நாட்டில் 500 ரூபாய் நோட்டுகளைவிட, 2000 ரூபாய் நோட்டுகள் தான் புழக்கத்தில் உள்ளது என்றும், ரிசர்வ் வங்கி கணக்கின்படி ரூ.27.05 லட்சம் கோடி 2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சரி இது குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள் என விசாரித்தோம்.

* எதுக்காக அடிச்சாங்க 2,000 ரூபாய் நோட்டு?
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக `பணமதிப்பிழப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் 2016 டிசம்பரில், 500 மற்றும் 1000 ரூபாய்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 20, 50, 100 மற்றும் 2000 எனப் புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இது மத்திய அரசாங்கம் சொல்லும் காரணம்.
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என மக்கள் ஒரு காரணம் சொல்கிறார்கள்.
பிச்சைக்காரன் படத்தில் வரும் காட்சி ஒன்றில், இந்தியாவில் வறுமையை ஒழிக்க உங்க ஐடியா என்ன என ஒரு பிச்சைக் காரரிடம் கேட்க, `இந்தியாவில் ஏழைகளே இல்லாமல் இருக்க ஒரே வழி, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டு ஒழிக்கிறதுதான். நம்ம நாட்டோட வறுமைக்கு முக்கிய காரணமே லஞ்ச பணம், ஊழல் பணம், வரி கட்டாம தப்பா ஏமாத்துற பணம்தான்…

இப்படி சம்பாதிக்கிறது பதுக்குறது எல்லாமே 500, 1000 ரூபாய்னு பெரிய நோட்டைதான். 1000 ரூபாய் நோட்டா இருந்தா 100 கோடி ரூபாயைகூட பெரிய இரண்டு சூட்கேஸ்ல பதுக்கிடலாம். அதே 100, 50 ரூபாயாக இருந்தா பெரிய வீடே தேவைப்படும்’னு சொல்லுவார்.
இந்த ஐடியாவை சரியா புரிந்துகொண்ட மோடி அரசு, இதை உல்டா பண்ண ஆரம்பிச்சாங்க. 10, 20, 50, 100, 2,000 என புதிய நோட்டுகளை அச்சடிச்சாங்க. இதுல 10, 20, 50, 100, 200 ரூபாய் நோட்டுகள் எல்லாம் ஏழை மக்களுக்கானது. ஆனால், 2000 ரூபாய் நோட்டு இருக்கு பாருங்க, அதுதான் யாருக்குனு தெரியல…
* 2,000 ரூபாய் நோட்டை கடைசியாக எப்போது பார்த்தீங்க?
ரிசர்வ் வங்கி கணக்கின்படி ரூ. 27.05 லட்சம் கோடி அளவுக்கு 2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. அப்போ இவ்ளோ நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறது என்றால், மக்களிடம் தான் இருக்க வேண்டும்.
ஆனால் மக்கள் சொல்லும் பதிலோ, `பணமதிப்பிழப்பு நடவடிக்கை அப்போ பார்த்தது… அங்கொன்னு இங்கொன்னு என ரெண்டு வருஷத்துக்கு முன்னே பார்த்து இருக்கேன்… ஏடிஎம்-ல வந்துட்டு இருந்தது, இப்போலாம் ஏடிஎம்லயும் வர்றதில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் பார்த்தேன்.’
நிஜமா சொல்லணும்னா `2000 ரூபாய் நோட்டு கடல்லயே இல்லையாம்’!

* யார் கிட்டதான் இருக்கு 2000 ரூபாய் நோட்டு?
எதுக்காக அடிச்சாங்களோ, யாருக்காக அடிச்சாங்களோ அவங்க கிட்டதான் இருக்கும். 2000 ரூபாய் நோட்டு மக்களிடம் புழக்கத்தில் இல்லை; இருக்க வேண்டியவர்களிடம் புழுக்கத்தில் உள்ளது.
அதாங்க யார் கிட்ட இருக்கு… புரிஞ்சவன் பிஸ்தாங்க!
* 2,000 ரூபாய் நோட்டை மீண்டும் பார்க்க முடியும்னு நினைக்கிறீங்களா?
கண்டிப்பாக பார்க்க முடியும்… எப்படி? ஒண்ணுமில்லைங்க 2,000 ரூபாய் நோட்டு செல்லாது அப்படினு சும்மா ஒரு பொய்யை சொல்லச் சொல்லுங்க. பூரா பயலும் வெளிய எடுப்பாங்க. மக்கள் ஆசை தீர அந்த நோட்டை கண்ணால பார்க்கலாம்.
* இந்த விஷயத்துல அரசின் மீது மனவருத்தம் உண்டா?
அரசு மக்களின் நல்லதுக்கு என அறிவித்து செய்கிற பல விஷயங்கள் தங்களுக்கு சாதகமானதாகதான் செய்து கொள்கிறது. கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டால், உழைத்தவர்கள் தெருவில் நின்றார்’ அவ்வளவுதான்!
2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதா, உங்களின் கருத்து என்ன..?