பொதுவான மொழியாக அறிவித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல, தென் இந்தியா மற்றும் வட இந்திய மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு