Published:Updated:

திண்டுக்கல்: உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள் - புலம்பிய மக்கள்!

உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல்லில் கொரோனா மற்றும் தேர்தல் விதிமுறைகளை எதையும் பின்பற்றாமல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்: உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள் - புலம்பிய மக்கள்!

திண்டுக்கல்லில் கொரோனா மற்றும் தேர்தல் விதிமுறைகளை எதையும் பின்பற்றாமல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ம் தேதி நடக்கவுள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரம்
பிரசாரம்

அப்போது பேசிய அவர், ``கொரோனா இரண்டாம் அலை மிகவும் அதிகமாக இருந்தவேளையில், மிகவும் நெருக்கடியான காலத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது. கடந்த 9 மாதங்களில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளோம். இதனால்தான் மூன்றாவது அலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா முதலாம் அலையின் போது அ.தி.மு.க அரசு ஒரு கோடி பேருக்கு மட்டும் தடுப்பூசி போட்டிருந்தது. பெரும் சிரமத்துக்கு இடையே கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்துக்கு 4 ஆயிரும் ரூபாய் வழங்கினோம்" எனப் பேசினார்.

கூட்டம்
கூட்டம்

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மார்ச் 2-ம் தேதி வரை முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், அரசியல் கூட்டங்களுக்கு தடை, திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 200 பேருக்கு மட்டும் அனுமதி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி போன்ற கட்டுபாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வேட்பாளர்கள்
வேட்பாளர்கள்

ஆனால், திண்டுக்கல்லில் கொரோனா மற்றும் தேர்தல் விதிமுறைகளை எதையும் பின்பற்றாமல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே மேடை அமைத்து அதில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். உதயநிதி ஸ்டாலின் வருகை தரும் பிரசாரக் கூட்டத்தில் மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காக மக்கள் மாஸ்க் இன்றி நிரம்பி வழிந்தனர். இந்தக் கூட்டத்துக்கு மாநகராட்சி எல்லைக்கு வெளியே உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களை வாகனங்களில் ஏற்றிவந்து மதியம் 1 மணி முதல் சாலையோரங்களில் காத்திருக்க வைத்தனர். ஆனால், உதயநிதி ஸ்டாலினோ மாலை 5.30 மணிக்கு தான் வந்தார். அவர் அறிமுகப்படுத்திய வேட்பாளர்களும் ஆரம்பம் முதல் முடிவு வரை மாஸ்க் போடாமலே மேடையில் குழுமியிருந்தனர்.

கொடிக்கம்பங்கள்
கொடிக்கம்பங்கள்

கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலையின் நடுவே அ.தி.மு.க பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இதற்கு அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க-வினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது மட்டுமல்லாமல், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், தான் செல்லுமிடங்களில் பிராமண்ட வரவேற்பு தேவையில்லை என அறிக்கைவிட்டார்.

இடையூறு
இடையூறு

ஆனால், கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணொலி வாயிலாக மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டதற்கு திண்டுக்கல் நகர் முழுவதும் பேனர்களும், கொடிக்கம்பங்களும் நடப்பட்டன. இந்த நிலையில், அவர் மகன் உதயநிதி ஸ்டாலின் வருகைக்கு நகரின் அனைத்து பகுதிகளிலும் சாலையின் நடுவிலும், ஓரங்களிலும் கொடிக்கம்பங்களை நட்டிருந்தனர். இந்தக் கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையிலேயே நடப்பட்டிருந்தால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். மேலும், கொடிக்கம்பங்கள் பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூராக அமைந்தன. கொடிக் கம்பங்களை நடுவதற்காக பல்வேறு பகுதிகளில் தார் சாலைகளும், தண்ணீர் குழாய்களும் சேதப்படுத்தப்பட்டன.

``கொரோனாவைக் கட்டுப்படுத்தியது குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்வதை மறந்துவிட்டார். அதேபோல தேர்தல் விதிமுறைகளையும் தனது கட்சி கொடி போல காற்றில் பறக்கவிடுகிறார்" என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.