Published:Updated:

`கொலையான பணிப்பெண் குடும்பத்தைச் சந்திக்காத மு.க.ஸ்டாலின்!' - பொதுமக்கள் அதிருப்தி

பி.ஆண்டனிராஜ்
எல்.ராஜேந்திரன்

நெல்லையில், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் படுகொலையான சம்பவத்துக்கு துக்கம் விசாரிக்க வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பணிப்பெண் குடும்பத்தினரைச் சந்திக்காமல் சென்றதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மாரியின் வீடு
மாரியின் வீடு

நெல்லையின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் ஜூலை 23-ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். வீட்டுக்குள் நுழைந்த மர்மக் கும்பல், மூவரையும் கம்பியால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்தது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகை மற்றும் பணத்துக்காக இந்தக் கொலை நடந்ததா அல்லது சொத்துப் பிரச்னை காரணமாக நடந்ததா என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் உள்ளிட்ட ஏழு பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

மாரி
மாரி

கொலையான உமா மகேஸ்வரி, தி.மு.க-வின் சார்பாக நெல்லை மாநகராட்சி மேயராக இருந்தவர். கட்சியின் மகளிரணியில் பொறுப்பு வகித்தவர். தி.மு.க சார்பாக ஆண்டுதோறும் நடத்தப்படும் முப்பெரும் விழாவில், கலைஞரிடம் இருந்து 'பாரதிதாசன்' விருது பெற்றவர். கட்சியின் மூத்த நிர்வாகி என்பதால், உமா மகேஸ்வரி மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளிட்டார். அத்துடன், கொலைக் குற்றவாளிகளைக் கைதுசெய்யவும் வலியுறுத்தினார். இந்த நிலையில், உமா மகேஸ்வரி குடும்பத்தினரை நேரில் சந்தித்து துக்கம் விசாரித்த ஸ்டாலின், உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகசங்கரன் ஆகியோரின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆனால், இதே சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரி குடும்பத்தினரைச் சந்திக்க அவர் செல்லவில்லை.

`தனித்தனி ரூம்; தலையில் வெட்டு' - நெல்லையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட முன்னாள் பெண் மேயர்!

இதுகுறித்து மாரியின் உறவினர்கள் பேசுகையில், "முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவரைக் கொலை செய்த கும்பல், வீட்டில் வேலை செய்த மாரியையும் கம்பியால் தலையில் அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டது. உயிரிழந்த மாரியின் கணவர் இறந்துவிட்டார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த மகள் அஷ்டலட்சுமி 12-ம் வகுப்பு படிக்கிறார். அடுத்தவரான ஜோதிலட்சுமி 10-ம் வகுப்பும் கடைசிப் பெண்ணான ராஜேஸ்வரி 8-ம் வகுப்பும் படிக்கின்றனர். இந்தப் பெண்களைப் படிக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே மாரி, வீட்டு வேலைக்குச் சென்று வந்தார். மாரியின் தாய் வசந்தி. அவர், 62 வயது நிரம்பிய தந்தை ராமச்சந்திரனுடன் வசித்து வருகிறார். வேலைக்குச் சென்ற இடத்தில் மாரி கொலை செய்யப்பட்டதால், அவருடைய மூன்று குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது.

மாரி குடும்பத்தினர்
மாரி குடும்பத்தினர்

கொலையான உமா மகேஸ்வரியின் வீட்டுக்கு அருகிலேயே மாரியின் வீடும் இருக்கிறது. ஆனால், தி.மு.க-வினர் யாரும் அவருடைய வீட்டுக்குச் சென்று அந்தக் குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை. கட்சிக்காரர்கள் எல்லோரும் உமா மகேஸ்வரி வீட்டுக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால், எந்தச் சம்பந்தமும் இல்லாமல் உயிரிழந்தவரின் வீடு பக்கத்திலேயே இருக்கும்போது அங்கும் சென்று ஒரு வார்த்தை துக்கம் விசாரித்திருக்கலாம். இதுவே, தேர்தல் காலமாக இருந்திருந்தால் இப்படிப் போயிருப்பாரா? தமிழக அரசாவது இந்தப் பிரச்னையில் சிறப்புக் கவனம் செலுத்தி, கொல்லப்பட்ட அப்பாவியான மாரியின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்'' என்றனர் வேதனையுடன்.