Published:Updated:

கட்டாத கால்வாய்க்கு ரூ.9.9 லட்சம் - ‘சிட்டிசன்’ பட பாணியில் புகாரளித்த வேலூர் மக்கள்!

கால்வாய் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் பகுதி

கால்வாய் கட்டாமலேயே பொய்க்கணக்கு காட்டி 9.9 லட்சம் ரூபாயை சுருட்டியிருப்பதாக, வேலூர் மாநகராட்சி அதிகாரிகள்மீது மக்கள் புகாரளித்திருக்கின்றனர்.

கட்டாத கால்வாய்க்கு ரூ.9.9 லட்சம் - ‘சிட்டிசன்’ பட பாணியில் புகாரளித்த வேலூர் மக்கள்!

கால்வாய் கட்டாமலேயே பொய்க்கணக்கு காட்டி 9.9 லட்சம் ரூபாயை சுருட்டியிருப்பதாக, வேலூர் மாநகராட்சி அதிகாரிகள்மீது மக்கள் புகாரளித்திருக்கின்றனர்.

Published:Updated:
கால்வாய் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் பகுதி

வேலூர் மாநகராட்சியில் அடிக்கடி ஏதாவதொரு கேலிகூத்தான சம்பவம் நடக்கிறது. தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டூ வீலரை அப்புறப்படுத்தாமல், சிமென்ட் கலவையைக் கொட்டி டூ வீலரின் டயர்களைப் புதைத்தனர். அடுத்ததாக, ஜீப்பை அகற்றாமல் ஏடாகூடமாக தார்ச்சாலை போட்டனர். அடிகுழாயை அகற்றாமல் அப்படியே கழிவுநீர்க் கால்வாய் கட்டினர். அதைத் தொடர்ந்து, ‘குப்பை கொட்டினால் அபராதம்; வீடியோ எடுத்தால் ரூ.200 சன்மானம்’ என மேயரே அறிவிப்பை வெளியிட்டது; கொரோனா கிருமி பொம்மையைப்போல வேலூர் புதிய பேருந்து நிலையத்தை ஏடாகூடமாகக் கட்டியது எனச் சர்ச்சை பட்டியல் இன்னும் நீள்கிறது.

வேலூர் மாநகராட்சி
வேலூர் மாநகராட்சி

இந்த நிலையில், புதிதாக மேலும் ஒரு சர்ச்சை உருவெடுத்து, வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தை உலுக்கத் தொடங்கியிருக்கிறது. ‘சிட்டிசன்’ படத்தில், கட்டாத அணையில் ஓட்டை விழுந்துவிட்டதாகப் புகார் கொடுத்து, ஊழல்வாதிகளை மக்கள் கேள்வி கேட்பதைப் போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அந்தக் காட்சியைப்போல, நிஜத்திலும் ‘கழிவுநீர்க் கால்வாயை காணவில்லை; கண்டுபிடித்துத் தாருங்கள்’ எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார்கள் வேலூர்வாசிகள்.

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில், காட்பாடியைச் சேர்ந்த துரை என்பவர் தலைமையில் பொதுமக்கள் சிலர் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அந்த மனுவில், ‘‘நாங்கள் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்துக்குட்பட்ட கல்புதூர் ராஜீவ் காந்தி நகர் மூன்றாவது மெயின் தெருவில் வசித்துவருகிறோம். எங்கள் பகுதியில் கழிவுநீர்க் கால்வாய் கட்டித்தர வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக மனுக்களைக் கொடுத்துவருகிறோம். இந்த நிலையில், கடந்த 2019-ல் கால்வாய் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருப்பதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

கால்வாய் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் பகுதி
கால்வாய் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் பகுதி

ஆனால், பணிகள் தொடங்கப்படவே இல்லை. அதேநேரம், எங்கள் பகுதியில் கால்வாய் கட்டப்பட்டுவிட்டதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், எங்கள் பகுதியில் கால்வாய் கட்டுமானப் பணிகள் முடிந்த தேதி, திட்ட மதிப்பீடு தொடர்பான தகவல்கள் மற்றும் இந்தப் பணிகள் முடிந்ததற்கு தணிக்கை செய்து வழங்கிய அதிகாரியின் பெயர் விவரங்களைத் தெரிவிக்குமாறு, கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி விண்ணப்பித்திருந்தோம். இதற்கு, மாநகராட்சி பொதுத்தகவல் அலுவலரிடமிருந்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி பதில் மனு அளிக்கப்பட்டது.

அதில், `எங்கள் பகுதியில் 2019, அக்டோபர் 17-ம் தேதியன்றே ரூ.9.9 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும், 2022, ஜனவரி 9-ம் தேதி பணிகள் முடிந்துவிட்டதாகவும், தணிக்கையானது எல்.எஃப் ஆடிட் மூலமாகச் செய்யப்பட்டிருப்பதாகவும்’ தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கட்டாத கால்வாய்க்கு கணக்கு காட்டியிருப்பதைப் பார்த்து, நாங்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறோம். மேலும், இந்த விவரங்களின்படி, எங்கள் பகுதியில் கட்டப்பட்ட கால்வாய் காணாமல்போய்விட்டதாகத்தான் கருதவேண்டியிருக்கிறது. இதில் தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை மேற்கொள்வதோடு, எங்கள் பகுதிக்குக் கழிவுநீர்க் கால்வாயை கட்டித்தர வேண்டும்’’ எனக் கூறியிருக்கிறார்கள்.

மேயர் சுஜாதா
மேயர் சுஜாதா

இந்த மனு மீது விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாநகராட்சி ஆணையர் அசோக்குமாருக்கு உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன். இன்று மதியம், குறிப்பிட்ட அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘‘இது சம்பந்தமாக ஆய்வுக் கூட்டம் போட்டு, பின்னர் பிரஸ் ரிலீஸ் வெளியிடுகிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இது தொடர்பாக, விளக்கம் பெறுவதற்காக மேயர் சுஜாதாவை செல்போனில் தொடர்புகொண்டோம், அவர் போனை எடுக்கவில்லை.