Published:Updated:

ஜம்மு-காஷ்மீரில் தளர்த்தப்படும் விதிகள்; `ஓராண்டு வசித்தால் வாக்குரிமை!'- தேர்தல் ஆணையம் சொல்வதென்ன?

காஷ்மீர்

`ஓராண்டு ஜம்மு-காஷ்மீரில் இருந்தால் போதும், அவர்கள் ஓட்டுப் போடும் உரிமையைப் பெற முடியும்' என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

ஜம்மு-காஷ்மீரில் தளர்த்தப்படும் விதிகள்; `ஓராண்டு வசித்தால் வாக்குரிமை!'- தேர்தல் ஆணையம் சொல்வதென்ன?

`ஓராண்டு ஜம்மு-காஷ்மீரில் இருந்தால் போதும், அவர்கள் ஓட்டுப் போடும் உரிமையைப் பெற முடியும்' என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

Published:Updated:
காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைப்பெற்றது. அதன்பிறகு அரங்கேறிய பல அரசியல் நிகழ்வுகளுக்குப் பின்னர், வரும் 2023-ம் ஆண்டு மீண்டும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டவிதி 370 நீக்கியப் பின்னர் நடைப்பெறுவதால், காஷ்மீரின் மக்களை எந்தக் கட்சி ஆளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரையும் தொற்றியிருக்கிறது.

2014-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க- முஃப்தி முகமது சையது தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் முஃப்தி முகமது சையது மறைவுக்குப் பின்னர், சில குழப்பங்களை கடந்து முஃப்தி முகமதின் மகள் மெஹபூபா முஃப்தி தலைமையில் பா.ஜ.க-வின் கூட்டணியில் ஆட்சி அமைக்கப்பட்டது. அந்தக் கூட்டணியும் 2018-ம் ஆண்டு கருத்துவேறுபாடுகள் காரணமாக முறிக்கப்பட்டு, மெஹபூபா முஃப்தி அரசு கவிழ்க்கப்பட்டது.

மெகபூபா முஃப்தி
மெகபூபா முஃப்தி

அதன்பின்னர், 2019-ம் ஆண்டு மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப்பெற்றது. இதனால் ஜம்மு-காஷ்மீர் மக்களால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது மத்திய பா.ஜ.க அரசு மக்களின் போராட்டத்தை ஒடுக்கி அரசியலைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக, மக்களின் போராட்டத்தை தடுக்க 144 தடை உத்தரவு, இணைய சேவை துண்டிப்பு, தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலை மக்களிடையே உருவாகி தற்போதும் அங்கு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான், நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ``ஒருபக்கம் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலில் வாக்குகளை அள்ள வியூகம் வகுத்துக் கொண்டிருக்க... பா.ஜ.க அரசோ, வாக்காளர்களையே அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் `ஓராண்டு ஜம்மு-காஷ்மீரில் இருந்தால் போதும், அவர்கள் ஓட்டுப் போடும் உரிமையைப் பெற முடியும்' என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது" என்கிறார்கள் தேசிய அரசியலை உற்று நோக்குபவர்கள்.

இதற்கான அறிவிப்பு கடந்த செவ்வாய்கிழமை வெளியானது. அதன்படி, ``ஜம்மு-காஷ்மீரில் ஓராண்டுக்கு மேல் வசிப்பவராக இருந்தால் ஆதார், தண்ணீர் மற்றும் காஸ் இணைப்பு ரசீதுகள், சொந்த வீட்டின் பத்திரம், வாடகை வீட்டின் குத்தகை பத்திரம், வங்கி அல்லது போஸ்ட் ஆஃபிஸ் கணக்கின் விவரம், பாஸ்போர்ட் நகல் ஆகிய ஆவணங்கள் மூலம் வாக்குரிமையை பெறலாம். இந்த ஆவணங்களை தாசில்தார் அல்லது வருவாய் அலுவலர்கள் உறுதி செய்தபின்னர் இருப்பிடச் சான்றைப் பெற்று வாக்காளர் அட்டையை பதிவுசெய்து கொள்ளலாம்" என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். இதனால் ஜம்மு-காஷ்மீரைச் சேராத பன்னிரண்டு லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

காஷ்மீர்
காஷ்மீர்

சட்டப்பிரிவு 370 திரும்பப் பெற்ற பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும்... ராஜஸ்தான், கர்நாடகா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இனி தேர்தல் நடக்கவிருப்பதாலும் ஜம்மு-காஷ்மீரின் வெற்றி அரசியல் கட்சிகளுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஜம்மு-காஷ்மீர் இடையே மத மற்றும் பிராந்திய பிளவுகளை உருவாக்கும் பா.ஜ.க-வின் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும். காஷ்மீரியாக இருந்தாலும் சரி, டோக்ராவாக இருந்தாலும் சரி, நமது அடையாளத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க நாம் கூட்டுப் போராட்டத்தை நடத்தினால் மட்டுமே சாத்தியமாகும். புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய உத்தரவு, ஜம்முவில் மத்திய அரசின் `காலனித்துவ குடியேற்றத் திட்டம்' தொடங்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது" என இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.