Published:Updated:

புதுச்சேரி: `இந்த ஆட்சிக் கவிழ்ப்பு தமிழகத்துக்கான சிக்னல்!’ - திருமாவளவன் காட்டம்

திருமாவளவன்
திருமாவளவன்

இந்திய நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ.க சிதைத்து, சாதிவெறியைத் தூண்டுகிறது. ஜனநாயகத்தைப் படுகொலை செய்கிறது. எதை வேண்டுமானாலும் செய்வோம், எங்களை யார் என்ன செய்ய முடியும் என்றரீதியில் அருவருப்பான செயல்களில் பா.ஜ.க ஈடுபடுகிறது என புதுச்சேரியில் திருமாவளவன் பேசினார்.

புதுச்சேரி காங்கிரஸ்-தி.மு.க ஆட்சியைத் திட்டமிட்டு கலைத்து பா.ஜ.க ஜனநாயகப் படுகொலை செய்ததாக, மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியிருக்கிறார். அவரது உரையில், ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முதல்வர் நாராயணசாமி வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்து அநாகரிக அரசியலை அரங்கேற்றிவருகிறது. பா.ஜ.க-வின் அருவருப்பான, அராஜகமான, கேவலமான அரசியலை நாராயணசாமி எடுத்துரைத்தார்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

தேசத்தைப் பிடித்திருக்கும் பெரும் தீங்கான பா.ஜ.க., கொரோனாவைவிட கொடிய நோய். எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பைச் செய்திருக்கிறார்கள். ஒருவகையில் காங்கிரஸுக்கு பா.ஜ.க நல்லதையே செய்திருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மீண்டும் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். புதுவை மக்களுக்கு நாராயணசாமி என்ன துரோகம் செய்துவிட்டார்... பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்குப் பல திட்டங்களைக் கொண்டுவந்தது துரோகமா... மக்களால் தேர்வுசெய்த அரசைக் கலைக்க இவர்கள் யார்?

பா.ஜ.க-வின் அடாவடி அரசியலுக்கு என்.ஆர்.காங்கிரஸும், அ.தி.மு.க-வும் துணை நின்றிருக்கின்றன. அவர்களையும், ராஜினாமா செய்தவர்களையும் ஓட்டுக் கேட்க வரும்போது வீதிக்குள் நுழையவிடாமல் மக்கள் விரட்டியடிக்க வேண்டும். அவர்கள் காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக்கும் செய்த துரோகத்தைவிட, புதுவை மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்திருக்கிறார்கள். பா.ஜ.க விரித்த வலையில் ஐந்தாறு பேர் சிக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் செய்ய வேண்டும். இந்திய நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ.க சிதைத்து, சாதிவெறியைத் தூண்டுகிறது. ஜனநாயகத்தைப் படுகொலை செய்கிறது.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

எதை வேண்டுமானாலும் செய்வோம், எங்களை யார் என்ன செய்ய முடியும் என்ற அநாகரிகமான, அறுவெறுப்பான செயலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். புதுவை அரசைக் கலைத்திருப்பதன் மூலம் தமிழக மக்களுக்கும் சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க அரசு அமைந்தால் அதையும் கலைக்க முடியும் என எச்சரிக்கைவிடுக்கும் ஒத்திகை என்றுதான் பா.ஜ.க-வின் செயல்களைப் பார்க்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க-வின் கனவு பலிக்காது. சிலர் வேண்டுமானால் பா.ஜ.க-வுக்குத் துணை செல்வார்கள். தி.மு.க தலைமையில், மதச்சார்பற்ற கூட்டணி கைகோத்து நிற்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க-வை ஓட ஓட விரட்டியடிப்போம்.

`நாராயணசாமியின் ஒன்றேகால் மணி நேர உரை; ஆட்சிக் கவிழ்ப்பு!’ புதுச்சேரி சட்டசபையில் என்ன நடந்தது?

தி.மு.க தலைமையிலான கூட்டணி, தமிழகத்தில் மகத்தான வெற்றிபெறும். இது கூட்டணி அரசியல் அல்ல. சமூகநீதியை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும், இந்திய நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் புதுவையில் நடைபெறும் போரட்டங்களில் பங்கேற்றுவருகிறது வி.சி.க. நாராயணசாமி ஆட்சியைப் பறிகொடுத்திருக்கலாம். ஆனால், மிகப்பெரும் வெற்றியை வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி பெறும். தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி அவர்களின் முகத்தில் கரி பூசுவோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு