Published:Updated:

`பா.ஜ.க-வை எதிர்ப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்!’ - ஷரத் பவார் பேச்சு

ஷரத் பவார்
ஷரத் பவார்

``சிறுபான்மை சமூகத்தினர், நீங்கள் சிவசேனாவுடன் வேண்டுமானால் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், பா.ஜ.க-விடமிருந்து விலகி இருங்கள் என்று எங்களிடம் கூறினர்” என ஷரத் பவார் பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில், நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க மற்றும் சிவசேனா கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் பதவி தொடர்பாக இருகட்சிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்தது. பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை அமைத்தது.

உறுப்பினர்கள்
உறுப்பினர்கள்

சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இந்நிலையில், முன்னாள் முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஷரத் பவார் பா.ஜ.க-வை விமர்சித்தும் கூட்டணி குறித்தும் இன்று பேசியுள்ளார்.

மும்பையிலுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடந்த சிறுபான்மை பிரிவினர் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் அவர் பேசியபோது, ``மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை. பா.ஜ.க-வுக்கு எதிராகக் களத்தில் நின்ற கட்சிகளுக்கே வாக்களித்தனர். தேர்தலின்போது சிறுபான்மையினர்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என முடிவு செய்வார்கள். பா.ஜ.க-வினர் சமுதாயத்தை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துகிறார்கள். அவர்களுடைய அரசாங்கம் ஆபத்தானது” என்றார்.

ஷரத் பவார்
ஷரத் பவார்

தொடர்ந்து பேசிய அவர், ``சிறுபான்மை சமூகத்தினர், நீங்கள் சிவசேனாவுடன் வேண்டுமானால் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், பா.ஜ.க-விடமிருந்து விலகி இருங்கள் என்று எங்களிடம் கூறினர். நம் நாட்டின் ஒற்றுமை உடைக்க விரும்பும் மக்களிடமிருந்து நாம் விலகி இருக்க வேண்டும். ராஜஸ்தானும் மத்தியப் பிரதேசமும் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. அதே நிலைமை டெல்லியிலும் ஏற்படும். நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்” என்றும் பேசியுள்ளார்.

பின் செல்ல