Published:Updated:

`3 பேர் சேர்ந்து நடத்தும் கூட்டுச்சதி இது’ -பேரணாம்பட்டு பேருந்துநிலைய சர்ச்சையில் அமைச்சர் வீரமணி

பேரணாம்பட்டு பேருந்துநிலையம்
பேரணாம்பட்டு பேருந்துநிலையம்

`ரியல் எஸ்டேட் அதிபர்களின் கைக்கூலிகளாக ஆளும்கட்சி பிரமுகர்கள் செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது, நகராட்சி பேருந்து நிலையம். இதன் வழியாகச் சென்னை, வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தவிர, பேரணாம்பட்டைச் சுற்றியுள்ள கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காகவும் நேரத்துக்கு ஏற்ப உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. பேருந்து நிலையம் அருகில் காவல் நிலையமும் தினசரி காய்கறிச் சந்தையும் உள்ளன. சுற்றுவட்டார விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவிக்கும் காய்கறிகளை தினமும் மூட்டைகளில் கட்டி பேருந்துகள் மூலம் கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள்.

பேரணாம்பட்டு பேருந்து நிலையம்
பேரணாம்பட்டு பேருந்து நிலையம்

இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படுகிறது. இந்த நிலையில், பாதுகாப்பாகவும் வசதி நிறைந்ததாகவும் உள்ள பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பங்களாமேடு பகுதியில் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரின் பினாமிகளாக உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களின் திட்டத்தின் அடிப்படையில் பேருந்து நிலையம் மாற்றப்படுவதாகக் கொந்தளிக்கிறார்கள், பேரணாம்பட்டு மக்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய பேரணாம்பட்டு நகரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுரேஷ்குமார், ``நகரின் மையப்பகுதியில்தான் பேருந்துநிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

அனைத்துத் தரப்பு மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். நகரைவிட்டு வெகுதூரத்தில் விற்பனையாகாத வீட்டுமனைப் பிரிவுகள் உள்ளன. அதை யாரும் வாங்க வராததால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மூன்று பேர் பேருந்து நிலையத்துக்காக ஒரு ஏக்கர் நிலத்தைத் தானமாக கொடுத்தனர். இதில், பெரிய கூட்டுச்சதி நடந்திருக்கிறது.

விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலிருந்து 400 மீட்டர் உள்ளே வீட்டுமனைப் பிரிவின் இறுதியில் அந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பேருந்து நிலையத்தை மாற்றுவதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையெல்லாம் ஆளுங்கட்சியினரும் அதிகாரிகளும் பரிசீலனை செய்ய முன்வரவில்லை.

பேருந்து நிலையம் இடமாற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட ரியல் எஸ்டேட் இடம்.
பேருந்து நிலையம் இடமாற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட ரியல் எஸ்டேட் இடம்.

பணத்துக்கு ஆசைப்பட்டு அவர்கள் பேருந்து நிலையத்தை இட மாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலைய இடமாற்றத்தைக் கைவிட வலியுறுத்தி ‘பேருந்து நிலைய மீட்புக்குழு’ உருவாக்கப்பட்டுள்ளது.

ஆளும்கட்சியைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் மீட்புக்குழுவில் இடம்பெற்றுள்ளன. போராட்டக் குழுவினர் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி 19 முறை போராட்டம் நடத்திவிட்டனர். ஆனாலும், மாவட்ட நிர்வாகம் விடாப்பிடியாகத் திட்டத்தைச் செயல்படுத்த முனைகிறது. ஆள்நடமாட்டம் இல்லாத அந்தப் புதிய இடத்தில் பேருந்து நிலையம் மாற்றப்பட்டால் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. இரவு நேரத்தில் பயணிகளின் உடைமைகளும் திருடு போகும்.

வியாபாரிகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். விவசாயிகள் காய்கறி மூட்டைகளைச் சந்தைக்குக் கொண்டுவருவதற்குச் சிரமப்படுவார்கள். புதிய பேருந்து நிலையத்துக்கான அரசாணை இன்னும் வரவில்லை. அதற்குள் ஆளுங்கட்சியினர் சிலர் அந்த இடத்தில் பூமி பூஜை போட்டு கொண்டாடுகிறார்கள். மக்களின் வாழ்வாதாரத்தைக் காட்டிலும் அவர்களுக்குப் பணம் பெரியதாக இருக்கிறது.

இப்போதுள்ள பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் கிடையாது. நான்கு பேருந்துகளுக்கு மேல் ஒரே நேரத்தில் நிற்பதுமில்லை. அருகில் உள்ள காவல் நிலைய கட்டடம் கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. பொதுப்பணித்துறை விதிகளின்படி பாழடைந்த காவல் நிலைய கட்டடம் இடித்து அகற்றப்பட வேண்டும்.

பேருந்து நிலையம் இடமாற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட ரியல் எஸ்டேட் இடம்.
பேருந்து நிலையம் இடமாற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட ரியல் எஸ்டேட் இடம்.

அப்படிச் செய்தால் அந்த இடத்தில் இப்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம். அருகிலேயே ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில், காவல் நிலையத்துக்குப் புதிய கட்டடம் கட்டிக்கொள்ளலாம். இதையெல்லாம் தவிர்க்கும்பட்சத்தில் நகருக்குள் இன்னும் நிறைய இடங்கள் உள்ளன. அங்கு வேண்டுமானால் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யலாம்.

அதைவிடுத்து, ரியல் எஸ்டேட் இடத்தில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யக் கூடாது. மாவட்ட நிர்வாகம் மக்களின் நலனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில், மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். ஆளுங்கட்சியினரின் மக்கள் விரோதச் செயலுக்கு முடிவுகட்டும் நாள் விரைவில் வரும்’’ என்றார் காட்டமாக.

ரியல் எஸ்டேட் அதிபர்களின் பின்னணியில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கே.சி.வீரமணியிடம் விளக்கம் கேட்டோம். `` பேரணாம்பட்டு நகருக்குள் இடமே இல்லை. இந்த காலத்தில் நிலத்தை யாரும் இனாமாகக் கொடுக்க முன்வரமாட்டார்கள். இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். அப்படியிருக்கப் பேருந்து நிலையத்துக்காகச் சிலர் நிலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். நகராட்சி எல்லைக்குள்தான் அந்த இடமும் அமைந்திருக்கிறது. இப்போதைய பேருந்து நிலையத்தை எதுவும் செய்ய போவதில்லை. புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பிறகு இங்கேயும் பேருந்துகள் வழக்கம்போல் நின்று செல்லும். காவல் நிலையத்தை இடித்து பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது சாத்தியமில்லை.

அமைச்சர் கே.சி.வீரமணி
அமைச்சர் கே.சி.வீரமணி

பேருந்து நிலையம் கொஞ்சம் வெளியில் அமைக்கும்போது அந்த பகுதியும் வளர்ச்சி பெறும். யாராவது எதையாவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வது நல்ல காரணத்திற்காகத் தான்" என்றவரிடம்,

``பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுவிட்டதா... ஆளுங்கட்சியினர் சிலர் அந்த இடத்தில் பூமி பூஜை நடத்தியிருப்பதாகத் தகவல் வருகிறதே" என்றோம். `` அரசாணை வந்துவிட்டதா என்று தெரியவில்லை. என்னை அழைக்காமல் பூமி பூஜை நடத்துவதற்கு வாய்ப்பில்லை" என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு